Wednesday, July 12, 2023

முல்லைத்தீவில் புதைகுழி மனித எச்சங்கள் மீட்பு

  முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடந்த 6ஆம் திகதி வியாழக்கிழமை  தீதிபதியின் உத்தரவுக்கமைய தோண்டப்பட்டபோது மனித எச்சங்கள் என அடையாளம் காணக்கூடிய சுமார் 13 இடங்களை அதிகாரிகள் அடையாளப்படுத்தியுள்ளனர். பிளாஸ்ரிக் பொருள்கள், வயர் உட்பட சில சான்றுப் பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட அகழ்வுப் பணிகளின்போது, மனித எலும்பு எச்சங்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் உள்ளிட்ட ஆடைகளை அதிகாரிகள் மீட்டிருந்தனர்.

அந்த  இடத்தில் மேலும் பல மனித எச்சங்கள்  இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  இந்நிலையில், ஆரம்பகட்ட அகழ்வுப் பணிகள்  இடைநிறுத்தப்பட்டு, இது தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் குறித்து முல்லைத்தீவு நீதிபதி தலைமையில் விசேஷ சந்திப்பு ஒன்றை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்தக் கலந்துரையாடலில் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.


  குடிநீர் குழாய் பொருத்துவதற்காக  கடந்த ஜூன் மாத 26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. தோண்டும் பணிகள் இடைநிருத்தப்பட்டு கொக்கிளாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் , பாதுகாப்பு பிரிவினர், இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், தொலைபேசி நிறுவன அதிகாரிகள், மின்சார சபை ஊழியர்கள், பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் பிரமுகர்கள்,  பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ்வுப் பணி நடைபெற்றது.

கொக்குத்தொடுவாயில் கண்டெடுக்கப்பட்ட  பொருட்கள் பற்றிய பல செய்திகள்   வெளிவருகின்றன. விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த துணிகள், பெண்களின் உள்ளாடைகள்  போன்ரவை மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.   24 ஆண்டுகளாக மக்கள் நடமாட்டமின்றி இருந்த இடத்தில்   மனித எச்சங்க எப்படி வந்தது எனக் கேள்வி ந்ழுப்புகிறார் இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரைப் பல ஆண்டுகளாகத் தேடி வரும் மரியசுரேஷ் ஈஸ்வரி.

தற்போது நடந்துவரும் அகழ்வில் கிடைத்துள்ள எச்சங்கள் குறித்துப் பேசிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் , ''இந்த பிரதேசமானது 1984ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சூனிய பிரதேசமாக(இந்தக் காலகட்டத்தில் மக்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இராணுவம் மாத்திரமே பயன்படுத்தியது  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது"என்கிறார்.

முல்லைத்தீவு  மனிதப் புதைகுழி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. மாத்தளை,மன்னார்    போன்ற இடங்களில் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளின் விசாரணை  முடிவை மக்கள் மறக்கவில்லை.அங்கு மேலும் சில மனித எச்சங்கள்  இருக்கலாம் என மக்கள் சந்தேகப்படுகிறார்கள். 

No comments: