Sunday, February 6, 2022

தமிழக அரசின் கொள்கைக்கு தடைபோடும் ஆளுநர்

இந்தியமத்திய அரசினால் தமிழக மாணவர்களின் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வை  இல்லாதொழிப்பது என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. மாணவர்களுக்கும் மக்களுக்கும் கொடுத்தவாக்குறுதியை   நிறைவேற்றும் மசோதாவ திருப்பி அனுப்பியதால் மத்திய அரசின் கைப்பாவை என்பதை ஆளுநர் நிரூபித்துள்ளார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மறைமுகமாக ஆளுநருக்கும், அரசுக்கு நடுவே இருந்து வந்த உரசல் இன்று பூதாகரமாக வெடித்து கிளம்பி விட்டது.

 தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்ததால், இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மிகவும் பிரயத்தனப்பட்டார். ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் ஆளுநர் ரவி இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை.

  ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபட்திக்கு  அனுப்ப வேண்டும் என்று மக்களவை திமுக குழு தலைவர் டி ஆர் பாலு தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக முயற்சி செய்தபோது அவர் மறுத்துவிட்டார். பாலுவின் காரசாரமான பேட்டியின் பின்னர் அமித் சாஹை சந்தித்து மனு அளித்திருந்தனர். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி பாராளு மன்றத்தில்  உரை நிகழ்த்தியபோது நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் லோக்சபாவில் கோஷங்கள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

 இன்னொரு பக்கம் குடியரசு தினத்தையொட்டி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தமிழக ஆளுநர் ரவி, நீட் தேர்வு ஏழை மாணவ மாணவிகளுக்கு மருத்துவக்கல்வி கனவை நனவாக்க உதவி செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார். குடியரசுத்தலைவர் வாழ்த்துரையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்ததற்கு திமுக தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்துதான் திமுக அதிகாரப் பூர்வ நாளேடு முரசொலியில், தமிழகம் நாகாலந்து கிடையாது என்றும் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற பெயரில் காட்டமான கட்டுரை வெளியிடப்பட்டது. இவ்வாறு இரு தரப்புக்கும் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தான்   நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி.

 அடுத்த கட்டமாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து இதை சரி செய்யலாம் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக ராஜ்யசபா எம்பி மற்றும் வழக்கறிஞரான வில்சன் கூறுகையில், நான்கு மாதங்களாக ஜனாதிபதிக்கு இந்த மசோதாவை ஆளுநர் அனுப்பாமல் இருந்தது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். நீட் தேர்வு எழுதுபவர்கள் கோச்சிங் கிளாஸ் சென்று பணத்தை கொட்டிக் கொடுத்து படிப்பவர்கள்தான். எனவேதான் ஏழை எளியவர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பணம் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என்ற பாகுபாட்டை நீட் தேர்வு உருவாக்கிவருகிறது. இந்த மசோதாவை மறுபடி தமிழக அரசு ஆளுநருக்கு திருப்பி அனுப்ப முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் இதுபற்றி கூறுகையில், அரசு சார்பில் அனுப்பப்படும் மசோதாவை கூடிய விரைவில் பரிசீலனை செய்து ஜனாதிபதிக்கு  அனுப்ப வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால் நீட்தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் மிக பெரிய தாமதம் செய்து வருகிறார். இதையெல்லாம் பார்த்தால் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் சரியான புரிதல் இல்லை என்பது தெரிகிறது. ஆளுநர், நீட் மசோதாவை திருப்பி அனுப்பும்போது ஏன் இதை ஏற்கவில்லை என்ற விவரத்தை குறிப்பிடலாம். ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் கமிட்டி வழங்கிய பரிந்துரை அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதை ஆளுநர் பரிசீலனை செய்து இருக்க வேண்டும். மாநில அரசு மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதை அவர் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. இவ்வாறு ஓய்வு பெற்ற நீதிபதி கற்பகவிநாயகம் தெரிவித்தார்

தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பும் கடுமையாக நிலவி வரும் நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. இதனால் தமிழ்நாடு அரசின் நீட் மசோதாவை அவர் ஏற்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் மசோதாவை தமிழக சபாநாயகருக்கே திருப்பியனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

நீட் தேர்வு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் சமூகநீதிக்கு எதிரானது என கூறி இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த தேர்வுக்கான வினாத்தாள்களை சிபிஎஸ்இ தயாரிப்பதால் மாநில பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாக இருக்கும் என சொல்லப்பட்டது.

இது தொடர்பாக மாணவர்களும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நீட்டால் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த இரு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இந்த வழக்கு விசாரணையின் போது இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் ஜனாதிபதி  கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நிராகரித்து உத்தரவிட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு குறித்த ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி .கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்திடம் ஏகே ராஜன் பரிந்துரை கடிதத்துடன் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர் மாறுதலாகி சென்றுவிட்ட நிலையில் புதிதாக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுக்கின்றன.  அண்மையில் நடைபெற்ற தமிழக தமிழகத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கமும் ,பாரதீய ஜனதாக் கட்சியும் அடைந்த தோல்விகளுக்கு நீட் விவகாரமும்  ஒரு காரணம்.

பாரதீய ஜனதா தனித்துப் போட்டியிடுகிறது. தமிழக மக்களின் விருப்பத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தாமரையை லர வைக்க முடியாதென்பதை அண்ணாமலை அறியும் நாள் தூரத்தில் இல்லை.

No comments: