Friday, September 23, 2022

பவுல் அவுட்டில் மீண்டும் வென்ற இந்தியா

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2007இல் வரலாற்றில் முதல் முறையாக ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றது. அதில் எம்எஸ் டோனி எனும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாதவர் தலைமையில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களுடன் சொல்லி அடித்த இந்தியா யுவராஜ் சிங்கின் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் உட்பட ஒவ்வொரு போட்டியிலும் ம‌ஜிக் நிகழ்ச்சி யாருமே எதிர்பாராத வகையில் சம்பியனானது.

உலகக் கிண்ண‌ முதல் போட்டியை   பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா துவக்கிய விதத்தையும் ரசிகர்கள் மறக்க முடியாது. டர்பன் நகரில் நடைபெற்ற தன்னுடைய முதல் லீக் போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்தியா 141/8 ஓட்டங்கள் எடுக்க அதை துரத்திய பாகிஸ்தானும் 20 ஓவர்களில் சரியாக 141/7 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது. அதனால் அந்த சமயத்தில் சூப்பர் ஓவர் பிரபலமில்லாத நிலைமையில் வெற்றியை தீர்மானிப்பதற்காக உதை பந்தாட்டத்தில் பயன்படும் பவுல் அவுட் முறை வரலாற்றிலேயே முதல் முறையாக கொண்டுவரப்பட்டது.

ஸ்டம்பை குறி பார்த்து பந்து வீச  5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்தியா சார்பில் வீரேந்திர சேவாக், ரொபின் உத்தப்பா, ஹர்பஜன்சிங் ஆகியோர் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்துவதை போல் பின்புறத்தில் டோனி அமர்ந்திருந்ததை பயன்படுத்தி துல்லியமாக பந்து வீசி முதல் 3 வாய்ப்புகளில் விக்கெட்டை வீழ்த்தினர். ஆனால் டோனியின் யுக்தியை பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் கவனிக்க தவறிய நிலையில் ஷாஹித் அப்ரிடி, உம்ரா குல் போன்ற பாகிஸ்தான்  வீரர்கள்  ஒருமுறை கூட ஸ்டம்பை அடிக்காமல் கோட்டை விட்டதால்  இந்தியா வெற்றி பெற்றது.

16 வருடங்கள் கடந்தும் அந்த நிகழ்வு ரசிகர்களின் நினைவுகளில் இன்னும் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் நிலையில் நடைபெற்று முடிந்த ஆசியக் கிண்ணப் போட்டியில்  அந்த தருணத்தை இந்தியா பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் நிகழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஆசியக்  கிண்ண  வர்ணனையாளராக பணியாற்றிய இந்தியா பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள் டீம் ப்ளூ மற்றும் டீம் க்ரீன் என்ற 2 பிரிவுகளாக பிரிந்து பவுல் அவுட் போட்டியில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய வாரியத் தலைவர் ரமீஷ் ராஜா முதல் பந்திலேயே ஸ்டம்ப்பை அடிக்க தவற விட்ட நிலையில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கச்சிதமாக அடித்து கொண்டாடினார். அதன் பின் பாகிஸ்தானின் ஆமிர் சோஹைல் தவற விட்ட ஸ்டம்பை இந்தியாவின் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் சரியாக அடித்து கொண்டாடினார்

அப்போது நான் சரியாக அடிப்பேன் என்று பேசிய பாகிஸ்தானின் சோயப் அக்தர் செயலில் காட்டத் தவறி தலையை தொங்கப் போட்டார். ஆனால் தமிழகத்தின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் 3வது பந்தை சரியாக வீசி இந்திய ஜாம்பவான்கள் அணியை வெற்றி பெற வைத்தார். இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் சில விஷயங்கள் எப்போதுமே மாறாது என்றும் 2007 மட்டுமல்ல எப்போதுமே பவுல் அவுட் என்றால் அதனுடைய சாம்பியன் இந்தியா தான் என்று கொண்டாடுகின்றனர்.

No comments: