இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்னாநந்தா [17] ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின்
மயாமியில் நகரில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ
செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 1.6 மில்லியன் டாலர்களை பரிசாக வழங்கும் மெல்ட்வாட்டர்ஸ்
சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது
பெரிய நிகழ்வு இதுவாகும். எட்டு
வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் (ஆல்-பிளே-ஆல்) ஒவ்வொரு
வீரரும் மற்ற 7 வீரர்களுடன் ஒரு
முறை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் வீரர்களுக்கு 7,500 டொலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும்,
போட்டியின் முடிவில் 100,000 டொலர்கள் மதிப்புள்ள பிட்காயின் போனஸாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில்,
எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டி தொடரின்
7வது சுற்றில் உலக சாம்பியனான கார்ல்சனை
தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
போட்டி 2-2 என டிரா ஆன
நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை
வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தா. இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் தொடரின் வெற்றியாளராக மேக்னஸ்
கார்ல்சன் அறிவிக்கப்பட்டார். பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா,
உலகின் நம்பர்.6 வீரரான லெவோன் அரோனியனை
3-1 என்ற கணக்கில் வீழ்த்திய அபார வெற்றி உட்பட
நான்கு தொடர்ச்சியான வெற்றிகளுடன் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றார். அதன்பிறகு, அலிரேசா ஃபிரோஸ்ஜாவுக்கு எதிரான
வெற்றியுடன் அவர் தனது அதிரடி
ஆட்டத்தையும் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து நடந்த
ஆட்டங்களில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான
அனிஷ் கிரி மற்றும் ஹான்ஸ்
நீமன் ஆகியோரையும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.
எனினும்,
ஐந்தாவது சுற்றில் சீனாவின் குவாங் லீம் லீயின்
கைகளில் பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
ஆறாவது சுற்றில் டை-பிரேக் மூலம்
போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவிடம்
தோல்வியடைந்த பிறகு அவர் தொடரில்
தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தார்.
இந்த ஆண்டு பெப்ரவரியில், ஆன்லைன்
சம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா
உலகின் நம்பர் 1 கார்ல்சனை வீழ்த்தி பாராட்டுகளைப் பெற்றார். 2016 ஆம் ஆண்டில் 10 வயதில்
வரலாற்றில் இளைய சர்வதேச மாஸ்டர்
ஆன 16 வயதான பிரக்னாநந்தா, ஏர்திங்ஸ்
மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில்
கார்ல்சனை வீழ்த்தினார்.
இந்த ஆண்டு மே மாதம், செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார். தற்போது அவர் மேக்னஸ் கார்ல்சனை கிரிப்டோ செஸ் தொடரிலும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், 17 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்னாநந்தா வெறும் ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment