Tuesday, June 23, 2020

நோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார். 

இதில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இந்தத் தொடரில் கலந்து கொண்ட பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னுடன் நெருங்கி பழகியவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து போர்னா கோரிக், விக்டர் டிரோய்க்கி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த மூன்று பேரும் அந்தத் தொடரில் பங்கேற்றவர்கள்தான்.

மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இதற்கான பொறுப்பை ஜோகோவிச்தான் ஏற்க வேண்டும் என்ற விமர்சனம் எழும்பியது. 

இந்நிலையில் ஜோகோவிச் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதனால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறார். 

‘‘நாங்கள் செர்பியா தலைநகர் பெல்கிரேடு வந்தபோது, டெஸ்டுக்கு உட்படுத்தப்பட்டோம். எனக்கும், எனது மனைவிக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் எங்களுடைய குழந்தைகளுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்இந்த டென்னிஸ் தொடரால் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார் ஜோகோவிக்.

 

No comments: