Tuesday, June 23, 2020

ஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா

 

மெக்ஸிக்கோவில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. ‘ட்ரிபுள் டமாக்காஎன்று அந்தக் குழந்தைகளின் தாயும், தந்தையும் உற்சாகத்தில் மிதக்க, அந்த உற்சாகம் சில மணித்துளிகளில் பறிபோய் விட்டது. 

அந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை உலகில் எங்கும் இப்படி நடந்ததாக தகவல் இல்லை என்று மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.  ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. 

பொதுவாகவே புதிதாக பிறந்த குழந்தைக்கு அதே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுவது இல்லை. இது கேள்விப்படாத ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை கொரோனா தொற்று உடையவர்கள் அந்த குழந்தையை பார்க்க வந்து, தூக்கி வைத்து கொஞ்சி இருந்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. 

ஆனால் இந்தக் குழந்தைகளை அப்படி யாரும் நெருங்கியதாக தகவல் இல்லை. உரிய நாளுக்கு முன்பாகவே இந்தக் குழந்தைகள் கடந்த 17-ந் திகதி பிறந்தனவாம். அங்குள்ள சான் லூயிஸ் பொட்டோசி மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில்தான் 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை அந்த இளம்தாய் பெற்றெடுத்திருக்கிறார். 

ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உடல்நிலை தேறி வருகின்றன. ஸ்திரமாக இருக்கின்றன. மற்றொரு ஆண் குழந்தைக்கு சுவாச பிரச்சினையால் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த குழந்தைகளுக்கு தாயின் கருப்பையில் இருந்தபோது, கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா வைரஸ் பரவி இருக்க முடியுமா என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். 

 

சமீபத்தில் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள்தான் முதன்முதலாக பிறந்த குழந்தைக்கு தாயின் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா தொற்று பரவியதை கண்டறிந்து கூறி இருந்தார்கள். அதே நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்படாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

No comments: