Friday, December 14, 2018

முடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை


மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஸ்கர்,மிசோராம்,தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மோடி அலையை முடக்கியுள்ளது. மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி பெரு வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத போதிலும் மோடி, அமித் ஷா ஆகியோரின் வியூகத்தால் பாரதீய ஜனதா சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் மோடியின் கனவை ராகுல் சிதறடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைவராகப் பொறுப்பேற்ற ஒரு வருடத்தின் பின்னர் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற  தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிடியில் இருந்த மூன்று மாநிலங்களின் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ராகுலுக்கும் மோடிக்குமிடையிலான போட்டியில் ராகுல் முந்தியுள்ளார். மோடி தோல்வியடைந்துள்ளார்.

மத்தியப்பிரதேசம்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மூன்று முறை 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. மிசோராமில் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மிசோ தேசிய முன்னணியிடம் ஆட்சியை இழந்துள்ளது. மிசோராம் தோல்வியை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வடகிழக்கு இந்தியா காங்கிரஸின் கையை விட்டுப் போயுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அதனைச் சரிசெய்யலாம் என காங்கிரஸ் நினைக்கிறது.

தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாவும் தென் மாநிலங்களில் கோலோச்ச முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. சந்திரபாபு நாயுடுவுடன் மெகா கூட்டணி அமைத்தும் காங்கிரஸால் வெற்றி பெறமுடியவில்லை. தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கையில் முன்கூட்டியே ஆட்சியைக் கலைத்த சந்திரசேகரராவ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிபீடமேறியுள்ளார். கடந்த தேர்தலில் 63 தொகுதிகளில் வெற்றி பெற்ற சந்திரசேகரராவின் கட்சி  இம்முறை 88 தொகுதிகளில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இம்முறை மெகா கூட்டணி அமைத்தும் 21  இடங்களில் தான் வெற்றி பெற்றது.

மிசோராமில் 2013 ஆம் ஆண்டி நடந்த தேர்தலில் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் மிசோ தேசிய முன்னணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.  இப்போது நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா இம்முறை ஒரு தொகுதியில் வெற்றி பெறவில்லை

ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் மிக இலகுவாக வெற்றி பெற்ற காங்கிரஸ் ராஜஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 200 தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் வேட்பாளர் ஒருவர் மரணமானதால் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு குறைவாக இருந்தமையால் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற மமதா பானர்ஜி ஆதரவுக் கடிதம் கொடுத்தமையினால் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரதீஜ ஜனதாக் கட்சி 163 தொகுதிகளிலும் காங்கிரஸ் 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இம்முறை  காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும் பாரதீஜ ஜனதா 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மத்தியப் பிரதேசத்திலும்  ராஜஸ்தானிலும் பாரதீய ஜனதா கடிமையான  போட்டியைக் கொடுத்தது. அதிக மான தொகுதிகளில்  நூற்றுக்  கணக்கான வாக்கு வித்தியாசத்தில் பாரதீய ஜனதா தோல்வியடைந்தது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை விட அதிகமான வாக்குகளைப் பெற்றும் குறைந்த தொகுதிகளிலேயே பாரதீஜ ஜனதா வெற்றி பெற்றது. முன்னாள் முதலமைச்சரும் 12 அமைச்சர்களும் தோல்வியடைந்தது பாரதீய ஜனதாவுக்குப் பின்னடைவே. மத்தியப் பிரதேசத்தில் ஒரு சதவீத வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியும்  காங்கிரஸ்  கட்சியும் பெற்ற வாக்குகளைவிட குறைந்த வாக்குகளையே இந்தத் தேர்தலில் பெற்றுள்ளன. வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கும் பிரிந்து சென்றுள்ளன. சுயேட்சைகள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.
பண மதீப்பீட்டு இழப்பு, ஜி எஸ்.டி வரி, விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமை, ஆளும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை, வறுமை, வேலையின்மை நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறவேற்றாமை ஆகியவற்றைத் தேர்தலின் முடிவு உணர்த்தியுள்ளது.

ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.  மோடிக்கு எதிராக ராஜீவால் நிற்க முடியுமா என்ற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா


Monday, December 3, 2018

தமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்


தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பரம விரோதிகளாகச் செயற்பட்டு வருகின்றன. தமிழகத்தின் ஏனைய அரசியல் கட்சிகள்அனைத்தும் தேர்தல் காலத்தில் இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவையும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும்  கூட்டணி சேர்ந்தன.

எதிரணி அரசியல்  தலைவர்களின்  எதிர்பாராத சந்திப்பை தமிழக ஊடகங்கள்  மிகைப்படுத்தி ஊதிப்பெரிதாக்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் செய்தார். அப்போது  அதேபாதையால் சென்ற ஜெயலலிதா காரைவிட்டு இறங்கி வைகோவை நலம் விசாரித்தார்.  அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் வைகோ இணைவார் என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன.  அது நிஜமாகாமலே ஜெயலலிதா இறந்துவிட்டார்.

காங்கிரஸ் தலவர் ராகுலை, திருமாவளவன் சந்தித்தபின் அடுத்த தேந்ர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தனது கட்சி போட்டியிடும்  என அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ராகுல் செக் வைத்துள்ளார் என ஊடகங்கள் தெரிவித்தன. கமலும் ராகுலும் சந்தித்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கழற்றிவிட,  காங்கிரஸ் தயாராகிவிட்டதாக ஊடகங்கள் கதை அளந்தன. ஸ்டாலினும் தினகரனும் ஹோட்டலில் தங்கியபோது இரகசியப் பேச்சு வார்த்தைஎன செய்தி வெளியாகியது.

மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் கடந்த தேர்தல்களின்போது ஒன்றாக இணைந்த வைகோவும் திருமாவளவனும் அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைய விருப்பம் கொண்டுள்ளனர். ஸ்டாலினை முதலமைச்சராக்குவேன் என வைகோ சபதமிட்டுள்ளார். கஜா புயலில் கோரத்தாண்டவத்தின் பிற்பாடு   அமைச்சர்கள் செயற்படவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், வைகோ புகழந்து தள்ளியுள்ளார். இயற்கை அனர்த்தத்தின் போது போது ஜெயலலிதாவைவிட சிறப்பாக தமிழக அரசு  செயற்படுகிறது என வைகோ கருத்துத் தெரிவித்தார். ஸ்டாலினை கைவிட்டு எடப்பாடியுடன் கைகோர்க்க வைகோ தயாராகிவிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


அரசியல்வாதிகள் எதிர்பார்க்காத கோணத்தில் செய்திகளை வெளியிட்டு அவர்களைத் திக்கு முக்காடவைப்பதில் ஊடகங்கள் முனைப்புக் காட்டுகின்றன. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப்பார்த்து தொண்டர்கள் கலக்கமடைவார்கள். காலையில் வெளியான செய்தியைத் தலைப்பாக்கி இரவில் சுடச்சுட விவாதக்  களமாக்குவதில் தொலைக்காட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நெறியாளராகச் செயற்படுபவர்கள் தாம் நினைக்கும் பிழையான பாதையில் விவாதிப்பபவர்களை அழைத்துச் செல்ல முயற்சிப்பர்கள். சிலர் அவர்களது வலையில் விழுந்துவிடுவார்கள். சிலர் சாமர்த்தியமாகத் தப்பிவிடுவார்கள்.
காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,  திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைய விரும்புகின்றன. திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் துரைமுருகனின் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்று வைகோவையும் திருமாவளவனையும் பதறவைத்துள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலைச் சிறுத்தைகளும் நட்பு கட்சிகள். காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியன ரெகுலர் கட்சிகள் என துரைமுருகன் பேட்டியில் தெரிவித்தார். அந்தப் பேட்டியின் சாராம்சத்தை அப்படியே மாற்றி கொழுத்திப் போட்டன ஊடகங்கள்.

வைகோவுக்கும் திருமாவளவனுக்கும் திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இடம் இல்லை என ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. இதனால் கலக்கமடைந்த வைகோ,ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என அறிவித்தார். திருமாவளவன் பதற்றப்படாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து கருத்துத் தெரிவித்தார். பரபரப்பாக செய்திகள் வெளியான சந்தர்ப்பத்தில் ஸ்டாலினைச் சந்தித்த வைகோவும்   திருமாவளவனும் தெளிவடைந்தனர்.


காவிரிக்குக் குறுக்கே  மேகதாது எனுமிடத்தில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது. அதனை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிராக அரசியல் செய்யும்  திராவிட முன்னேற்றக் கழகம் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த்,வாசன், கமல், தினகரன் ஆகியவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அடுத்த தேர்தலுக்கான கூட்டணிக் கூட்டமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

காங்கிரஸ்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,விடுதலைச் சிறுத்தைகள்,இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்ஸிஸ் கட்சி, முஸ்லிம் லீக், மனித நேயக்கட்சி ஆகியன அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பிடிக்கும் கட்சிகள் என கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல கட்சிகள் பதியப்பட்டிருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம்,அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவைதான் தேர்தல்  திணைக்களத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கட்சிகள். தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றதால் ஏனைய கட்சிகளின் அங்கீகாரம் நீக்கப்பட்டது. தேர்தல்  திணைக்களத்தின் அங்கீகாரத்தை இழந்த கட்சிகள் மீண்டும் அதனைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால்தான் இழந்த அங்கீகாரத்தைப் பெறலாம் என வைகோவும் திருமாவளவனும் நம்புகின்றனர்.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரத் துடிக்கும் கட்சிகளின் தலைவர்களும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையின்  பின்னர்தான் உள்ளே இருப்பது யார்? வெளியேறப் போவதுயார்? புதிதாக இடம் பிடிப்பது யார்?  போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

சூரன் ஏ. ரவிவர்மா.

Friday, November 23, 2018

அதிமுகவின் அரசியலால் தலைகுனிந்த நீதி தேவதை


கோவை வேளாங்கண்ணி மாணவிகளை பஸ்ஸினுள் உயிருடன் எரித்த மூன்று குற்றவாளிகளைத் தமிழக அரசு விடுதலை செய்ததற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கொடைக்கானல் பிளஸண்ட் எஸ்டேட் ஹோட்டல் வழக்கில்  2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தமிழகம் எங்கும் வன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அதேதினம் கோவை, வேளாங்கண்ணி மாணவர்கள் சுற்றுலாச் சென்றனர். தருமபுரியில் அவர்கள் சென்ற பஸ்ஸை வழிமறித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பெற்ரோல் ஊற்றி பஸ்ஸுக்குத் தீவைத்தனர். அந்த நெருப்பில் அகப்பட்ட கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி எனும் மூன்று மாணவிகள் தீயில் கருகிப்  பலியாகினர். அந்தக்கொடூர சம்பவத்துக்கு அப்போது சகலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மாணவிகளை உயிருடன் எரித்த குற்றச்சாட்டில்  30 பேர் கைது செய்யப்பட்டனர். நெடுஞ்செழியன்,முனியப்பன்,மாது ஆகிய மூவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி அவர்களுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மூவரும் மேன் முறையீடு செய்தார்கள். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி  மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்காக அந்தக்கொடூரத்தை அரங்கேற்றிய மூன்று பேரை  எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு  விடுதலை செய்துள்ளது.

 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1880 கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. 1600 கைதிகளின் விடுதலையை ஆளுநர்  உறுதி செய்தார். தருமபுரி பஸ் எரிப்புக் குற்வாளிகளின் கோவையை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அந்தக் கோவையை மீண்டும் ஆளுநரின் கவனத்துக்கு அனுப்பியது. இரண்டாவது முறையும் ஆளுநர் அதனைத் திருப்பி அனுப்பினார். கருமத்தில் கண்ணான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மூன்றாவது முறையும் அந்தக் கோவையை ஆளுநருக்கு அனுப்பியது. தலைமைச்செயலர், உள்துறைச் செயலர், தலைமை வழகறிஞர் ஆகிய மூவரும் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் கொடுத்தபின்னர் மூவரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் கையழுத்திட்டார்.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தருமபுரியில் பஸ்ஸை எரித்தனர். இது திட்டமிட்டுச்  செய்யப்படவில்லை எனக்  காரணம் சொல்லப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். தமிழக அரசும், மத்திய அரசும்   நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன  என்பதை இச்செயல்  வெளிப்படுத்துகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, பாரதீய ஜனதாக் கட்சி ஆட்டுவிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதனை மறைப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதீய ஜனதாவும் இரகசிய உடன் படிக்கை செய்துள்ளன என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவரின் விடுதலையில் அதிக அக்கறை காட்டிய தமிழக அரசு, ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு  சிறையில் இருப்பவர்களின் விடுதலையில் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மூவரும் கொலையில் நேரடியாகச்  சம்பந்தப்பட்டவர்கள்.  ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவிக்கும் அந்த ஏழு பேரும் நேரடியாகக் கொலையில் சம்பந்தப்படவில்லை. அவர்களை விசாரித்த அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் தாம் தப்புச் செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர அனைத்துத் தரப்பினரும் மாணவிகளைக் கொலைசெய்த மூவரின் விடுதலையை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 வருடங்கள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம் என்ற சரத்தின் அடிப்படையில் மூவரும் விடுதலை செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டத்திக் காரணம் காட்டி தமக்கு வேண்டப்பட்டவர்களை விடுதலை செய்சதற்கு எடப்படியின் தலமையிலான அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. ராஜீவ் கொலை செய்யபட்டபோது இறந்தவர்களின் உறவினர்களும் பாதிக்கப்பட்டவர்களும் ஏழு பேரின் விடுதலையை எதிர்ப்பதால் அவர்களின் விடுதலை தாமதப்படுவதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. தருமபுரியில் கொல்லப்பட்ட மூன்று மாணவிகளின் உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஜெயலலிதாவுக்காக் கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரியில்  பஸ்ஸுக்குள் எரிக்கப்பட்ட காயத்திரியின் பெற்றோர் இன்றும் உயிருடன் இருக்கின்றனர். மற்றைய இரண்டு மாணவிகளின் பெற்றோர் இறந்துவிட்டனர். தனது மகலைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. நீதி நிலை நாட்டப்பட்டுவிட்டது என இத்தனைநாள் காயத்திரியின் பெற்றோர் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அரசியல் அதிகாரம் அவர்களின் கண் முன்னாலேயே நீதியைச் சாகடித்துவிட்டது. நீதிக்குத் தலை வணங்கு என முழக்கமிட்ட எம்.ஜி.ஆரின் பெயரால் நீதி அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் சிறையில் தண்டனையை அனுபவித்த தருமபுரி பஸ் எரிப்புக் குற்றவாளிகள் மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற செய்தி கசிந்ததும் அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சேலம் சிறையில்  இருந்து மூவரும் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டனர். பொலிஸார் அவர்களைப் பாதுகப்பாக பஸ்ஸில் அனுப்பி வைத்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரின் வீட்டில் தங்கி இருந்த அவர்கள் தமது ஊருக்குச் சென்றுள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் அந்த மூவரும் கட்சிப்பணியில் இணைவார்கள். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தயங்க மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்காக கருகிய அந்த மூன்று மலர்களின் நினைவுகளை யாராலும் மறக்க முடியாது.

Friday, November 9, 2018

சினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்


அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்யும். தமிழகத்ஹ்டில் அரசாங்கம் விஜய்க்கு எதிராகப் போராடுகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மலையாளம்,தெங்கு,கன்னடம் ஆகிய மொழி ரசிகர்களும் விஜயின் ரசிகர்களாகத் தம்மை வெளிப்படுத்தியுள்ளனர்.விஜயின் படங்களால் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் இலாபத்தைப் பங்கு போடுகின்றனர். விஜயின் படம் வெளியாகும் நாள் அவரது ரசிகர்களுக்கு பண்டிகை தினம். சில அரசியல் கட்சிகள் விஜயைக் குறிவைப்பதால் பலதடைகளின் பின்னரேஅவரது படங்கள் வெளியாகின்றன.

சர்கார் படத்தின் வில்லியின் பெயர் கோமளவல்லி என்பதாலும், அரசு வழங்கிய இலவசப் பொருட்களைத்தூக்கி எறியும் காட்சி உள்ளதாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கொதிப்படைந்துள்ளனர். கோமளவலி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர். ஜெயலலிதாவின் பெயரை வில்லிக்குச் சூட்டியதால் விஜய், ஜெயலலிதாவைக் கேலவப்படுத்திவிட்டார். இலவசங்களைத் தூக்கி எறியும் காட்சியால் ஜெயலலிதாவை அவமானப்படுத்திவிட்டார்கள் என அண்ணா திராவிட முன்னெற்றக் கழகத்தின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சர்கார் படம் வன்முறையைத் தூண்டியுள்ளது எனத் தமிழக அமைச்சர்கள் குமுறினார்கள். அதனால் கோபப்பட்ட தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தமது தொண்டர்களைக் குண்டர்களாக மாற்றினார்கள். வீதிகளிலும் தியேட்டர்களிலும் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பதாகைகளை அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கிழித்தெறிந்தனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் வன்முறையைத் தடுக்க வேண்டிய பொலிஸார் வழமைபோல கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளியானபோது ஆரம்பமான பிரச்சினை இன்றுவரை தொடர்கிறது. கத்தி படத்தில் 2ஜி விவகாரம் பேசப்பட்டது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியில் இருந்தமையால் பெரிதாக எதிர்ப்பு வெளியாகவில்லை. 2ஜி விவகாரத்தில் கனிமொழியும் ஆர்.ராசாவும் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. தலைவா வெளியாவதில் சிக்கல் எழுந்ததால் விஜயும் அவரது தகப்பனும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தனர். மெர்சலில் பாரதீய ஜனதாவின் பலவீன அரசியல் வெளிப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி, பணமதிப்பு என்பனவற்றை விமர்சித்தால் தமிழக பாரதீய ஜனதத் தலைவர்கள் எதிர்த்தார்கள்.இப்போ சர்காருக்கு எதிராக தமிழக ஆளும் கட்சி கிளர்ந்தெழுந்துள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அடங்கி இருந்த விஜய், அவர் இல்லாத நிலையில் தம்மை நேரடியாகத் தாக்குவதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கருதுகின்றனர். சர்காருக்கு எதிர்ராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு,  சட்டத்தைக் கையிலெடுத்து வன்முறையைத்  தூண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்காத தமிழக அரசு சர்கார் பிரச்சினையைக் கையில் எடுத்து தனது இருப்பை வெளிக்காட்டியுள்ளது. ஆனால், நடுநிலையாளர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக் இருக்கின்றனர்.

விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பல நல்ல காரியங்களை விஜய் செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இரவில் தனி ஆளாகச் சென்று உதவிகள் செய்கிறார். அவரது நற்பணி மன்றங்கள் பலவகையான உதவிகளைச் செய்து வருகிறது. விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக அவரது தகப்பன் எஸ்.ஏ சந்திரசேகரன் பல மேடைகளில் சொல்லி வருகிறார். ஆனால், விஜய் அதைப்பற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை.  விஜய், அரசியலுக்கு வருவார் என அவரைச் சுற்றி இருப்பவர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.  விஜய்யை மையப்பொருளாக வைத்து நடக்கும் சம்பவங்கள் அரசியலை நோக்கி அவரை தள்ளுவதுபோலத் தெரிகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக சட்டமன்ற உறுபினர்களும் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் வெற்றி பெற்ற பின்னர் தொகுதிப்பக்கம் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது.தொகுதிக்குச் சென்ற பலரை அங்குள்ளவர்கள் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை அண்மையில் தொகுதிக்குச் சென்ற போது பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கமுடியாமல் தடுமாறினார்.

சர்கார் படதில்  இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கை செய்யப்பட்டு மீண்டும் தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. இது மிக மோசமான முன்னுதாரணம். ஆளும் கட்சியை விமர்சித்து திரைப்படங்கள் வெளிவரமுடியாத சூழ்நிலை ஏற்படவாய்ப்புள்ளது. தியேட்டர்களுக்குள் அத்துமீறி விளம்பரப்பலகைகளைச் சேதமாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சி என்றால் சட்டத்தைக் கையில் எடுத்து  சொத்துக்களைச் சேதப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் வரலாறு நூறு ஆண்டுகளைக்  கடந்து விட்டது. பல சினிமாக்கள் அரசியலைப்பேசின அப்போது இன்று போல கடும் நெருக்கடி தோன்றவில்லை. கல்கியின் “அலை ஓசை” படத்துக்கு அப்போது தடை விதிக்கப்படப் போவதாக செய்தி வெளியானது. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவராது அன்றைய திராவிட முன்னேற்றக் கழகம் சவால் விட்டது. எல்லாத் தடைகளையும் மீறி உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்பட்டது. ரஜினியின் பாபா படம் வெளிவராமல் தடுக்கும் காரியத்தை பாட்டாளி மக்கள் கழகம் செய்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் ரஜினியின் ரசிகர்களும் மோதினார்கள்.
கமலின் சில திரைப்படங்களும் பல பிரச்சினைகளை முறியடித்துத்தான் வெளியாகின. ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறப்போவதாக விரக்தியுடன் தெரிவித்தார் கமல். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடப்போவதாக கமல் தெரிவித்துள்ளார். தேவர் மகன் வெளியானபோது பல மாவட்டங்களில் சாதிச்சண்டை நடைபெற்றது. அதன் இரண்டாம் பாகம் வெளியானால் மீண்டும் அதே சாதிச்சண்டை உருவாகும் என டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு படம் வெளியாகும் முன்னரே அதற்கு எச்சரிக்கை விடுக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல.

அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலைச் சந்திக்க கமல், தயாராகிவிட்டார். கட்சிக்கான் ஆயத்தப்பணிகளை ரஜினி தொடங்கிவிட்டார். விஜய், அரசியலுகு வருவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். தமிழகத்தின் அடுத்த அரசியல் தலவர்கள் நடிகர்களா அல்லது பரம்பரை அரசியல் வாதிகளா என்பதை அடுத்துவரும் தேதல்தான் தீர்மானிக்கும்.

Monday, November 5, 2018

மினித்தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்


இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சியின் வலிமையை வெளிப்படுத்தும் கருவி. ஆட்சிபீடத்தில் இருக்கும் கட்சி   இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது எழுதப்படாத விதி. அபூர்வமாச் சில வேளைகளில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும். தமிழகத்தில் இருபது தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்தலை எதிர் நோக்கித் தமிழகம் காத்திருக்கிறது.   தமிழகத்தின் தலைவிதியைப் புரட்டிப்போடும்  இந்தத் தேர்தலை இந்தியாவே உன்னிப்பாக அவதானிக்க உள்ளது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகியவற்றின்  உறுப்பினர்களான போஸ், கருணாநிதி ஆகியோர் காலமானதால் அவை தேர்தலை எதிர் நோக்கி உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து 19 அண்ணா திராவிட முன்னேற்றக்  கழக உறுப்பினர்கள் அன்றைய தமிழக ஆளுநரிடம் மனுக்கொடுத்தனர். அதன் காரணமாக அந்தப் 19 உறுப்பினர்களுக்கும் எதிராக தமிழக சட்டசபையின் சபாநாயகர் விளக்கம் கேட்டார். அவர்களில் ஜக்கையன் என்பவர் விளக்ககடிதம் கொடுத்ததால் அவர் மன்னிக்கப்பட்டார். ஏனைய 18 உறுப்பினர்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்த அவர்கள் நீதிமன்றம் சென்றனர்.  இரண்டு நீதிபதிகள் எதிரும் புதிருமாகத் தீர்ப்பு வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட 18 பேரும் மேன் முறையீடு செய்தனர். சபநாயகரின் தீர்ப்பு சரியென தீப்பு வழங்கப்பட்டது.

சபாநாயகரின் தீர்ப்பு சரியென உறுதிசெய்யப்பட்டதால் அண்னா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை எதிர்நோக்கியிருந்த ஆபத்து விலகியது. தினகரனை நம்பி இருந்தவர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். வழக்குகளைச் சந்தித்து அனுபவப்பட்ட தினகரன் உச்சநீதிமனறத்தில் பார்த்துக்கொள்ளலாம் என சவால் விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலைச் சந்திப்பதையே அவர்கள் விரும்பினார்கள். ஒரு வருடமாக வருமானம் எதுவும் இல்லை. ஆளும் கட்சி என்ற பந்தா இல்லை. எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தாங்கள் செய்தது நியாயம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆதலால் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். தினகரனின் முடிவுக்கு தங்கத்தமிழ்ச்செல்வன், வெளிப்படையாகவே மறுப்புத் தெரிவித்துவிட்டார். உச்ச நீதிமன்றம் சென்றால் இன்னும் இரண்டு வருடங்களாவது இழுபடும்.  வழக்குச் செலவுக்கும் பணமும்  இல்லை. நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வதை விட மக்களிடம் செல்வதே சரியென்பதில் அவர்கள் உறுதியாக  உள்ளனர். அவர்களின் முடிவுக்கு அடிபணிந்த தினகரன் உச்சநீதிமன்றம் செல்லப்போவதில்லை என அறிவித்தார்.


   இடைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தமிழக அரசியல் தலவர்கள் தயாராக இல்லை. தோற்று விடுவோம் என்றபயம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களிடம் இருக்கிறது. கஸ்ரப்பட்டு பனத்தைச் செலவு செய்து வெற்றி பெற்றாலும் மாற்றம் எதுவும் நடைபெறாது என்பதால் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் இடைத் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆர்.கே. நகர் வெற்றியால் பூரிப்படைந்திருக்கும் தினகரன், அதேபோன்ற ஒரு பிரமாண்டமான வெற்றி கிடக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கிறார். திருமங்கலம் வெற்றியைக்  குழிதோண்டிப் புதைத்தது ஆர்.கே.நகர் வெற்றி.  இந்த  விளையாட்டை ஏனைய தொகுதிகளில் தினகரன் செய்யமாட்டார். ஆர்.கே. நகர் வெற்றி தனக்கானது ஆகையால் அங்கு தாராளாமாகச் செலவு செய்தார். அப்படிச் செலவு செய்து இன்னொருவருக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க அவர் விரும்பமாட்டார். ஆனால் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுக்கு தமிழக அரசைப் புரட்டிபோடும் சக்தி உள்ளது. ஆகையால் எதிர்க்கட்சிகள் இதில் ஆர்வமாக இருக்கின்றன.

தமிழக சட்ட சபையில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியவை. திருவாவூர் கருணாநிதியின் தொகுதி. அங்கு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெறும். அழகிரி பூச்சாண்டி காட்டினாலும் கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் அவரை ஏற்க மாட்டார்கள். ஏனைய 19 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டும். இன்றைய அரசியல் கள நிலவரத்தில் 19  குதிகளிலும் வெற்றி பெறுவதென்பது முடியாத காரியம் கடந்த சட்ட மன்றத் தேதலில் ஜெயலலிதா கைகாட்டியவர்கள்தான் வெற்றி பெற்றார்கள். இப்போது ஜெயலலிதா இல்லை. சசிகலாவின் தயவால் வேட்பாளரானவர்களும் வெற்றி பெற்றார்கள். இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் கோஷ்டிப்பூசல், லேடியின் சொற்படி நடதவர்கள் இப்போ மோடியின் சொற்படி நடக்கிறார்கள், பொதுமக்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டப்படுவதில்லை போன்றவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்கும் வாக்குகளைத் திசைதிருப்பும் காரணிகளாக உள்ளன.


தமிழக சட்ட சபையில் இப்போது சபாநாயகருடன் சேர்த்து 110 உறுப்பினர்கள் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றால் அரசாங்கத்தைக் காப்பாற்றலாம். இல்லையேல் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். ஜெயலலிதா இருக்கும்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர பல கட்சிகள் தயாராக இருந்தன.  இன்று அதனுடன் சேர்வதற்கு எந்தக் கட்சியும் தயாரில்லை. எடப்பாடி தோற்பதையே பன்னீர்ச்செல்வம் விரும்புவார். பாரதீய ஜனதாக் கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

பதவி இழந்த 19 பேரும் மீண்டும் வெற்றி பெறுவதென்பது முடியாத காரியம். கடந்த தேதலில் இவர்கள் வெற்றி பெறுவதற்கு ஜெயலலிதா என்ற இரும்புப்பெண் காரணமாக இருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரட்டை இலை இல்லை. தொகுதியில்  செல்வாக்குள்ள இரண்டொருவர் வெற்றி பெறலாம். அதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தப் பாதிப்பும்  இல்லை. எம்.ஜி. ஆர், ஜெயலலிதா  ஆகியோர் வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டியில் தங்கத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியைத் தக்கவைக்கும் திறமை  அவரிடம் இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ஒட்டப்பிடாரத்தில் போட்டியிட்ட சுந்தரராஜ் 493 வாக்குகளாலும்,
 பெரம்பூரில் போட்டியிட்ட வெற்றிவேல் 519 வாக்குகளாலும் வெற்றி பெற்றனர்.  இடைத் தேர்தல் நடந்தால் இவர்கள் இருவரும் வெற்றி பெறுவது முடியாத காரியம். பனீருக்குச்  செல்வாகுள்ள தேனீத் தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதியில் தினகரன் தரப்பு வெற்றி பெறுவதென்பது சிரமமான  காரியம்.

 தமிழக சட்ட சபையில் 234  உறுப்பினர்கள் உள்ளனர். அறுதிப்பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 88 உறுப்பினர்களும், தோழமைக்கட்சிகளான காங்கிரஸ்ஸுக்கு 8 உறுப்பினர்களும் முஸ்லீம் லீக்குக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தனியரசு, கருணாஸ், தமீன் அன்சாரி ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனர். இவர்கள் ஸ்டாலினை ஆதரிக்கலாம்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரம் எப்படி இருகும் எனத்தெரியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் தமிழகத்தில் என்ன நடக்கிறதென்பது அனைவருக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். மக்கள் நலனில் எதுவித அக்கறையும் இல்லாமல் பதவியைக் காப்பாற்றுவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மத்திய அரசின் சொற்படி ஆடுகிறது. இந்த அரசின் மோசமான நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டு பிரசாரம் செய்யும். கடந்த சட்டமன்றத்  தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்த  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன  ஆதரவளிப்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமடைந்துள்ளது.

கட்சிகளின் வாக்கு வங்கிகள் ஒரு புறம் இருந்தாலும் சாதி என்ற அடையாளம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. வெற்ரி வாய்ப்புள்ள சாதியைப் பார்த்தே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.  தமிழகத்தின் மினித் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகிவிட்டன.  இடைத்  தேர்தல் உடனடியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து  தமிழக இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமாகௌள்ளது.

Friday, October 26, 2018

எடப்பாடியைக் காப்பாற்றிய நீதிமன்றம்



ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை ஆட்டம் காணத்தொடங்கியது. கட்சித் தலைமையைப் பிடிப்பதற்கும் தமிழக  முதல்வராவதற்கும் ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியான சசிகலா முயற்சி செய்தார்.சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றதால் அது பலனளிக்கவில்லை. தர்ம,  அதர்ம யுத்தங்களினால் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.தினகரன், கட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தனக்கு விசுவாசமான தமிழக சட்டசபை உறுப்பினர்களின் உதவியுடன் முதல்வர் கதிரையில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்கு தினகரன் எடுத்த முயற்சியும் நீதிமன்றத் தீர்ப்பினால் தகர்ந்தது
.
முதல்வராகவும் துணை முதல்வராகவும் பதவி வகிக்கும் எடப்பாடியும் பன்னீரும் ஒன்றாக இருப்பது போல் நடித்தாலும் அவர்களுக்கு இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை  அடைந்துள்ளது. முதலமைச்சர் கதிரையில் இருந்து பன்னீரை இறக்கிவிட்டு தான் ஏறி அமர்வதற்கு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார் பன்னீர்ச்செல்வம். சட்டப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அகற்றுவதற்காக எடப்பாடிக்கும் அமைச்சர்களுக்கும் எதிரான ஊழல் புகார்களுடன் நீதிமன்றத்தின் துணையை நாடுகிறார் ஸ்டாலின். பன்னீருக்கும் ஸ்டாலினுக்கும் மத்தியில் எடப்பாடியை அகற்றியே தீருவேன் என அதிரடி காட்டுகிறார் தினகரன். எந்த நேரமும் புன் சிரிப்புடன் காட்சியளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி,   சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு  அரசியற் காய்களை அகற்றி தனது பதவியைக்  காப்பாற்றுகிறார்.

அரசியல் அரங்கில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்காக தினகரனின் விசுவாசிகள் போர்க்கொடி உயர்த்தினர். அதன் உச்சக் கட்டமாக அன்றைய தமிழக பொறுப்பு ஆளுநரான வித்தியாசாகர் ராவைச்  சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை. அவருக்குப் பதிலாக வெறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  நாங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் எனக்கூறிய  19 சட்டசபை உறுப்பிர்களின் செயலால் எடப்பாடி கடும் சீற்றமடைந்தார்.  விளக்கம் கோரி 19 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அவரலில் கமபம் தொகுதி உறுப்பினர் ஜக்கையனின் விளக்கம் ஏற்றுக்கொண்ணப்பட்டது ஏனைய  18 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழக சபாநாயகர் தனபாலின் உத்தரவால் 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 18  ஆம்  திகதி முதல்  18 தொகுதிகள் காலியாகின. அதை எதிர்த்து மறு நாள் தினகரன் தரப்பு  உயர் நீதிமன்றம் சென்றது. நீதிபதிகள் இந்திரா பார்னஜி, சிந்தர் ஆகிய இருவரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதிருப்தியடைந்த தினகரனின் ஆதரவாளர்கள் உச்ச நீதின்றத்தை நாடினர். 18 உறுப்பிஅர்களின் தகுதி நீக்கம் செல்லும்  என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் எடப்பாடியின் பதவி காப்பாற்றப்பட்டுவிட்டது.

எடப்பாடியை எதிர்த்ததனால் 18 உறுப்பினர்கள் பதவி இழந்தனர். கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்தத் தொகுதிகளை எட்டியும் பார்க்கவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களும் தொகுதிப்பக்கம் செல்லவில்லை.  18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் அந்தத் தொகுதி மக்களின் மனநிலை  தெரிந்துவிடும். கருணாநிதி, போஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் மரணமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டிய நிலை உள்ளது.

இன்றைய எடப்பாடியின் அரசு ஒரே ஒரு மேலதிக உறுப்பினரின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 20 தொகுதிகளிலும் தேர்தல்  நடந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் வெற்றி பெறும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிகள் அனைத்துக்கும் ஜெயலலிதாவே பிரதான காரணி. ஜெயலலிதா இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சாத்தியமற்றது என்பதை ஆர்கே நகர் இடைத்தேர்தல்   நிரூபித்துள்ளது. ஆர்கே நகர் போன்றதொரு இன்னொரு வெற்றியை தினகரனால் செய்துகாட்ட முடியாது. எடப்பாடி, தினகரன் ஆகிய இருவருக்கும் 18 தொகுதிகள் மிகவும் முக்கியமானவை. அனைத்துத் தொகுதிகளும் இருவருக்கும் கெளரவப் பிரச்சினையானவை. ஜெயலலிதா என்ற நட்சத்திரம் இல்லாமல் இருவராலும்  வெற்றியைப் பெறமுடியாது.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது,  இடைத் தேர்தலைச் சந்திப்பது, வழக்கை எதிர்கொண்டு இடைத்தேதலைச் சந்திப்பது ஆகிய மூன்ரு தெரிவுகள் தினகரனின் முன்னால் உள்ளன. தினகரனின் முடிவைப் பொறுத்துத்தான் தமிழக அரசியலின் அடுத்த காய் நகர்த்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அதிரடி காட்டாமல் அமைதியாக அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கும் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகும்.  20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு எடப்பாடிக்குப் பாதகமாகத்தான் அமையும் ஆகையால் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் காத்திருக்கிறார்.

Wednesday, October 17, 2018

ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு


அரசியல்வாதிகள் மீது   சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். சிலர் வழக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.  தமது அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டவும் ஊழல் புகார் கைகொடுக்கிறது. மிக நீண்ட கால நீதி விசாரணையின் பின்னர் சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அதில் சம்பந்தபப்ட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தம்மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தி தப்பியவர்களும் உண்டு. பொய்யான புகார்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சம்பவங்களும் உண்டு.

முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறத்தண்டனை பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது தமிழகம். இப்போது முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கபட்டுள்ளது. ஊழல் புகார் எல்லம் பொய் அரசியல் பழிவாங்கல் என  அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்  உள்ளன. தமிழகத்தை உலுக்கிய குட்கா விவகாரம் நிலுவையில் உள்ளது. அதற்கான பனம் கொடுக்கல் வாங்கலுல் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட முன்னாள் இந்நாள் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. அதற்காக விஜயபாஸ்கர்  அலட்டிக்கொள்ளவில்லை. வழக்கைச்  சந்தித்து நான் குற்றமற்றவனென்பதை நிரூபிப்பேன் என்கிறார். அமைச்சர் வேலுமணி மீதும்  புகார் உள்ளது. அதிகார துஸ்பிரயோகம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 3000 பக்க அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ளது. இவற்றை சிபிஐ விசாரித்து வருகிறது.

அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவிக்கிரார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரின்  கீழ் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் 4800 கோடி ரூபா ஊழல் நடந்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாலர் எஸ்.ஆர்.பாரதி இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவித்தார். அந்தப் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை ஹைகோட்டில் புகார் செய்தார் பாரதி.

நெடுஞ்சாலை சீரமைக்கும் ஒப்பந்தங்களை, எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர், நண்பர்கள், பினாமிகள்  பெற்றதால் 4800 கோடி ரூபா ஊழல் நடந்ததாக பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை என முதல்வரின் கீழுள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை  நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனி ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பதவிக்காக எடப்படியும் பன்னீரும் முட்டி மோதுகிறார்கள். முதல்வர் பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்ச்செல்வத்துக்கும் இடையில் பனிப்போர் நடைபெறுகிறது.  அண்ணா திராவிட முன்னேற்றக் க்ழக அதிகாரத்தைக் கைப்பற்றும்போட்டியில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் தற்காலிகமாக இணைந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பத்தை  இருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிரியான தினகரனைச் சந்தித்த விவகாரம் பகிரங்கமானதால் பன்னீர் பரிதவிக்கிறார். தனுடன் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தினகரனை, பன்னீர்ச்செல்வம் சந்தித்த விவகாரம் எடப்பாடிக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் புகார்  எடப்பாடிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

பாரதீய ஜனதாவின்  ஆதரவில் இயங்கும் தமிழக அரசுக்கு நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டுள்ளது.