Wednesday, July 19, 2023

இறங்கி வந்த எடப்பாடி கண்டுகொள்ளாத பன்னீர்


 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள்  மன்னிப்புக் கடிதம்  கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்  என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்ச்செல்வம், சசிகலா, தினகரன்  ஆகிய  மூவரைத் தவிர ஏனையவர்கள்  மீண்டும் வந்தால்  கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவித்த எடப்பாடி அவர்களின்  பெயரைக் குறிப்பிடாமல்  மன்னிப்புக் கடிதம்  கொடுத்தால் சேர்த்துக் கொள்ளவதாக அறிவித்துள்ளார்.

பன்னீர்ச்செல்வம், சசிகலா, தினகரன் ஆகிய  மூவரையும் கட்சியில் சேர்கும்படி பாரதீய ஜனதா நெருக்கடி கொடுத்தது. அதனைக் கண்டுகொள்ளாத எடப்பாடி  இப்போது இறங்கிவந்து மன்னிப்புக் கடிதம்  கொடுக்க வேண்டும் என நிபந்தனை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிவிப்புக்கான கருத்துரை  எதிர்த்தரப்பில் இருந்து வெளிவரவில்லை.

பன்னீர்ச்செல்வத்தைக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சரியாக  ஒரு வருடத்தின் பின்னர்    கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து, பின் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர்” என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

 ``கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அவர்கள் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.

எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்." எனக் கூறப்பட்டிருந்தது.


 பன்னீரை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதற்கு எடப்பாடிக்கு கொஞ்சமும் விருப்பம்  இல்லை.பன்னீர்ச்செல்வத்தை  கட்சிகுள்  சேர்க்க வேண்டும் என சில மூத்த  உறுப்பினர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். கட்சியில் இருந்து வெளியேறிய  சோழவந்தான் மாணிக்கம் இணைந்திருக்கிறார். மேலும், பலர் இணையும் யோசனையில் இருக்கிறார்கள் சோழவந்த மாணிக்கம் மன்னிப்புக் கடிதம்  கொடுத்ததக தகவல் எதுவும் வரவில்லை. கட்சியில் இருந்து வெளியேறியவர்களோ அல்லது  வெளியேற்றப்பட்டவர்களோ மன்னிப்புக் கடிதம் கொடுத்துச் சேர்ந்ததாகத் தெரியவில்லை.  மன்னிப்புக் கடிதம் கொடுத்து  கட்சியில் சேரும் நிலையில் பன்னீர்ச்செல்வம்  இல்லை.  ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான  பன்னீரை அவமானப் படுத்துவதில்  எடப்பாடி குறியாக  இருக்கிறார்.

எடப்பாடியும்,  பன்னீரும்  ஒன்றாக  இருந்தபோது சசிகலாவும் ,தினகரனும் கட்சியில் இருந்து  வெளியேற்றப்பட்டனர்.  சசிகலாவுடன்  தொடர்பில் இருந்தவர்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  அவர்களும் மன்னிப்புக் கடிதம்  கொடுக்க வேண்டும்.

மன்னிப்பு கடிதம் கொடுத்தால்தான், கட்சியில் இணையலாம்  என்ற அறிவிப்பை கழகத்தில் உள்ள  மூத்த  உறுப்பினர்கள் ரசிக்கவில்லை.  தங்கள் தவறை உணர்ந்தவர்கள்தான் மீண்டும் கட்சிக்குள் வர நினைப்பார்கள். அவர்களை மண்டியிட வைக்கும் நடைமுறை நல்லதல்ல. 

எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா ஆகிய  இருவரையும் போன்ற  ஆளுமை எடப்பாடிக்கு இல்லை. எம்.ஜி.ஆர் காலத்தில்  தேர்தலில் வெற்றி மேல்  வெற்றி.  ஜெயலலிதா காலத்தில் தேர்தலில் வெற்றியும், தோல்வியும்  மாறி மாறி  வந்தன. எடப்பாடியின் காலத்தில் தொடர்ந்து எட்டு தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விதான்  கிடைத்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டர்கள் சசிகலா, தினகரன், பன்னீர்ச்செல்வம் ஆகியவர்களின்  பின்னால் சென்றுவிட்டனர். முக்கிய நிர்வகிகள் பலர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். அண்ணா திரவிட முன்னேற்றக் கழ்கக் கோட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

  மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் அடிப்படை உறுப்பினர் ஆகலாம் என்ற எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோருக்கு பொருந்தாது எனவும்; மற்ற அனைவருக்கும் பொருந்தும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் அதிக  இடங்களில் போட்டியிட பாரதீய ஜனதாக் கட்சி விரும்புகிறது. பன்னீர், வாசன் , போன்ற‌வர்களை தாமரை சின்னத்தில்   களம்  இறக்க பாரதீய ஜனதா விரும்புகிறது. அனால், பன்னீரை விட்டு வெகுதூரம்  பாரதிய ஜனதா செல்கிறது.

பாரதீய ஜனதாவினதும் ,ஆளுநர் ர‌வியினதும் அண்மைக்கால நடவடிக்கைகளை தமிழக மக்கள் எரிச்சலுடன்  பார்க்கிறார்கள்.பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  பெரு  வெற்றி பெற வில்லை. தமது தோல்விக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என கழகத்தின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளை திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணிக் கட்சிகள்  பெற்றுவிடும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளை பன்னீர், சசிகலா, தினகரன் ஆகியோர்  பங்கு போடப்போகின்றனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைக்குள் வைத்திருக்கும் எடப்பாடிக்கு தேர்தல்  படம் புகட்டும் அதுவரை எடப்பாடி அதிகாரம் செய்வார்.

No comments: