இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக இந்தியாவும், சீனாவும் போட்டி போட்டு உதவி செய்தன. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பகையை மூலதனமாக்கிய இலங்கை கனகச்சிதமாக காய் நகர்த்தி இரண்டு நாடுகளையும் திருப்திப்படுத்த முயற்சித்தது. கடனுக்கு மேல் கடன் வாங்கி பொருளதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது இலங்கை.
சீனாவின் நிழலிலிருந்து விலகிய இலங்கை, இந்தியாவிடம் இருந்து அதிக உதவிகளை எதிர் பார்க்கிறது. இலங்கையைத் தனது பிடியில் வைத்திருபதற்காக இலங்கைக்கு வேண்டிய உதவிகளை இந்தியா செய்கிறது.
அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, 4 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி மற்றும் பொருள்
உதவி செய்து, தாம் எப்போதுமே சிறந்த நண்பன்
என்பதை நிருபித்து இருக்கிறது இந்தியா. இந்தியாவிலிருந்து தமிழகம் வேறு, தமது தாய்
வழி சொந்தங்களுக்காக, கப்பல்களில் நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது.
மற்றொரு பக்கத்தில், அளவுக்கு மீறி கடனைக் கொடுத்தது மட்டும் இல்லாமல், கந்துவட்டிக்காரனை
மிஞ்சும் வகையில், அசலையும் வட்டியையும் கேட்டு தொடர்ந்து இலங்கையை மிரட்டி வருகிறது
சீனா.
இந்தியாவா, சீனாவா என்ற கேள்வி எழும்போது சீனாவின் பக்கம் சாய்வது இலங்கைக்கு கைவந்தகலை. இப்போதும் சீனாவின் உளவுக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் தங்கி ஆராய்ச்சி செய்யப்போகிறது. சீனாவின் அதிநவீன உளவுக்கப்பல்களில் ஒன்று, யுவான் வாங் 5. இந்தக் கப்பல், இருந்த இடத்தில் இருந்தே, தம்மைச்சுற்றியுள்ள 800 கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள அனைத்தையும் கடலுக்கு அடியில் இருந்து வானில் சுற்றும் செயற்கைக்கோள் வரை அனைத்தையும் உளவு பார்க்கக்கூடிய திறன் கொண்டது. இந்தக் கப்பல்தான், தற்போது இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் சீனாவின் இந்த உளவுக் கப்பல், வரும் 11-ம் திகதி
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, சுமார் ஒரு வாரம்,அதாவது 17-ம் திகதி
வரை அதே இடத்தில் இருந்து ஆய்வுகள் செய்யப்போகிறதாம். இந்தியப்பெருங்கடலின் வடக்கு
வட மேற்கு பகுதிகளில் ஆய்வு செய்யப்போகிறது என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. இந்தக்
கப்பலில் இருந்து, கடல், தரை, வான் என மூன்று மார்க்கங்களையும் ஆய்வு என்ற பெயரில்
உளவு பார்க்க இருக்கிறது சீனாவின் அதி நவீன யுவான் வாங் கப்பல் என இந்தியா அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, சீனாவின் இந்த உளவு கப்பல் செய்ய இருக்கும் வேவு பார்க்கும்
செயல்கள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகும் அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும்
என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை
சார்பில் ஏற்கெனவே வாய்மொழியாக எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் இந்தக்
கப்பல் வரவில்லை என முதலில் மறுத்துவந்த இலங்கை பாதுகாப்புத் துறை, தற்போது வாய் திறக்க
மறுக்கிறார்கள். இதனால், அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் 11-ம் திகதி, சீன உளவு
கப்பல் வருவது கிட்டத்தட்ட உறுதி என்று அங்குள்ள சீன நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
இதற்கு விரைவில், இந்தியதரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ எதிர்ப்பு வரக்கூடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் கட்சிகளும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு அதி நவீன நீர்மூழ்கி கப்பலும் போர்க்கப்பலும் இலங்கையில் தரிந்து நின்ரன. கடந்த டிசம்பர் மாதத்தில்,
திடீரென இலங்கை தூதர், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறேன் என்ற பெயரில், இந்திய எல்லைக்கு
மிக அருகில் உள்ள இலங்கைக்குச் சொந்தமான தீவுகளுக்குச் சென்றது பெரும் சர்ச்சையானது. தற்போது அதிநவீன உளவு கப்பலை, ஆராய்ச்சி கப்பல்
என்ற பெயரில் சீனா கொண்டு வருவது, அதன் உளவு எண்ணத்தை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
யுவான் வாங் 5 என்பது செயற்கைக்கோள்கள்,
ராக்கெட்டுகள் , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல்களைக் கண்காணிக்கப் பயன்படும்
ஒரு விண்வெளிக் கப்பல் ஆகும். அதன் அம்பாந்தோட்டை விஜயத்தின் சரியான நோக்கம் தெளிவாக
இல்லை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லும் சீன ஆராய்ச்சிக் கப்பலின்
நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம்
பாக்சி, சீனக் கப்பலைப் பற்றி வியாழன் அன்று ஊடகங்களிடம் கூறும்போது, “அதன் பாதுகாப்பு
மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வளர்ச்சியையும் இந்தியா
கவனமாகக் கண்காணிக்கிறது” என்று கூறினார்.
யுவான் வாங் 5 என்பது யுவான் வாங் கிளாஸ் தொடரின் மூன்றாம் தலைமுறைக்
கப்பலாகும் இது 2007 இல் சேவையில் நுழைந்தது.
இது 25,000 தொன் கொண்டது. அதிகபட்சமாக 12 காற்றின்
அளவைத் தாங்கும் திறன் கொண்டது. யுவான் வாங் 5 மாநிலத்தால் கட்டப்பட்டது- ஷாங்காயில்
ஜியாங்னன் கப்பல் கட்டும் தளத்திற்கு சொந்தமானது. இது 750 கிமீ வான்வழி ரீச் சென்றடையும்
என்றும் கூறப்படுகிறது. யுவான் வாங் 5 கப்பல்கள்
மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) மூலோபாய ஆதரவுப் படையால் இயக்கப்படுகின்றன.
இலங்கை அரசு இந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்கியதால், மத்திய அரசு
கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சீனாவின் இந்த `யுவான் வாங் - 5' உளவுக்
கப்பல், தமிழ்நாட்டிலுள்ள சில முக்கிய இடங்களையும், ஆந்திரா, கேரளாவின் கடலோரப் பகுதிகளையும்
இந்தக் கப்பல் உளவு பார்க்க வாய்ப்பிருக்கிறது. தென்னிந்தியாவிலுள்ள ஆறு துறைமுகங்களை
இந்தக் கப்பல் உளவு பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.சீனக் கப்பலின் உண்மையான நோக்கம்
தொடர்பான தகவல்களை மத்திய பாதுகாப்புத்துறை சேகரித்துவருவதாகத் தெரிகிறது. மேலும்,
இந்தக் கப்பல் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்தும் இந்திய மத்திய அரசு வட்டாரத்தில் பல விவாதங்கள் நடந்ததாகக்
கூறப்படுகிறது. அதோடு, தென்மாநிலங்களைக் கவனமாக இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகச்
செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சீனக் கப்பல் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையால்
இலங்கைக்கு புதிய சிக்கல் தோன்றும் நிலை உள்ளது.
No comments:
Post a Comment