இந்திய அணியின் புதிய தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர், வினோத் கம்ப்ளி, சந்திரகாந்த் பண்டிட், சஞ்சய் பங்கர் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய அச்ரேக்கரின் மாணவர் அஜித் அகர்கர். பள்ளி நாட்களில் பேட்ஸ்மேனாக உருவாக நினைத்த அஜித் அகர்கர், அதற்கேற்ப ஒரு போட்டியில் 300 ஓட்டங்களை விளாசி பலரின் கவனத்தை ஈர்த்தவர்.
அதன்பின்னர் மும்பை ரஞ்சி
டிராபி அணிக்கு ஆல் ரவுண்டர் தேவை இருந்ததன் காரணமாக, அஜித் அகர்கர் பந்துவீச்சிலும்
கவனம் செலுத்த தொடங்கினார். அதுவே அவருக்கு இந்திய அணிக்கான கதவினையும் திறந்து வைத்தது.
20 வயதிலேயே அறிமுகமான அஜித் அகர்கர், பேட்டிங் ,பந்துவீச்சு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இருப்பினும் 135 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீச முடியாததால் அஜித் அகர்கரை மற்ற அணிகள்
மிதவேக பந்துவீச்சாளராக பார்த்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் "டக் அவுட் நாயகன்"
என்று சொல்லும் அளவிற்கு 7 முறை தொடர்ந்து டக் அவுட்டாகி சாதனை படைத்தவர் அஜித் அகர்கர்.
ஆனால் அந்த சாதனைக்கு எதிர்மாறாக சச்சின் கூட அடிக்க முடியாத லார்ட்ஸ்
மைதானத்தில் சதம் விளாசி அசத்தியவர். அஜித் அகர்கர் கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்த
ஒரே சதமும் அதுதான். அதற்காகவே அஜித் அகர்கர் நினைவு கூறப்படுவார். அதேபோல் 2003ஆம்
ஆண்டின் போது இந்திய அணியின் முக்கிய வீரராக அஜித் அகர்கர் உருவாகிய நிலையில், இர்பான்
பதானின் எழுச்சி அவருக்கான இடத்தை கேள்விக்குறியாகியது. இதன்பின் இந்திய அணிக்கு வருவதும்
போவதுமாக இருந்த அஜித் அகர்கர், 2007 ஆம் ஆண்டு ரி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்காக
விளையாடி இருக்கிறார்.
ஓய்வை அறிவித்த அஜித் அகர்கர்,
மும்பை அணியின் தேர்வு குழு தலைவராக செயல்பட்டார். அப்போது அஜித் அகர்கர் எடுத்த பல்வேறு
அதிரடியான முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பார்மை இழந்த சூர்யகுமார்
யாதவ், தவால் குல்கர்னி, அகில் ஹெர்வத்கர், ஆதித்யா தரே, அர்மான் ஜாஃபர் உள்ளிட்ட வீரர்களை
அதிரடியாக நீக்கினார். இதனால் கோபமடைந்த மும்பை அணி நிர்வாகிகள், தேர்வுக் குழு மொத்தமாக
நீக்க திட்டமிட்டது. ஆனால் அதற்கு முன்பாக அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு ராஜினாமா
செய்தது. இதனால் இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் எப்படி செயல்படுவார்
என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய டெஸ்ட் , ஒருநாள் அணிகளில் மாற்றம் செய்வதற்கான
நேரம் உருவாகியுள்ள நிலையில், அதனை அஜித் அகர்கர் எவ்வளவு விரைந்து செயல்படப் போகிறார்
என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இந்திய அணி தேர்வுக்கு பின் அஜித் அகர்கராவது செய்தியாளர்களை
சந்தித்து மக்களுக்கும் ரசிகர்களுக்கும் விளக்கம் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும்
அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு உறுப்பினராக அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மும்பை லாபியின் ஆதிக்கம் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்துவிட்டதா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்ததால்
அந்த பதவிக்கு வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் நபர் தான் அணிக்குள் வரவேண்டும். ஆனால்
இம்முறை மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த அஜீத் அகார்கர் தேர்வு குழு தலைவராக வந்திருக்கிறார்.
இதன் மூலம் தேர்வுக்குழுவில் இரண்டு மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த நபர்கள் இருக்கிறார்கள்.இது
பிசிசிஐ கடைபிடிக்கும் நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்
மேற்கு பிராந்தியத்தில் இருந்து பெரிய நட்சத்திரங்கள் யாரும் விண்ணப்பிக்காததால் தான்
அஜித் அகார்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இந்த
நிலையில் இந்திய கிரிக்கெட்டின் பவர் ஹவுஸ் ஆக எப்போதுமே மும்பை தான் விளங்கும்.
ஆனால் சீனிவாசன், ஜெய்ஷா, கங்குலி போன்றோரின் வருகையால் மும்பை
தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்தது. இந்த நிலையில் மீண்டும் தேர்வு குழு தலைவர் என்ற
முக்கிய பொறுப்பு மும்பையைச் சேர்ந்த அஜித் அகார்கருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்
மூலம் மும்பையைச் சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.இதனால்தான்
பிசிசிஐயில் நடைமுறைகளை மீறி மும்பையைச் சேர்ந்த அஜித் அகார்கர் உள்ளே வந்திருக்கிறார்
என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment