Wednesday, June 10, 2020

ஐக்கிய அரபு இராஜ்யத்தின் ஹோப் விண்கலம் ஜூலை மாதம் ஏவப்படும்


 ஐக்கிய அரபு இராஜ்யத்தில்  உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலம் வரும் ஜூலை மாதம் 15- ஆம் திகதி ஜப்பானில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதை எடுத்துச் செல்லும் ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ய விண்வெளி திட்டத்தில் செவ்வாய்கிரக பயண திட்டம் முக்கியமான ஒன்றாகும். இந்த பயணத்திற்காகநம்பிக்கை’ (அரபியில் அல் அமல்) என்ற பொருளில்ஹோப்என்ற விண்கலமானது உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விண்கலத்தை 150  ஐக்கிய அரபு இராஜ்ய  பொறியாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக்கி உள்ளனர். அந்த நாட்டின்  50-வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலமானது 1,500 கிலோ எடை உள்ளது. இதில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து இதனால் விண்வெளியில் 600 வாட் மின்சாரத்தை தயாரித்து பேட்டரிகளில் சேமித்து கொள்ளவும் முடியும்.

இந்த விண்கலத்தால் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு 1000 ஜிகாபைட் தகவல்களை அனுப்ப முடியும். அங்கிருந்து சிக்னல் மற்றும் தகவலை பெற 13 முதல் 26 நிமிடங்கள் பிடிக்கும். இந்த விண்கலத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், அங்குள்ள வானில் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் அளவு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக மூன்று சிறப்பு உணரும் பகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன.


இந்த மாபெரும் விண்வெளி பயணம் மிக நீண்ட தொலைவானதாகும். பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் செல்ல 49 கோடியே 35 லட்சம் கிலோ மீற்றர் தொலைவிற்கு இந்த விண்கலம் பயணம் செய்ய வேண்டும். அதற்காக ஹோப் விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 34 ஆயிரத்து 82 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் செலுத்தப்படும்.  பூமியில் இருந்து செவ்வாய்கிரகத்திற்கு இந்த விண்கலம் சென்றடைய 200 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது இந்த ஆண்டு தொடங்கும் பயணம் 2021-வது ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றடையும்.

தற்போது ஜப்பான் நாட்டிற்கு விண்ணில் ஏவ அனுப்பப்பட்டுள்ள இந்த ஹோப் விண்கலம் தலைநகர் டோக்கியோ நகரத்தில் இருந்து 1000 கி.மீ. தெற்கு பகுதியில் உள்ள டனகஷிமா ரொக்கெற் ஏவுதளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு ஹெச் 2 என்ற ரொக்கெற்  மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி    ஐக்கிய அரபு இராஜ்ய  நேரப்படி நள்ளிரவு 12.51 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 7 முதல் 9 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை அடைய உள்ளது. ஒருவேளை தவிர்க்க முடியாத காலநிலை அல்லது சூழ்நிலை ஏற்பட்டால் ஓகஸ்டு மாதம் 13 ஆம் திகதி மாற்று தேகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

No comments: