Saturday, February 19, 2022

மோடியை எதிர்க்க கைகோர்க்கும் முதல்வர்கள்

இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக செயற்படுவதற்கு  பாரதீய ஜனதாக் கட்சி அல்லாத முதல்வர்கள் இணைந்து செயற்பட முயற்சி செய்கின்றனர். மத்திய அரசின் கைப்பாவையாகச்  செயற்படும் முதல்வர்கள் கொடுக்கும் அரசியல் நெருக்கடியால்  மக்களுக்கு  உரிய திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது

மம்தா  இதற்காக முயற்சி செய்து கொண்டிருக்குறார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முயற்சி செய்கிறார். இந்திய நாடாளு மன்றத்துக்கு 2024-ல் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இடன்டு வருடங்கள் இருந்தாலும், பாரதீய ஜனதாவுக்கு  எதிராக தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்க இப்போதே அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்.

இதே முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இருக்கும் நிலையில், அவரை சமீபத்தில் தொடர்புகொண்டு, “மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கும் அவர்களின் அரசியலுக்கும் எதிராக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்என சொல்லியுள்ளார் சந்திரசேகரராவ்.

கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக இந்த மூவரும்  கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். மற்ற சில மாநில முதல்வர்கள் மத்திய அரசை எதிர்த்து வந்தாலும்  இவர்களின்  நிலைப்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

 நாடாளுமன்றத்  தேர்தல் தொடங்கி ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வரை தேசிய அரசியல் களத்தில் இவர்கள் மூவரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் தேசிய அளவில் மாநில கட்சியை சேர்ந்த முதல்வர்களின் புதிய அணி ஒன்று உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.   கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் கேசிஆர் கடுமையாக பேசி வருகிறார். சமீபத்தில் பட்ஜெட் குறித்து பேசிய  சந்திரசேகரராவ், "பிரதமர் பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வையே இல்லை. பாஜகவிற்கு வெட்கம் இல்லை. அந்த கட்சியை வங்கக்கடலில் வீசி எறிந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மை கொண்டு இருக்கிறார்.  பிரதமர் மோடிக்கு விதவிதமாக தொப்பி போடவே நேரம் சரியாக இருக்கிறது. பஞ்சாப் சென்றால் டர்பன், தமிழ்நாடு வந்தால் லுங்கி என்று தோற்றத்தை மாற்றுகிறார். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது. மத்திய பட்ஜெட் என்பதே கோல்மால் பட்ஜெட்தான். நாட்டில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாடு முழுக்க பல லட்சம் மக்களை நான் சந்தித்துள்ளேன். விரைவில் நான் என்னுடைய முன்னேற்ற   திட்டங்களை அறிவிப்பேன்" என்று அவர்  காட்டமாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சந்திரசேகரராவை தொடர்பு கொண்டு அவரது முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான தேவகௌடா.  பாரதீய ஜனதாவுக்கு  எதிரான மாநில முதல்வர்கள் அனைவரிடமும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்கும் சந்திரசேகரராவ், புதிய கூட்டணியை உருவாக்கு முயற்சியின் அடுத்த கட்டமாக தேசிய தலைவர்களையும் மாநில முதல்வர்களையும் சந்தித்து விவாதிக்க இருக்கிறார்.

  முதல் சந்திப்பாக, மகாராஸ்ட்ரா முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவை வருகிற 20‍ந் திகதி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் சந்திரசேகரராவ். இதற்கு முன்னதாக, சந்திரசேகரராவை தொடர்பு கொண்டு பேசிய உத்தவ்தாக்கரே, “தேசத்தின் கூட்டாச்சி தத்துவத்தை பாதுகாக்க நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். நீங்கள் மும்பைக்கு வாருங்கள்;  விவாதிப்போம்என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்தே இரண்டு மாநில முதல்வர்களின் முதல் சந்திப்பு  மும்பையில் நடக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்த மத்திய அரசுக்கு எதிரான அரசியலை நடத்தி வருகிறார். ஒன்றியம் என்ற வார்த்தை பிரயோகம் தொடங்கி நீட் எதிர்ப்பு மசோதா வரை பல இடங்களை முதல்வர் ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதோடு அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மூலம் சமூக நீதி அரசியல் செய்யும் கட்சிகளை ஒருங்கிணைக்க முதல்வர் ஸ்டாலின் முயன்று வருகிறார். தேசிய கட்சிகள் உட்பட 37 கட்சிகளுக்கு இந்த கடிதம் சென்றாலும், வலுவான மாநில கட்சிகளுக்கு விடப்பட்ட அழைப்பாகவே இது பார்க்கப்படுகிறது. ஆளுனருடன் மோதல் தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை இதன் மூலம் ஒருங்கிணைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

இன்னொரு பக்கம் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலின் நிலைப்பாடு எடுத்து வருகிறார். சமீபத்திய முரசொலி கட்டுரை தொடங்கி மதவாத அரசியல் செய்யும் பாஜகவை அம்பலப்படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் சொன்னது வரை பல இடங்களில் ஸ்டாலின் நேரடியாக பாஜகவிற்கும், மோடிக்கும் எதிராக நிலைப்பாடு எடுத்து வருகிறார்.

இந்தியப் பிரதமராவதற்கு மம்தா முயற்சி செய்து வரும் வேளையில் சந்திரசேகரவாவும் பிரதமர் பதவியை நோக்கி காய் நகர்த்துகிறார். ஒரு காலத்தில் மோடியையும் அவரது  ஆட்சியையும் புகழ்ந்து தள்ளிய சந்திரசேகரராவ் இன்று திசை மாரிப் பயணிக்கிறார். பல மாநிலங்களின் அரசியல் மோடி , அமித் ஷா அலையில் மூழ்கியதால் சந்திரசேகரராவ் விழித்துக்கொண்டார்.

தேசிய அளவில் மத்திய  அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக பல்வேறு மாநில முதல்வர்கள் கொதித்து எழ தொடங்கி உள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், மேற்கு வங்க     மம்தா பானர்ஜி ஆகியோர் முக்கிய அரசியல் சக்திகளாக இருப்பார்கள் என்று கணிக்கப்படுகின்றது.

இன்னொரு பக்கம் மம்தா பானர்ஜி தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் பணிகளில் இறங்கி உள்ளார். உத்தர பிரதேசத்தில் அகிலேஷுக்கு ஆதரவு, கோவாவில் போட்டி என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறார். அதிலும் சமீபத்தில் மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப்பை ட்விட்டரில் பிளாக் செய்யும் அளவிற்கு மம்தா பானர்ஜி தீவிரமாக பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். மம்தா.

அதிலும் சமீபத்தில் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் இப்போதே அகிலேஷ் யாதவை ஆதரிக்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தேசிய அரசியலில் குதிக்க வசதியாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இவரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன், உள்ளிட்ட சிலர் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைபிடித்தாலும் இவர்கள் அந்த அளவிற்கு கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 காங்கிரஸை கடுமையாகச் சாடும் மம்தாவும், காங்கிரஸுடன் ஒன்றாகப் பயணிக்கும் ஸ்டாலினும்  இணைந்தால் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன எனும் கேள்விடும் எழுந்துள்ளது.

 பாரதீஜ ஜனதாவுக்கு எதிராக  கைகோர்க்க முயலும் தலைவர்கள் அனைவரும் மாநிலமட்டத்திலேயே செல்வாக்குள்ளவர்கள். தேசியக் கட்சியான காங்கிரஸையும் இணைத்தால்தான் பாரதீய ஜனதாவை வீழ்த்தலாம்.

No comments: