Tuesday, November 2, 2021

மோசமான நடத்தைக்காக அபராதம் விதித்த பீபா


 சமீபத்திய சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளில் இனவெறி தாக்குதல், பட்டாசு வெடித்தல், போத்தல் போன்ற பிற பொருட்களால் எறிதல்போன்ற  மோசமான நடத்தைக்காக 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக பீபா கடந்த  திங்களன்று அறிவித்தது.

உலக உதைபந்தாட்ட  ஆளும் குழுவின் ஒழுங்குமுறைக் குழுவின் தீர்ப்புகளின் பட்டியலில், ரசிகர்களால் இனவெறி கோஷம் எழுப்பப்பட்டு, புகை குண்டுகள் மற்றும் தடுக்கப்பட்ட படிக்கட்டுகள் உட்பட பாதுகாப்பு மீறல்கள் ஆகியவை அடங்கும்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன வெறி கோஷம் எழுப்பப்பட்டு போத்தல்கள் எறியப்பட்டதால் ஹங்கேரிக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

ஒரு போட்டி ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கினுள் நடைபெற்றது. ஒன்னொரு போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதேவேளை  வெளிநாட்டில் ந்டைபெறும் ஹங்கேரியின்  போட்டிக்கு அந்தாட்டு ரச்கர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. 281,000 சுவிஸ் பிராங்குகள் (266,000 யூரோக்கள்) அபராதம் ஆகியவற்றால் ஹங்கேரி பாதிக்கப்பட்டுள்ளது.

அல்பேனியா, மெக்ஸிக்கோ, பனாமா ஆகிய நாடுகளிலும் ரசிகர்கள் இல்லாமல் மூடிய   அரங்கத்தில் போட்டிகள் நடைபெற்றது.அதே நேரத்தில் போலந்து ரசிகர்கள் ஒரு வெளிநாட்டு போட்டியைப் பார்வையிடத்தடை விதிக்கப்பட்டது.

அர்ஜென்டீனா, சிலி, எல் சால்வடார், ஹோண்டுராஸ், மாண்டினீக்ரோ, பெரு ஆகிய நாடுகள் அனைத்தும் "குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களுடன்" விளையாட வேண்டும்.

பொலிவியாவுக்கு எதிரான   ஆட்டம் தாமதமாக துவங்கியதால் அர்ஜென்ரீனாவுக்கும் எச்சரிக்கை கிடைத்தது, உருகுவே சென்றபோது ரசிகர்களின் "பாரபட்சமான நடத்தை" காரணமாக ரசிகர்களின் தடைக்கு கூடுதலாக 30,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

செப்டம்பர் தொடக்கத்தில் ஸ்ட்ராஸ்பேர்க்கில் பொஸ்னியா-ஹெர்ஸகோவினாவுடன் போட்டியின்  போது ஆதரவாளர்கள் முகமூடி அணியாததால் உலக சாம்பியனான பிரான்ஸுக்கு 2,000 சுவிஸ்-ஃபிராங்க் அபராதம் மற்ற தண்டனைகளில் அடங்கும்.

இரண்டாம் உலகப் போரில் நாஜிகளுக்காகப் போரிட்ட சோவியத் யூனியனைச் சேர்ந்த வீரர்களுக்கு ரசிகர்கள் பதாகையைக்  காட்டியதால் கஜகஸ்தானுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ட்ரோன் தேசிய கீதத்தை இடைமறித்ததால் மால்டோவா தண்டிக்கப்படது.

 

No comments: