Monday, January 5, 2015

ஒலிம்பிக்கில் விளையாட நோர்வே மகளிர் அணிதகுதிபெற்றது

ஐரோப்பிய மகளிர் ஹான்ட்போல் சம்பியனான நோர்வேஅணி பிரேஸிலில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுள்ளது. ஹங்கேரியின் தலைநகரமான  புடாபெஸ்டில் ஐரோப்பிய மகளிர் ஹன்ட்போல் சம்பியன்  போட்டி நடைபெற்றது. 

சுவீடன் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்ற நோர்வே  ரியோ 2016 இல் விளையாடும் முதல் அணியாகத்தேர்வானது. போட்டியின் முதல் பாதியில் 12-  10 என சுவீடன் முன்னிலை வகித்தது.  இரண்டாவதுபாதியில் எழுச்சிகண்ட நோர்வே 28-  25 என்றகணக்கில் வெற்றிபெற்றது.ஐரோப்பிய மக்ளிர் ஹான்ட்போல் சம்பியனான நோர்வே தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஒலிம்பிக்கில் விளையாடத்தகுதி பெற்றது. இலண்டன் ஒலிம்பிக்கில் நோர்வே மகளிர் அணி வெண்கலப்பதக்கம் பெற்றது.

ஐரோப்பிய மகளிர் ஹான்ட்போல் சம்பியன் போட்டியில்  14 ஐரோப்பிய நாடுகள் விளையாடின. ஐரோப்பிய சம்பியனான நோர்வேயும் போட்டியை நடத்தும் பிஏஎஸிலும் மகளிர் ஹான்ட்போல் போட்டியில் விளையாடத்  தகுதிபெற்றுள்ளன.தகுதிகாண் போட்டிகளின் மூலம் மேலும் 8 நாடுகள் தெரிவு செய்யப்பட உள்ளன.

ஆண்களுக்கான ஹான்ட்போல் சம்பியன் போட்டி இம்மாதம் 15 ஆம் திகதிமுதல் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதிவரை கட்டாரில் நடைபெற உள்ளது

தமிழ்மிரர்

Saturday, January 3, 2015

அரசியல் அரங்கில் அதிகாரப்போட்டி

இலங்கை சோசலிஸ ஜனநாயக குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் என்றும் இல்லாதவாறு பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் என ஆளும் தரப்பும் எதிரணியும் சொல்கின்றன. அரசியல் தலைமகளின் குத்துக்கரணங்களை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது. ஊழலற்ற ஆட்சியை அமைப்பது. குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவது எனும் மூன்று முக்கிய கருத்துக்களுக்கு உடன்பாடு கண்டு எதிரணியின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வல்லமை யாருக்கும் இல்லை என்ற என்;ற கருத்தை மைத்திரியின் வரவு ஆட்டம் காணவைத்துள்ளது.  தனது சால்வைக்குள் பாதுகாப்பாக இருந்த ஒருவர், தனக்கு எதிராக புறப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
அரசுக்கு எதிரானவர்கள் அனைவருக்கும் புலி முத்திரை குத்துவது வழமையான ஒன்று. மைத்திரிக்கு எதிராக அப்படி ஒரு முத்திரையை குத்த முடியாதுள்ளது. இலங்கையின் புலனாய்வுக் கண்களுக்குத் தெரியாமல், கனகச்சிதமாக பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். பொதுவேட்பாளரைக் களம் இறக்கும் திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பங்கு பிரதானமானது. வேண்டாவெறுப்பாக தனது ஜனாதிபதி பதவியை மஹிந்த் ராஜபக்ஷவிடம் தாரை வார்த்தார் சந்திரிகா பண்டாரநாயக்க. அவருடைய ஒருவருட பதவி சுகமும் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது.
ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறியதும் அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார். மறுபுறத்தில் அவர் மெதுமெதுவாக ஓரங்கட்டப்பட்டார். பண்டாரநாயக்கவின் கட்சி என்ற பரிணாமம் மெதுவாக மறையத்தொடங்கியது. தகப்பன் ஆரம்பித்த கட்சியை திரும்பவும் தனது கையில் எடுப்பதற்கான காலம் வரும்வரை காத்திருந்த அவருக்கு, ஜனாதிபதித் தேர்தல் வரப்பிரசாரமாக அமைந்துவிட்டது.
தேர்தல் தோல்வியில் கின்னஸ் சாதனை என பரிகாசம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதித்தேர்தல் புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இருதுருவங்களாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலில் தமது பொது எதிரியான ஜனாதிபதியை பதவியில் இருந்து இறக்குவதற்காக இணைந்துள்ளனர்.
தமிழ்மக்களைப் பகடைக்காயாக்கி சிங்கள வாக்கு வங்கியை அதிகரிக்கும் செயல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் தொடர்கதையாக உள்ளது.
பண்டா செல்வா, டட்லி செல்வா, இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் எல்லாம் மின்னி மறைந்து போயின. சந்திரிகா, ரணில் ஆகியோரின் சமாதான முயற்சிகள் அப்போதைய எதிரணிகளினால் குழப்பியடிக்கப்பட்டன.
இலங்கையின் பிரதான இரண்டு அரசியல்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலரும், இணைந்து புதிய அரசியல் பாதையை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டாக உடைந்துள்ளன. எஞ்சியிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிரணிக்குத் தாவினர். இன்னும் சிலர் மதில் மேல் பூனையாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என எதிர்க்கட்சிக் கூட்டணி கூறினாலும் சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமது அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவே இந்த அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
தான் ஜனாதிபதியாக முடியாவிட்டால் இன்னொருவரை ஜனாதிபதி பதவியில் இருத்தி அவரின் கையாலேயே ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பறிப்பதே ரணிலின் திட்டம்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்றமுடியாது என அன்றைய விமர்சனங்கள் கூறின. விகிதாசார தேர்தல் முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது இயலாதகாரியம் என கருதப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குத் தேவையான மூன்றில் இரண்டை வெகுசுலபமாகப் பெற்றுவிட்டார். தற்போது பொதுவேட்பாளரின் வரவால் மூன்றில் இரண்டு ஆட்டம் கண்டுள்ளது.
அரசதரப்பில் இருந்து பலர் எதிரணிக்கு தாவிவிட்டார்கள். எதிரணியிலிருந்த சிலர் அரச தரப்புக்கு பாய்ந்துவிட்டார்கள்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோசம் எதிரணியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியில் இருந்து பலர் எதிரணிக்குத் தாவிவிட்டதால், அவர்கள் புனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இராதாகிருஷ்ணன், திகாம்பரம், ரிஷாட் ஆகியோர் பந்தியில் முந்திவிட்டார்கள். கடிதம் எழுதி களைத்துப்போன ஆனந்த சங்கரி, மைத்திரிக்கு ஆதரவு என்கிறார். அவர் வருவார என இரண்டு தரப்பும் யாரையோ எதிர்பார்கிறது. ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோஷமும் ஒருபக்கத்தில் ஒலிக்கிறது.
ஜனாதிபதிப் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை அகற்ற வேண்டும் எனக்கூறும் ஜே.வி.பி சரியான வேட்பாளரை இனங்காட்டவில்லை. ஒளித்து விளையாடிய ரவூப் ஹக்கீமும் எதிரணிக்கு தாவிவிட்டார்.
ஆட்சி அதிகாரம் உள்ளவரை அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டே இருப்பார்கள். அரசியல் அதிகாரம் கைமாறும் போது அவர்கள் மாறிவிடுவார்கள். அரசியல்வாதிகளை நம்பி, கொடி பிடிப்பவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தடுமாற்றத்துடன் முடிவெடுப்பார்கள்.
மக்களை நல்வழிப்படுத்தும் அரசியல் அதிகாரமா, அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் அரசியல் அதிகாரமா என்பதை முடிவு செய்யும் சந்தர்ப்பம் மகா பொது ஜனங்களுக்கு கிடைத்துள்ளது. ஆள், அம்பு, படை, சேனை என்பன அரசியல்வாதிகளிடம் இருந்தாலும் வெறும் புள்ளடியால் அரசியல் அதிகாரத்தை மாற்றும் சக்தி மக்களிடம் உள்ளது.

Monday, December 29, 2014

திரைப்படங்களில் நிலவு

கமலஹாசன் நடித்த ‘பம்மல் கே சம்பந்தம்' திரைப்படத்தில் தேவாவின் இசையில் வெளிவந்த ‘சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே' பாடலை மீண்டும் கேட்ட பொழுது கவிஞர் வாலியும் கவியரசு கண்ணதாசனும் நிலவு குறித்து தத்தமது பாடல்கள் வாயிலாக சர்ச்சையில் ஈடுபட்டது நினைவுக்கு வந்தது.
பொதுவாக இலக்கியத்திலும் சரி சினிமாவிலும் சரி கவிஞர்கள் பெண்ணைத்தான் நிலவுக்கு ஒப்பிட்டுப் பாடல்களும் கவிதைகளும் புனைந்திருப்பார்கள். ஆனால் கவிஞர் வாலி ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் எழுதிய பாடல் ஒன்று தான் ‘அவன் ஒரு நிலவு’ என்ற பாடல். சறோஜாதேவி எம்.ஜி.ஆரை நினைத்துப் பாடுவதாக அமைந்த இந்தப்பாடல் துரதிஸ்டவசமாக திரைப்படத்தில் இடம்பெறவில்லை. இந்தப்பாடலில் உள்ள சிறப்பு என்னவெனில் இந்தப்பாடலில் நிலவை ஆண்பாலாக்கி இருப்பார் கவிஞர் வாலி அவர்கள்.
இந்தப் பாடலைப் பற்றி கேள்விப்பட்ட கவியரசு கண்ணதாசன் கவிஞர் வாலியைப் பார்த்து ‘சந்திரனை நீ எப்படி ஆண்பாலாக்குவாய்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு வாலி நீங்களே ஒரு திரைப்படத்தில் 
‘பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்'
என்று ஒரு பெண் பாடுவதாக பாடல் எழுதி உள்ளீர்களே என்று கேட்டதற்கு கவியரசு கண்ணதாசன் அது படத்தில் வருகின்ற நாயகனின் பெயர் சந்திரன் என்பதால் அவ்வாறு எழுதியதாகக் கூறியிருந்தார்.
அதுபோல கவிஞர் வைரமுத்து ‘சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே’ பாடலிலும் கதாநாயகனை ‘சலவை செய்த சந்திரனே’ என்று வர்ணித்து பாடல் எழுதியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து சந்திரனை சலவை செய்வதாய் பாடல் புனைந்திருப்பது இது முதற் தடவை இல்லை என்றாலும் அது பாடலாக திரைப்படம் ஒன்றில் வெளிவந்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். முன்னதாக 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படத்துக்காக அவர் எழுதிய ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் பல்லவியை முதலில் அவர் 'சலவை நிலா பொழிகிறதே என்று எழுதிக் கொடுத்துள்ளார். ஆனாலும் நிலவை சலவை செய்ய இயக்குனருக்கும் வேறு சிலருக்கும் பிடிக்கவில்லை என்பதனால் இறுதியாக ‘இளைய நிலா பொழிகிறதே' என்று மாற்றியதாக கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மௌனத்தின் சப்தங்கள்’ நூலில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலா, வெண்ணிலா, வான்மதி, சந்திரன் போன்ற சொற்களைக் கொண்டு எத்தனையோ பாடல்கள் தோன்றியுள்ளன. பெண்ணை நிலவுக்கு ஒப்பிட்டும் வர்ணித்தும் தமது ஏக்கத்தினையும் பரிதவிப்பினையும் நிலவிடம் கூறுவது போலவும்
1. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ (உலகம் சுற்றும் வாலிபன்)
2. வானில் முழு மதியைக் கண்டேன் வனத்தில் (சிவகாமி) 
3. என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்)
4. நாளையிந்த வேளை பார்த்து ஓடி வாநிலா (உயர்ந்த மகனிதன்)
5. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையே (மிஸியம்மா)
6. ஓஹோ வெண்ணிலா எந்தன் வெண்ணிலா வண்ணப் பூச்சூடவா (ராணி சம்யுக்தா) 
7. நிலவே என்னிடம் நெருங்காதே நீ (ராமு)
8. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (பொலிஸ்காரன் மகள்)
9. நிலவைப் பார்த்து வானம் சொன்னது (சவாலே சமாளி)
10. சந்திரனைப் பாராமல் அல்லி முகம் மலருமா? (குலமகள் ராதை)
11. வான் மதியே ஓ வான்மதியே (அரண்மனைக்கிளி)
12. வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?
(மின்சாரக்கனவு)
13. வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா (லேடீஸ் அண்ட் ஜென்டில்மன்)
14. வெண்ணிலவுக்கு வானத்தை புடிக்கலியாம் (தாலாட்டுப் பாடவா)
15. வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏன் அம்மா? (காலமெல்லாம் காதல் வாழ்க)
16. வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா(பட்டினப் பிரவேசம்)
17. நிலாவே வா செல்லாதே வா (மௌன ராகம்)
18. நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் (என்றும் அன்புடன்)
19. நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து (எஜமான்)
20. வண்ணநிலவே வண்ணநிலவே (நினைத்தேன் வந்தாய்)
21. வண்ண நிலவே வைகை நதியே (பாடாத தேனீக்கள்)
22. நிலவொன்று கண்டேன் உன் ஜன்னலில் (கைராசிக்காரன்)
23. நிலவே நிலவே தாளம் போடு (தை பொறந்தாச்சு)
24. வா வெண்ணிலா உன்னைத் தானே (மெல்லத் திறந்தது கதவு)
25. நிலவு தூங்கும் நேரம் நினைவு (குங்குமச்சிமிழ்)
26. நிலா காய்கிறது நிறம் தேய்கிறது (இந்திரா)
27. நிலா காயுது நேரம் நல்ல நேரம் (சகலகலா வல்லவன்)
28. நிலவே மலரே சரிகமபதநி பாடு (பெரியண்ணா)
29. நிலவும் மலரும் பாடுது (தேன் நிலவு) 
30. நிலவுப்பாட்டு நிலவுப் பாட்டு (கண்ணுக்குள் நிலவு) 
31. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே (நந்தவனத் தேரு)
32. வெண்ணிலவு கொதிப்பதென்ன (சின்ன மாப்பிள்ளை)
33. இளையநிலா பொழிகிறதே (பயணங்கள் முடிவதில்லை)
34. வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே (வேட்டையாடு விளையாடு)
35. சந்திரனைத் தொட்டது யார் (ரட்சகன்)
36. ஓ வெண்ணிலா இரு வானிலா (காதல் தேசம்)
37. வெண்ணிலவை முதன்நாள் இரவில் ( உழைத்து வாழ வேண்டும்)
38. வெள்ளி நிலவே நீலக்கடலே (பாட்டு வாத்தியார்)
39. சந்திரனைக் கூப்பிடுங்க தாலாட்டுப்பாட (மறவன்)
40. வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவில் (இருவர்)
41. வெண்ணிலாவின் தேரிலேறி காதல் தெய்வம் (டூயட்)
42. ஆகாய வெண்ணிலாவே தரைமீது (அரங்கேற்ற வேளை)
43. வானிலே தேனிலா ஆடுதே பாடுதே(காக்கிச்சட்டை)
44. கல்யாணத் தேன் நிலா (மௌனம் சம்மதம்)
45. நந்தா என் நிலா (நந்தா என் நிலா)
46. வான் நிலாவே வான்நிலவே வாழ்வில் வந்தது (மன்னவரு சின்னவரு)
47. நிலவே நிலவே நிலவே கொஞ்சம் நில்லு (நிலாவே வா)
48. நிலவை நிலவை இப்ப நான் புடிக்கும் ( காத்திருந்த கண்கள்)
49. மஞ்சள் நிலாவின் அழகில் (திருமூர்த்தி)
50. வாராயோ வான்மதி ( பகல்நிலவு)
51. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா( ஆனந்தக்கும்மி)
52. வெண்ணிலா ஜோதியை வீசுதே ( மணமகன் தேவை)
53. ஓ வெண்ணிலாவே ( பிரேம பாசம்)
54. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா ( மஞ்சள் மகிமை)
55. வெண்ணிலவு தரையில் உதித்தாள் (துப்பாக்கி)
56. வெண்ணிலவைத் திருடிக் கொள் உயிரே (ஆசையில் ஓர் கடிதம்)
57. முழுமதி அவளது முகமாகும் (ஜோதா அக்பர்)
58. வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் (கண்ணன் வருவான்)
59. நிலவே வா அழைக்குது அழைக்குது வானம் (எங்கிருந்தோ வந்தான்)
60. நிலாவில் வீடு செய்வோமா (குபேரன்)
61. சந்திர மண்டலத்தில் புத்தம் புது (நிலாவே வா)
62. வெண்ணிலா வெளியே வருவாளா (உனக்காக எல்லாம் உனக்காக)
63. மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே)
64. நிலவொண்ணு பத்திக்கிச்சு என்னவாச்சு (எதிரும் புதிரும்)
65. நிலாவிலே நிலாவிலே நான் உன்னை (ஆகா எத்தனை பொருத்தம்)
போன்ற பல பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்றிருப்பினும் நிலவை ஆண்பாலாக்கி சித்திரித்தவையாக கவிஞர் வாலியினதும் கவிஞர் வைரமுத்துவினதும் மேற்கூறிய இரண்டு பாடல்களுமே எனக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்றன
சின்னராஜ விமலன்

Sunday, December 28, 2014

ஒலிம்பிக் தொண்டர் சேவைக்கு அதிகளவான விண்ணப்பங்கள்

 பிரேஸிலில் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தொண்டர்களாக கடமையாற்ற 240,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியை ஒழுங்கமைப்பதற்கான தொண்டர்களின் சேவை 1948ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. 7000 தொண்டர்களின் உதவியுடன் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. ஒலிம்பிக்போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உதவி புரிவது, மைதானம் பராமரிப்பது உணவு வழங்குவது போன்ற பல பணிகளில் இவர்கள் சிறந்த முறையில் கடமையாற்றினார்கள். பிரேஸில் ஒலிம்பிக்கில் தொண்டர்களாக கடமையாற்ற 191 நாடுகளிலிருந்து 240,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இல்ங்கிலாந்து ஆகிய நடுகளில் இருந்து அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் 70,000  பேர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 

அவர்கள் அழட்டும்

 

அமானுஷ்ய உறைவின்
ஏகாந்த வெளியில்
அவர்கள்
ஒரு தசாப்த நினைவில்
உருகிப்போனர்கள் .
எதுவுமற்ற காற்று வெளியிடையே
அவர்கள்
கண்ணீரின் உப்பு நிறைந்திருந்தது .
விதைப்பு நிலத்தின்
குறும் பரப்பினுள்
மண் திட்டுக்களை
கட்டி அணைத்து
ஓலங்கள் நிறைய முத்தமிட்டுக்
கொண்டிருக்கின்றார்கள் .
ஆறாத மன வடுக்களோடு
ஆழியின் கோரத்தை எண்ணி
நம்பிக்கையீனங்களை நிலையிருத்த்தி
வெந்து கொண்டிருந்தார்கள் .
ஆண்டுகள் ஆனாலும்
உப்பு நிலத்தினிடையே
உருக்குலையாது
உறங்கும் தம் செல்வங்களை
தாலட்டு பாடி செல்லம்
பொழிந்து கொண்டிருக்கின்றாள்
ஓர் அபலைத் தாய் .
அலையாய் இதம் தரினும்
ஆழியின் ஒரு நொடிப்பொழுது
கோரத்தண்டவத்தை
மன்னிக்க முடியாது
ஆழியை வெறித்துப்
பார்த்துக்கொண்டிருந்தான்
மூன்று செல்வங்களை
அலைக்கு கொடுத்த ஓர்
ஏழைத் தகப்பன் .
ஓலத்தின் வெளியாகி
உயிர் நிகழ் வெளி
காட்டாற்று துயர அரங்காய்
காட்சியானது .
தயவு செய்து
அழுபவர்களை ஆற்றுப்படுத்தும்
எங்கள் உறவுகளே
விடுங்கள்
தயவு செய்து அவர்களை
நிம்மதியாக தன்னிலும்
அழ விடுங்கள் .
அழுகைகள் கூட
மட்டுப்படும்
நிலவெளியில்
அவர்கள் இன்றாவது அழட்டும் .
அவர்களை தடுக்காதீர்கள்
காரணம்
அவர்கள் எல்லாவற்றிற்கும் சேர்த்து
அழுது கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நிம்மதியாய் அழட்டும்
அவர்கள் அழட்டும் .
-----------'''''------------------"""""""--------------
வெற்றி துஷ்யந்தன் 26.11.2014.

Monday, December 8, 2014

பலோன் டிஓ விருதுக்கு கடும் போட்டி

விளையாட்டுமைதானத்தில் தமது அணியின் வெற்றிக்காக போராடிய கிறிஸ்ரியானோ ரொனால்டொ லியனல் மேசி ஆகிய இருவரும் சிறந்த 
வீரரிக்கன போட்டியிலும் முட்டி மோதுகின்றனர். இவர்களுக்குப்போட்டியாக ஜேர்மனியின் கோல்கீப்பர் மனுவல் நெயூரும் களத்தில் உள்ளார்.சிறந்தவீரர்,சிறந்த வீராங்கனை,சிறந்த பயிற்சியாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கிவருகிற‌து பீபா. 1956 ஆம் ஆண்டு பலோன் டிஓ  விருது அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கிலாந்து வீரர் ஸ்ரான்லி மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். 12 அம்திகதி விருது பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படும்.

 சிறந்த வீரருக்கான பலோன் டிஓ விருதுக்காக சிறப்பாகசெயற்பட 23 விரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. உலகக்கிண்ண சம்பியனான ஜேர்மனியின் ஆறு வீரர்களும் ஜேர்மனியிடம் தோல்வியடைந்த  ஆர்ஜென்ரீனாவின் மூன்று வீரர்களும்  பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்தனர். இங்கிலாந்து பிரிமியர் லீக் தொடரில் விருது பெற்ற செளரஸின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. உல‌க‌க்கிண்ண‌ப்போட்டியில்  விளையாடிய‌ அவ‌ர் இத்தாலிய வீர‌ரின் தோள்ப‌ட்டையைக்க‌டித்த‌ப‌டியால் இந்த‌ச்ச‌ந்த‌ர்ப்பத்தை இழ‌க்க‌ நேர்ந்த‌து.  தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் பரிந்துரைக்கப்படவில்லை.
2008 ஆம் ஆண்டு ப‌லோன் டிஓ விருதை ரொனால்டோ பெற்றார்.
2009 ஆம் ஆண்டுமுத‌ல் 2013 ஆம் ஆண்டுவ‌ரை இந்த‌விருது மேசி வ‌ச‌மான‌து. 2013 அம் ஆண்டு மேசியிட‌மிருந்த‌ விருது ரோனால்டோவ‌ச‌மான‌து.ரொனால்டோ மூன்றாவ்து முறையும், மேசி ஐந்தாவ‌து முறையும் விருதை வெல்ல‌க்காத்திருக்கிறார்க‌ள்.இவ‌ர்க‌ளுட‌ன் ம‌னுவ‌ல் நொய‌ர் முத‌‌ல் முத‌லாக‌ இருத‌ எதிர்ப‌ர்த்துக் காத்திருக்கிறா. முன்ன‌தாக‌ 1963 ஆம் அண்டு சோவியத்யூனிய‌ன் கோல்கீப்ப‌ர் லீகா ய‌சின் இந்த‌ விருதை வென்றார். அத‌ன் பின்ன‌ர் இப்போதுதான் கோல்கீப்ப‌ர் ஒருவ‌ர் இந்த‌விருதை நோக்கி முன்னேறி உள்ளார்.


ச‌ம்பிய‌ன் லீக்கில் ரொனால்டோ 33 கோல்க‌ள் அடித்துள்ளார்.13 கோல்க‌ள் அடிக்க‌ உத‌வி செய்துள்ளார். மேசி 30கோல்க‌ள் அடிட்தார். 14 கோல்க‌ள் அடிக்க‌ உத‌வி  செய்துளார். நோய‌ர் அபார‌மாக‌ விளையாடி 16 கோல்க‌ளைத்த‌டுத்துள்ளார். உலகக்கிண்ணப்போட்டியில் மேசி தங்கக்காலணியையும், நோயர் தங்கக்கை உறையையும் பெற்றனர்.

ஜேர்ம‌னி,பிறேஸில்,அமெரிக்கா,ஸ்பெய்ன்,ஜ‌ப்பான், சுவீட‌ன்,பிரான்ஸ் ஆ‌கிய‌ நாடுக‌ளைச்சேர்ந்த‌ 10வீராங்க‌னைக‌ள் சிற‌ந்த‌ வீரர்கனை விருதுக்காக  ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஜேர்ம‌னியின் ந‌டீன் கெல்ல‌ர், பிறேஸில்வீர‌ங்க‌னை மாதா, அமெரிக்காவின் அபி வ‌ம்பெச் ஆகியோர் இறுதிப்ப‌ட்டிய‌லில் உள்ள‌ன‌ர்.


இத்தாலி,ஜேர்ம‌னி,ஆர்ஜென்ரீனா,ஸ்பெய்ன்,போத்துக‌ல்,சிலி,ஆஜென்ரீனா,நெத‌ர்லாந்து ஆகிய‌ நாடுக‌ளைச்சேர்ந்த‌ 10 ப‌யிற்சியாள‌ர்க‌ள் சிறந்த  ஆண்ப‌யிற்சியாள‌ர் ப‌ட்டிய‌லில் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இத்தாலியைச்சேர்ந்த‌ காலோஏன் செட்டி ,இவ‌ர் ரியல் ம‌ட்ரிட் அணியின் ப‌யிற்சியாள‌ர். ச‌ம்பிய‌ன் லீக் கிண்ண‌த்தை வென்ற‌ ப‌யிற்சியாள‌ராக‌ உள்ளார். உல‌க‌க்கிண்ண‌ச்ச‌ம்பிய‌னான‌ ஜேர்ம‌னியின் ப‌யிற்சியாள‌ர் ஜோகிம் லோ,உல‌க‌க்கிண்ண‌ இறுதிப்போட்டியில் ஜேர்ம‌னியிடம் தோல்விய‌டைந்த‌ ஆர்ஜென்ரீனாவின் ப‌யிற்சியாள‌ர்  டீகோ சைம‌ன் ஆகிய‌மூவ‌ரும் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்ற‌ன‌ர்.


மிக‌ச்சிற‌ந்தாகோல் அடித்த‌த‌ற்காக‌ புஸ்கிவிருது வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ உள்ள‌து.ஜேம்ஸ் ரொட்ரொட்டிக‌ஸ்[கொலம்பியா], ரொபின் வ‌ன் பீரிஸ் [நெத‌ர்லாந்து],இப்றாஹிமிவோச் [சுவீட‌ன்] உட்ப‌ட‌ 10வீர‌ர்க‌ளுட‌ன் அய‌ர்லாந்துவீராங்க‌னை ஸ்டெபானி ரோஷேயின் பெய‌ரும் முத‌ல்ப‌ட்டிய‌லில் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌து.
ரொபின் வ‌ன் பீரிஸ்,ஜேம்ஸ் ரொட்டிக‌ஸ்,ஸ்டெபிபானி ரோஷே ஆகிய‌ மூவ‌ரும் இறுதிச் சுற்றில் போட்டியிடுகிறார்க‌ள்.
 இவைத‌விர‌ பீபாவின் உல‌க‌ அணிக்காக‌  வீர‌ர்கள்  தேர்வு செய்ய‌ப்ப‌ட‌ உள்ளார்க‌ள்.தேசிய அணியின் பயிற்சியளர்கள்‌,அணித்த‌லைவ‌ர்க‌ள்,ப‌த்திரிகைய‌ள‌ர்க‌ள் ஆகியோர் இந்த‌ விதுதுக‌ளுக்குரிய‌வ‌ர்களைத் தெரிவுசெய்வதற்கு வாக்க‌‌ளிப்பார்க‌ள்.

தமிழ்மிரர்

Saturday, November 8, 2014

தனி மரமான வாசன்

 இந்திய  நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் வெளியேறப்போகிறார்  என்ற  செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.  தே ர்தலின்போது ஏற்பட்ட எதிர்பார்ப்பை வாசன் பொய்யாக்கினார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.  ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மேலிடம் அவர் மீது நம்பிக்கை இழந்தது. அவர் விரும்பிய சிலர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கவில்லை. இதை எல்லாம் மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸில் பல கோஷ்டிகள் உள்ளன. வாசன் தலைமயிலான கோஷ்டி மிகப்பலமானது  1996 ஆம் ஆண்டு வாசனின் தகப்பன் ஜி.கே .மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  இணைந்து போட்டியிட்ட அவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது. ஊழல் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்வதை எதிர்த்து முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் க ழகத்துடன் இணைந்து படு தோல்வியடைந்தார்.
புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான எந்தவிதமான சூழ்நிலையும் இப்போது இல்லை. ஆனாலும் துணிந்து  கட்சியை  ஆரம்பித்து விட்டார் இளங்கோவன். காங்கிரஸ் கட்சியின் உள்ளே கனன்று கொண்டிருந்த அனல் வெளிப்பட்டுவிட்டது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமைப் பொறுப்பில்  இருந்து ஞானதேசிகன் இராஜினாமா செய்தபின்னர்  வாசன் புதிய கட்சியைப்பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தபோது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்தது. இப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை உள்ளது . அந்த அலையால்  வாசனுக்கு எந்தவிதமான விதமான இலாபமும் இல்லை. எழமுடியாத  அதல பாதாளத்தில் காங்கிரஸ் கட்சி விழுந்துள்ளது. தமிழகத்தில் இப்போது தேர்தல் நடைபெறும் சூழல் இல்லை. ஆகையினால் வாசனின் புதிய கட்சியுடன் இணைவதற்கு பெரிய கட்சிகள் இப்போதைக்கு தயாராக இல்லை. தேர்தல் நெருங்கும் போது பெரிய கட்சிகள் தன்னைத்தேடி வரும் என வாசன் நம்புகிறார்.


முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தபோது ப.சிதம்பரம்,ஜெயந்தி நடராஜன்,ஆதித்தன், அருணாசலம், தனுஷ்கோடி ஆனந்தன் , எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் போன்ற தலைவர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால் வாசனுக்கு ஆதரவாக ஞானதேசிகனைத்தவிர வேறு யாரும் இல்லை. ஞான‌தேசிகனுக்கு மக்கள் ஆதரவு இல்லை.



ஞானதேசிகன் இராஜினாமாச்செய்த உடனே  இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ராகுல், சோனியா ஆகியோருக்கு விசுவாசமானவர் இளங்கோவன். மூப்பனார் காங்கிரஸில் இருந்து பிரிந்துபோய் புதிய கட்சியை ஆரம்பித்தபோதும் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். மூப்பனாரின் மகன் இப்போது காங்கிரஸில் இருந்து பிரிந்தப்போதும் தலைமைப் பதவி இளங்கோவனைத் தேடிவந்துள்ளது. பிரிந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற  கழகம் ஆகியவற்றுடன்  கூட்டணி சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் இளங்கோவன். காங்கிரஸை தூக்கி நிறுத்த வேண்டிய தலையானபணி இளங்கோவனுக்கு உள்ளது.   நேருகுடும்பத்துக்கு  வெளியே உள்ள ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என  சிதம்பரம் கூறி உள்ளார். இதனை ராகுலும்,சோனியாவும் ரசிக்கவில்லை.  ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் இராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார். இதுவும் சிதம்பரத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. ஆகையினால் அடுத்தகுறி சிதம்பரமாக இருக்கலாம். அப்படி ஒருநிலை ஏற்பட்டால் அவர் வாசனுடன் சேர்ந்துவிடுவார். அது வாசனுக்கு பெரும் பலமாக அமைந்துவிடும்.
தமிழகத்தில்  ஏதாவது மாற்றங்கள் செய்யும்போது தமிழகத் தலைவர்களுடன் ஆலோசனை செய்வது வழமை . இளங்கோவனைத் தலைவராக்கியபோது ஒப்புக்குக்கூட யாரையும் கலந்தாலோசிக்கவில்லை.  இளங்கோவனைத்  தவிர மற்றவர்களை மத்திய காங்கிரஸ் தலைவர்கள் நம்பவில்லை. இதனால் இளங்கோவன் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்க உள்ளார். இதனால் தமிழக காங்கிரஸில் மாற்றங்கள் ஏற்படும் நிலை உண்டாகும். இது வாசனுக்கு சாதகமாக அமையும்.