Thursday, June 11, 2020

இங்கிலாந்து சென்று சேர்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.


 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சர்வதேச அளவில் அனைத்து கிறிக்கெற்  போட்டிகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த முடக்கத்திலிருந்து மீண்டு, மீண்டும் கிறிக்கெற்  போட்டிகளை துவங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்ததை தொடர்ந்து அங்கு மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதையொட்டி மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சென்று சேர்ந்துள்ள நிலையில், இது மிகப்பெரிய முன்னேற்றம் என்று அந்த அணியின் கப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ம் திகதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இதற்கென மேற்கிந்திய தீவுகள் அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் வீரர்கள் நேற்று இங்கிலாந்து சென்று சேர்ந்தனர். முதல்கட்டமாக அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டிகள் மிகப்பெரிய முன்னேற்றம் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். மீண்டும் போட்டிகளில் விளையாடுவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து கப்டன் ஜோ ரூட் தெரிவித்திருந்த நிலையில் ஹோல்டர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக இந்த தொடர் இந்த மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மாதம் தள்ளி நடத்தப்படவுள்ளது. முதல் போட்டி ஜூலை 8ம் திகதி சௌதாம்ப்டனின் ஏஜியஸ் பௌலிலும் அடுத்த இரண்டு போட்டிகள் ஓல்ட் ட்ரபோர்டிலும் நடைபெறவுள்ளன. ஐசிசியும் புதிய வழிமுறைகளை வகுத்துள்ள நிலையில், இதற்கெனவும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வீரர்களுக்கு காலம் தேவைப்படும் என்று கருதப்படுகிறது.

No comments: