Sunday, September 4, 2022

தமிழகத்தில் தலைதூக்கும் தரம் தாழ்ந்த அரசியல்

ஜனநாயகத்திக் காப்பாற்றவேண்டிய அரசியல் தலைவர்களிடம்  இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் விமர்சனங்கள் அத்துமீறி தனி நபர் தாக்குதலாக  உருவெடுத்துள்ளது. கருணாநிதி,ஜெயலலிதா காலத்தில் அறிக்கைப் போராக இருந்த அரசியல் கயிறிழுப்பு வசைபாடும் மேடையாக  மாறியுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சிக்குள்  உண்டான தலைமைத்துவப் போட்டி தலைமையகத்தைச் சூறயாடும் வரை முன்னேறியுள்ளது. எடப்பாடிக்கும், பன்னீருக்கும் இடையிலான  தலைமைப் ஓட்டியில் தொண்டர்கள்  இரு அணியாக  மோதும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

எடப்பாடி அணியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், பன்னீருடன்  இருக்கும் அடுத்த தலைவர்களும் தங்களுக்குள்  மோதுகிறார்கள். ஒருவர் மீது இன்னொருவர் அடுக்கடுக்கான குற்றங்களைச் சுமத்துகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழ்கத்தில்  இணைந்தவர்கள் தாம்  இருந்த கழகத்தைப் பற்றி வாய்கூசாமல்  இல்லாத பொல்லாத கதைகளைக் கூறுகிறார்கள்.

வட இந்திய  ஊடகங்களின் பார்வை தமிழக நிதி அமைச்சர் பி.ரி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மேல் விழுந்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் கருத்துகளுக்கு அவர் பதிவிடும் பதிலடியால் அவர் கவனிக்கப்படுகிறார்.

தமிழகத்தில் தாமரை  மலரும் என சபதம் செய்த தமிழிசை ஆளுநராக  பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்குப் பின்னர் தமிழக  பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரான முருகன் அமைச்சராகி  டெல்லிக்குப் போய்விட்டார். தலைமைப் பதவியை எதிர்பார்த்து மூத்த தலைவர்கள் காத்திருக்கையில் எங்கிருந்தோவந்த அண்ணாமலை தலைவரானார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்வது, பாரதீய ஜனதாக் கட்சிதான் எதிர்க் கட்சி எனஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுப்பேற்றுவது போன்றவற்றால்  தன் மீது ஊடக வெளிச்சத்தை  திருப்பினார்.

தமிழக  நிதி அமைச்சர் பி.ரி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக  அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் அல்ல. என்னை அடித்தால் இருமடங்கு திருப்பி அடிப்பேன்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியலுக்கும் மாநிலத்திற்கும் சாபக்கேடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதான்  இப்போது  பேசுபொருளாக உள்ளது.

 தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  அந்தச் சம்பவத்துக்கும்  அண்ணாமலைக்கும் தொடர்பு உளதென ஒரு குரல் பதிவு வெளியானது அது தனது குரல் அல்ல எனத் தெரிவித்த  அண்ணாமலை பின்னர்  ஒப்புக்கொண்டார். அது என்னுடைய குரல்தான். இடையில்  மிமிக்கிரி செய்யப்பட்டுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்ததால் அவர் மீது  டும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆடு எமோஜியை பதிவிட்டு, "தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு"  என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து  அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முன்னோர்களின் பெயரைக் கொண்டு பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனும், அவரது கூட்டமும் வாழ்வதாகவும், ஆகையால், தானாக உருவாகியிருக்கும் ஒரு விவசாயியின் மகனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

   பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் குடும்பம் செல்வாக்கானது. சுதந்திரத்துக் முன்னர் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் முன்னோர்கள்  குரல் கொடுத்தனர். அதனைத் தனக்கேற்ற வகையில் அரசியலாக்கி தன்னை முன்னிலைப் படுத்துகிறார் அண்ணாமலை. தான் ஏழை என்றும் விவசாயி என்றும் விளம்பரம் செய்கிறார்.

அரசியலில் இல்லாவிட்டால் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும். வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலை போட்டு படுத்து உறங்க முடியும். ஆனால் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனோ,முதலமைச்சரோ வீட்டை விட்டு வெளியே வந்து இதனை செய்ய முடியுமா? என்னை அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசுநாதர் அல்ல, என்னை அடித்தால் நான் இருமடங்கு திருப்பி அடிப்பேன். நான் தன்மானமிக்க அரசியல்வாதி. யாருடைய கைகாலையும் பிடித்து நான் இந்த பதவிக்கு வரவில்லை. எனக்கு பதவியை கொடுத்துள்ளார்கள், பணியை செய்து கொண்டிருக்கிறேன்.

அரசியல் ரீதியாக, சித்தாந்த ரீதியாக பழனிவேல் தியாகராஜனை எதிர்க்கத் திராணியற்ற அண்ணாமலை அவதூறுடன் கூடிய  விமர்சனத்தை வெளிப்படுத்துகிறார்.

அண்ணாமலையின் அதிரடி அரசியலை  பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை. மூத்தவர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கான ஒரு கூட்டத்தை அண்ணாமலை உருவாக்கி உள்ளார். அவருக்கு கடிவாளம்  போட டெல்லித் தலைமை முடிவு செய்துள்ளது. அவரைக் கண்காணிக்க அமைச்சர் முருகன் சென்னையில் முகாமிட்டுள்ளார்.

ஒழுக்கம்,  பண்பாடு , மனிதாபிமானம் என்பனவற்றை  தொண்டர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய தலைவர்கள் தரம் தாழ்வது  அரசியலுக்கு உகந்ததல்ல.

No comments: