கதாநாயகனுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவம் சினிமாவில் வில்லனுக்கும் கொடுக்கப்படுகிறது.கதாநாயகனைத் தூக்கிப் பிடிக்கும் பாத்திரமாக வில்லன் பாத்திரம் அமைவதுண்டு.எம்.என்.நம்பியார்,பி.எஸ்.வீரப்பாவுக்கு இணையாக வின்னத்தனத்தில் மிரட்டியவர் ஓ.ஏ.கே.தேவர். எஸ்.ஏ.அசோகன், ராமதாஸ், ஆர்.எஸ்.மனோகர் .டி.எஸ்.பாலையா என வரிசையாகப் பல வில்லன்கள் ரசிகர்களைக் கவர்ந்தனர். தூயதமிழ்,கணீரென்ற குரல், மிடுக்கான உடல் அமைப்புடன் தனித்துவமான வில்லனாகப் பவனி வந்தார் ஓ.ஏ.கே.தேவர்.
மதுரை உசிலம்பட்டியை அடுத்துள்ள சின்னஞ்சிறிய கிராமமான் ஒத்தப்பட்டியைச் சேர்ந்ந்த இவரின் பெயர் கறுப்பு . இவர் படித்த பாடசாலையில் கறுப்பு எனும் பெயரில் பலர் இருந்ததால், ஒத்தப்பட்டி ஐயத்தேவர் மகன் கறுப்பு என்பதை ஓ.ஏ.கே என்று சுருக்கிக் கூப்பிட்டார்கள். பின்னாளில் இவரின் சாதியும் பெயருடன் இணைந்துகொள்ள, ஓ.ஏ.கே.தேவர் என பிரபலமானார். ஒத்தப்பட்டி கிராமத்தில் உள்ளவர்கள் விவசாயம் செய்வார்கள் அல்லது இராணுவத்தில் சேர்வார்கள். சிறுவயதில் இருந்தே பாட்டிலும் கூத்திலும் மனதைப் பறிகொடுத்த ஓ.ஏ.கே. தேவர், பள்ளியில் சக மாணவர்களுக்கு நடுவே உட்கார்ந்துகொண்டு, நாடகத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கணீரென்று பாட, அதை வாத்தியார் கேட்டுவிட்டு தகப்பனிடம் மகிழ்ச்சியாகச் சொன்னார். நாடகத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வமாக இருந்த மகனை படிப்பு முடிந்ததும் இராணுவத்துக்கு அனுப்பினார் தகப்பன். தகப்பனின் விருப்பத்தால் இராணுவத்தில் சேர்ந்த ஓ.ஏ.கே.தேவர், தகப்பன் இறந்ததன் பின்னர் ஊருக்கு வந்து தங்கிவிட்டார்.
அந்தக் காலத்தில் சக்தி நாடக சபாவின் ‘கவியின் கனவு’ எனும் நாடகம் மிகவும் பிரபலம். திருச்சியில் நாடகம் நடஎந்தபோது ஓ.ஏ.கே.தேவர் அங்கே சென்று நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகத்தால் கவரப்பட்ட ஓ.ஏ.கே.தேவர் சுமார் 25 முறை பார்த்து ரசித்தார். சபாவின் முதலாளி சக்தி டி.கே.கிருஷ்ணசாமியைச் சந்தித்து, ‘கவியின் கனவு’ நாடக வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசிக்காட்டினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அவர் ‘தம்பீ... பெரியாளா வருவேடா’ என்று சபாவில் சேர்த்துக்கொண்டார். ஓ.ஏ.கே.தேவரின் நாடக ஆசை நிறைவேறியது. ஆனால், சின்னச் சின்னப் பாத்திரங்களில் ஓ.ஏ.கே.தேவர் நடித்ததால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.
சக்தி
நாடக சபாவின் நடிதத சிவாஜி,
நம்பியார், எஸ்.வி.சுப்பையா ஆகியோருக்கு
சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஓ.ஏ.கே.தேவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உண்டானது.
‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.
சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியேறினார் ஓ.ஏ.கே.
தேவர்.
ஓ.ஏ.கே.தேவர் மாடர்ன்
தியேட்டரில் இருந்து வெளியேறியதை அறிந்த என்.
எஸ்.கிருஷ்ணன் அவரை அழைத்து ‘மாமன்
மகள்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். 1950-ல்,
‘மாமன் மகள்’ படம் மூலமாகத் திரையில் அறிமுகமானார் ஓ.ஏ.கே.தேவர். ஆரம்பமே அடியாள் கதாபாத்திரம். தன் ஆஜானுபாகுவான உடலையும் உருட்டும் விழிகளையும் வைத்துக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கினார். பிறகு சின்னச்சின்ன
வாய்ப்புகள் வந்தன.
ஓ.ஏ.கே.தேவரை எம்ஜிஆரிடம் அறிமுகப்படுத்திய என்.எஸ்.கிருஷ்ணன் ’நீங்க நடிக்கிற ‘மதுரை வீரன்’ படம் கதை தெரியும் எனக்கு. திருமலை நாயக்கர் வேஷத்தை இவனுக்குக் கொடுங்க. பிய்ச்சு உதறிருவான்’ என்றார். அந்தப் படத்தில் திருமலை நாயக்கராக நடித்ததுதான், ஓ.ஏ.கே.தேவரின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை.
கறுப்பு வெள்ளைக் கால சினிமாவில், தன் கண்களாலும் விறைப்பான உடல்மொழியாலும் கடுகடுப்பு கொண்ட முகத்தாலும் முக்கியமாக சன்னமான, அதேசமயம் கொஞ்சம் கடுகடுத்தனமுமான குரலாலும் அசத்துக்கிறார் என்று அப்போது எல்லோராலும் ஓ.ஏ.கே. தேவர் கொண்டாடப்பட்டார். முறைத்தபடி ஒரு பார்வை பார்த்தாலே ரசிகர்களுக்குக் கதிகலங்கும். அப்படி ஒரு அசத்தல் நடிப்பை வழங்கினார்.
இதைத்
தொடர்ந்து ஓ.ஏ.கே.தேவருக்கு ஏறுமுகம்தான். வித்தியாசமான படங்களாகவே அமைந்தன. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், சிவாஜிக்கும் ஜெமினிக்கும் ஜாவர் சீதாராமனுக்கும் ஜாக்ஸன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபனுக்கும்
மட்டுமின்றி இவருக்கும் புகழைத் தேடித்தந்தது.
எம்ஜிஆர்
படங்களில் நடித்து வந்தவருக்கு, சிவாஜி படத்திலும் நடிக்கிற வாய்ப்பு வந்தது. சிவாஜி நடத்திய சிவாஜி மன்றத்தில் சேர்ந்து, அவருடன் பல நாடகங்களில் நடித்து
வந்தார். பிறகு அங்கிருந்தும் விலகினார். ‘புதிய பறவை’ படத்தில் பொலி கேரக்டரில் தனித்துவமான நடிப்பை வழங்கினார். கே.பாலசந்தரின் ‘எதிர்நீச்சல்’
படத்தில், சின்ன கேரக்டர்தான். ஆனால் அற்புதமாக காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஜெய்சங்கருடன் ‘யார் நீ’ படத்தில் நடித்தார். இவர் வரும் காட்சிகளெல்லாம் பீதியைக் கிளப்பின. எம்ஜிஆருடன் ‘ராஜா தேசிங்கு’, ராமன் தேடிய சீதை’, சிவாஜியுடன் ‘அன்புக்கரங்கள்’, ‘உத்தமபுத்திரன்’, ‘குறவஞ்சி’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘தங்கச்சுரங்கம்’, ‘திருவிளையாடல்’, ‘அன்னை இல்லம்’, ‘கல்யாணியின் கணவன்’ முதலான ஏராளமான படங்களில் நடித்தார்.
ஓ.ஏ.கே.தேவர் ஒரு
நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். மதுரை,
விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர், தேனி ஆகிய
ஊர்களில் அவருடைய
நாடகங்களுக்கு கூட்டம் அலைமோதியது. நடுவே கலைஞருடன் நெருக்கம் என்று தொடர்ந்து பரபரவென இயங்கி வந்தார். "பாவலர் பிரதர்ஸ்" என இயங்கிக்கொண்டிருந்த
இளையராஜா சகோதரர்களை ஓ.ஏ.கே.
தேவருக்கு சங்கிலி முருகன் அறிமுகம் செய்தார். நடிப்புக்காக,
வசனங்களுக்காக, கதைக்காக கைதட்டல்களையும் பாராட்டுகளையும் வாங்கியிருந்த ஓ.ஏ.கே. தேவரின்
அன்றைய நாடகத்துக்கு, இசைக்காகவும் பாடல்களுக்காகவும் கரவொலி கிடைத்தன.
1957-ல் வெளியான ‘மகாதேவி’. படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து ஓ.ஏ.கே.தேவர் நடித்தார். " அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி"என்ற வீரப்பாவின் பஞ்ச் டயலக்குக்கு கரவொலியால் தியேட்டர் அதிர்ந்தது. அதேபடத்தில் , “வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற ஓ.ஏ.கே.தேவர் பேசிய வசனமும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதன் பின்னர் மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ஓ.ஏ.கே.தேவர்.
No comments:
Post a Comment