Friday, November 19, 2021

இங்கிலாந்தை கட்டாருக்கு அழைத்துச் சென்ற‌ ஹரிகேன்


 ஐரோப்பாக் கண்டத்தில் நடந்த உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிப் போட்டியில்  சான் மரினோவை 100 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து கட்டாரில் நடக்கும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

சான் மரினோவுக்கு எதிரான போட்டியை சமப்படுத்தினாலே இங்கிலாந்து தகுதி பெற்று விடும் நிலை இருந்தது. இங்கிலாந்து வெற்றி பெறும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், இப்படியான பிரமாண்டமான  வெற்றியை இங்கிலாந்து பெறும் என எவரும் நினைத்துப் பார்க்கவில்லை.

  உதைபந்தாட்ட உலகில் திறீ லயன்ஸ் என அழைக்கப்படும்  இங்கிலாந்து 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிரான சினேக பூர்வ போட்டிக்குப் பின்னர் 10 கோல்கள் அடித்து சாதனை செய்துள்ளது.  இந்த 10 கோல்களில் சான் மாரியோவின் பிலிப்போ ஃபேப்ரியின் சொந்த கோலும் அடக்கம். இடைவேளைக்கு முன்னர் நான்கு கோல்கள் அடித்து இங்கிலாந்தை வலுவாக்கினார் கப்டன் ஹரி கேன். இங்கிலாந்தின் மத்தியகள வீரர் எமிலி ஸ்மித் ரோவ் தனது முதல்  சர்வதேச கோலை  அடித்தார்.டைரோன் மிங்ஸ் தனது முதல் இங்கிலாந்து கோலைத் தலையால் அடித்தார், டாமி ஆபிரகாம் , புகாயோ சாகா ஆகியோரும் கோல் அடித்தனர்.

1908 இல் ஜார்ஜ் ஹில்ஸ்டன், 1927 இல் டிக்ஸி டீன் ஆகியோரின் 12-கோல்களை  ஹரி கேன் முறியடித்தார். 2021 இல் இங்கிலாந்துக்காக அவர் இது வரை  16 கோல்களை அடித்தார் 28 வயதான ஹரி கேன்,  கேரி லினேக்கரின் சாதனையான  இங்கிலாந்துக்கான 48 கோல்களைச் சமப்படுத்தினார்.பாபி சார்ல்டன் (49) , வெய்ன் ரூனி (53)  முன்னைலையில் உள்ளனர்.

ஜூலை மாதம் யூரோ 2020 இறுதிப் போட்டியில்  பெனால்டியில் இத்தாலியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது. யூரோ கிண்ண சம்பியனான  இத்தாலி பிளே ஓஃப் போட்டியில் விளையாடக் காத்திருக்கிறது.

No comments: