Tuesday, August 30, 2022

பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை ரி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ஓட்டங்கள் எடுத்தது  தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். . கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாநவாஸ் தஹானி 6 பந்தில் 16 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களையும்,, ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெகளையும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 49 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விராட் கோலி 35 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடினார். சூர்யகுமார் யாதவ் 18 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 41 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 9 ஓட்டங்கள் கிடைத்தன. 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 10 ரன்னும், 19வது ஓவரில் 3 பவுண்டரி உள்பட 14 ரன்னும் கிடைத்தது. ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஜோடி 50 ஓட்டங்களை கடந்து அசத்தியது. ஜடேஜா 35 ஓட்டங்களில்.   இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங் களை எடுத்து   வெற்றி பெற்றது. பாண்ட்யா 33 ஓட்டங்களுடன்  ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆட்டநாயகனாக ஹர்த்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளனர்.  இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்சில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன் ஆகஸ்ட் 7-ந் திகதி நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ரி௨0 போட்டியில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர். அந்த ஆட்டத்தில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இதன் மூலம், சர்வதேச ரி20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது அதுவே முதல்முறை என்ற சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 இந்தியா கப்டன்   ரோகித் சர்மா 12 ஓட்டங்களில்   ஆட்டமிழந்தார். முன்னதாக ரோகித் சர்மா 12 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார். ரோகித் சர்மா இதுவரை 133 ரி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே கப்தில் (3,497), விராட் கோலி (3,343) ஆகியோர் உள்ளனர்.

  ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ஓட்டங்கள் , 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா தகர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர். மேலும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா (34*) இந்திய அணியின் முன்னாள் கப்டன் எம்எஸ் டோனி (34) இவர்களுக்கு அடுத்தபடியாக யுவராஜ் சிங் (31) உள்ளார்.

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் 1000க்கும் அதிகமானோர் மரனமானதால்  பாகிஸ்தான் வீரர்கள் கறுப்புப்பட்டி அணிந்து விளையாடினர்.

 

 

 

No comments: