அமெரிக்க துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளையைச் சேர்ந்த பெண் எம்.பி கமலா ஹரிஸ் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக த்கவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு மாகாண வாரியாக நடந்த வாக்களிப்பில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார்.
இதன் மூலம் அவர் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் இழப்புகள் மற்றும் கறுப்பின மக்களின் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியவை நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜோ பிடன் சூளுரைத்துள்ளார். இதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.அதே சமயம் தன்னுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் ஜோ பிடன் தீவிரம் காட்டி வருகிறார்.
துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி தனது உறுதிப்பாடு மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஒன்றிணைத்து கறுப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் ஜோ பிடன் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த பெண் உறுப்பினர்கள் பலரிடம் ஜோ பிடன் 2 கட்டங்களாக நேர்காணல் நடத்தி முடித்துள்ளார்.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹரிஸ், மாசசூசெட்ஸ் செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய சூசன் ரைஸ் உள்ளிட்டஆறு பேருக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இவர்களில் கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அமெரிக்க அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் கமலா ஹரிஷ் கடந்த ஆண்டு களமிறங்கினார். அப்போது அவர் ஜோ பிடனுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கமலா ஹரிஸ் திடீரென போட்டியில் இருந்து விலகி ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
No comments:
Post a Comment