கோட்டாபய பதவியைத் துறந்து ரணில் ஜனாதிபதியாகி ஒரு மாதம் கடந்துவிட்டது. ஒரு மாதத்தில் அவசர அவசரமாக அமைச்சரவை தெரிவு செய்யப்பட்டது. சகல கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ராஜபக்ஷக்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ரணிலுக்கு எதிரான போராட்டம் அப்படியே அடங்கிப் போனது.
உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எதிர் பார்க்காத மாற்றத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் தொலைக் காட்சித் தொடர்களில் காட்சிப்படுத்தப்படுவதுபோல இவருக்குப் பதில் இவர் என்ற கோட்பாட்டுடன் அரச இயந்திரம் நகர்கிறது.போராட்டத்துக்கு முன்னிலை வகித்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், பொதுமக்கள் நிறைந்துள்ள இடங்களில் துல்லியமான துப்பாக்கிச் சூட்டில் சிலர் இலக்கு வைத்து கொல்லப்படுகிறார்கள், சிலர் காணாமல் போகிறார்கள், கடத்தப்படுகிறார்கள், பிணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன, போராட்டக்காரர்கள் மீது தடியடி நிர்த்தாரை பிரயோகிக்கப்படுகிறது.
ஆட்சி மாற்றத்தின் மூலம் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டபோதும் போதிலும், இலங்கைத் தீவில் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அமைச்சரவையில்
பழைய முகங்களே மதிப்புமிக்க இலாகாக்களை வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால்,
தற்போதுள்ள நடை முறைகள் மாற்றப்பட வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடும், விலை
ஏற்றமும் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன.
எரிபொருளுக்கன வரிசை குறைந்து விட்டது. விவசாயத்துக்கும், மீன் பிடிக்கும் தேவையான
மண்ணெண்ணெயைக் கண்டு கனகாலமாகிவிட்டது.
ஒரு மாதத்தினுள் அவை எல்லாவற்றையும் மாற்ற முடியாது. ஆனா ல், மாற்றுவதற்கான ஏற்பாடு எதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு பெரும் தலையிடியைக்கொடுத்துள்ளது. கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த போது சீனக் கப்பலுக்குக் கொடுத்த அனுமதியால் ரணிலின் தலை புரள்கிறது. இலங்கையின் இறையாண்மையை உலக வல்லரசுகள் உரசிப் பார்க்கின்றன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு
உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும். காசு, பணம்,
துட்டு, மணி இருந்தால் தான் இலங்கை மீட்சிபெற
முடியும். உலக நாடுகள் கைவிரித்துவிட்டன. இந்தியா
தேவைக்கு மேல் உதவி செய்தது. சீனாவின் கப்பல் இலங்கையில் தரித்து நிற்பதால்
இந்தியாவின் பிடி இறுகும் நிலை உள்ளது.
மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு
இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, சீனா , இந்தியா உள்ளிட்ட
இந்து சமுத்திர தீவின் முக்கிய கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கேட்கும்
என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராய்ட்டர்ஸுக்கு
அளித்த பேட்டியில் கூறினார், அடுத்த மாதம் டோக்கியோவிற்கு சென்று பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை
சந்திப்பார் அப்போது இது தொடர்பாக அவர் கலந்துரையாடுவார்.
கொழும்பை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கியான CAL குழுமத்தின் தலைமை மூலோபாய நிபுணர் உதீஷன் ஜோனாஸ், மறுசீரமைப்புத் திட்டமொன்று ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், ஜப்பானுக்கு விக்கிரமசிங்கவின் வருகை கூடுதல் நிதியைப் பெற உதவும் என்றார்."குவாட் நாடுகளில் ஒன்றாக, ஜப்பான் இந்தியாவையும் மற்ற முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களையும் ஒன்றிணைக்க முடியும், மேலும் கடனின் பெரும்பகுதியை ஈடுசெய்யும் மறுசீரமைப்புத் திட்டத்தில் இலங்கை பணியாற்ற முடியும்" என்று ஜோனாஸ் கூறினார். அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா , இந்தியாஆகியன ஒரு முறமாகவிம் சீனா மட்டுமே மறுபுறம் இருக்கும்," என்று அவர் கூறினார்.சீனாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இதுவரை அவை சாதகமாகவே இருந்ததாகவும் விக்கிரமசிங்க கூறினார்.
இலங்கையின் மொத்த இருதரப்புக்
கடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 6.2 பில்லியன் டொலர்களாக IMF மதிப்பிட்டுள்ளது, மார்ச் அறிக்கையின்படி, ஜப்பான்
மற்றும் சீனா மிகப்பெரிய பங்குகளை வைத்துள்ளன.இந்த ஆண்டு மட்டும், இலங்கையின் பொருளாதாரத்தை
நிலைநிறுத்துவதற்கு இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கை தனது நட்பு நாடுகளின் உதவியை நாடுவதைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) 2 பில்லியன் டொலர் முதல் 3 பில்லியன் டொலர் வரை மதிப்புள்ள கடன் பொதிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று ஜனாதிபதி ரணில் கூறினார்.
இந்த ஏற்பாடுகள்
எல்லாம் ஒரு நேர்கோட்டில் வந்தால் இலங்கை
சுபீட்சம் பெறும் அதுவும் உடனடியாக அல்ல. சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆட்சியைக் கொண்டு
செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விரும்புகிறார். அவரை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என சிலர் காய் நகர்த்துகிறார்கள்.
இந்த இரண்டரை வருடங்களில் மக்களின் மனதில்
இடம் பிடித்து ஐக்கிய தேசியக் கட்சி அரசை ஆட்சி
பீடத்தில் அமர்த்த வேண்டும் என ரணில் விரும்புகிறார். அதேவேளை அடுத்த ஜனாதிபதித்
தேர்தலில் வெற்றி பெற என்பதே ஜனாதிபதி ரணிலின்
குறிக்கோள்.
மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறினால்
ரணிலின் விருப்பமும் நிறைவேறும்.
No comments:
Post a Comment