Sunday, November 28, 2021

இந்திய அரசை திணறடித்த விவசாயிகளின் போராட்டம்


 மோடியின் தலைமையிலான இந்திய அரசங்கத்தினால் அமுல்படுதப்பட்ட மூன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடமாக நடைபெற்ற போராட்டம்  வெற்றி பெற்றுள்ளது.எதிரணி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காது ஏழு வருடங்களாக  செய ற்பட்ட மோடி முதன் முதலாக விவசாயிகளின் போராட்டத்துக்கு  அடிபணிதுள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது.விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்ட திருத்த மசோதா, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், நாடாலுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த சட்டங்கள் அமுலுக்கு வந்தன. இதற்கு ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் முதல், டில்லியின் எல்லைகளில் மூன்று மாநிலங்களின் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ஆறு சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையில் இந்த சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மூன்று சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது; விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்தது.

 கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற பிறகு பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை பிரதமர் மோடி எடுத்த நிலையில், கடும் விமர்சனம், எதிர்ப்பு என எதற்கும் அவர் பின்வாங்கியதே இல்லை. ஆனால் விவசாயிகள் விவகாரத்தில் பிரதமர் மோடி பின்வாங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியின்  ஆட்சியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து, குடியுரிமை சட்ட திருத்தம், ஜிஎஸ்டி அமுல் என பல்வேறு முக்கிய விஷயங்கள் நடைமுறைக்கு வந்தன. இவற்றுக்கும் கடும் எதிர்பபுகள் எழுந்தன. ஆனால் தன் முடிவில் மோடி உறுதியாக இருந்தார். ஆனால் இந்த உறுதி விவசாயிகள் விவகாரத்தில் மோடியிடம் இல்லாமல் போனது. அதனால் தான் இந்திய விவசாயிகளின் நெஞ்சுரத்துடன் கூடிய போராட்டம் தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது

இந்திய நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட பின், பல மசோதாக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அதில் முக்கியமான இரண்டு மசோதாக்கள்:

* காங்கிரசைச் சேர்ந்த ராஜிவ் பிரதமராக இருந்த போது, 'இந்திய தபால் அலுவலக திருத்த மசோதா'  நாடாளுமன்ற‌ இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில் சிங் மறுத்தார். இதையடுத்து மசோதா வாபஸ் பெறப்பட்டது.

  ராஜிவ் பிரதமராக இருந்த போது, 1988ல் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 'அவதுாறு மசோதா' லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. கடும் எதிர்ப்பால் ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியாமல் மசோதா வாபஸ் பெறப்பட்டது.

  கடந்த 2015ல் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்ற மசோதா தொடர்பாக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை,பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாபஸ் பெற்றது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் விவசாய மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியது. மொத்தம் 3 சட்டங்களை உள்ளடக்கியது இந்த மசோதா.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய முடியும் என்பது தான் மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தின் அம்சம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டம் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானது, விவசாயிகள் முழுக்க முழுக்க தனியார் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லக்கூடிய ஆபத்து உள்ளது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசின் விவசாய சட்டத்திற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு இருந்தது. ஆனால் பஞ்சாப் விவசாயிகள் தான், இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மத்திய அரசின் சட்டத்தால் விவசாயிகள் தங்கள் நிலத்தை இழக்க நேரிடும் என்கிற பிரச்சாரம் விவசாயிகளை சூடாக்கியது. இதனால் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். டெல்லியில் ஆங்காங்கே குடில் அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி 26 ஆம் திக‌தி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.

இதன் பிறகு விவசாயிகள் போராட்டம் திசை மாறினாலும் கூட பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். சுழற்சி முறையில் பஞ்சாப் முழுவதிலும் இருந்து விவசாயிகள் டெல்லி வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதே போல் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் ஆங்காங்கே தங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருந்தனர். சட்டம் நிறைவேறி ஒரு வருடத்தை கடந்த பின்னரும் கூட விவசாயிகளிடம் எதிர்ப்பு குறையவில்லை.

700-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த விவசாயிகள் போராட்டம் மக்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் கிளப்பியது.  13 விவசாயிகள் தற்கொலை செய்தனர். விவசாயி களின் போராட்டத்தை அடக்க அரசு இயந்திரம் பல  முட்டுக்கட்டைகளை போட்டது. எதற்கும் அஞ்சாத விவசாயிகள் போராட்டத்தைதொடர்ந்து முன்னெடுத்தனர். இந்தியாவி  பல பாகங்கலில் இருந்து  போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் மட்டுமல்லாது மற்றவர்களும் டெல்லிக்குச் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விவசாயிகள் ஆரம்பித்த‌ போராட்டம்  முழு இந்தியாவையும் உலுக்கியது.  டெல்லியில் போராட்டம் செய்வது விவசாயிகள் அல்ல என  அரசாங்கம் தெரிவித்தது. விவசாயிகள் என்ற‌ போர்வையில் தீவிரவாதிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்தது.

பார‌தீய ஜனதாக் கட்சியும் அதன் கொள்கைகளில் விருப்பமுள்ள கட்சிகளும் மட்டும் விவசாயிகலின் போராட்டத்தை கொச்சைப்படுதின. தமிழகத்தின் அண்ண‌ திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றது. பாடகர் ரிஹானா, போராளி கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் போராட்டங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்க உலக அளவில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தன. இந்த நிலையில், சர்வதேச பிரபலங்களின் கருத்துக்கு எதிராக இந்தியப் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், கௌதம் கம்பீர் போன்ற பலர் இந்தியாவின் உள்விவகாரங்களில் பிறர் தலையிடக் கூடாது என்று தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

மத்திய அமைச்சர் ஹம்சிரத் கவுர் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தன்னுடைய பத்மஶ்ரீ விருதைத் திருப்பி அளித்தது, காலிஸ்தான் குற்றச்சாட்டுகள், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நுழைந்து கலவரம் செய்தது, வெளிநாடு வாழ் மக்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து போராட்டம் நடத்தியது, கனடா நாட்டு பிரதமர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது, விவசாய சங்கத் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது என்று பல்வேறு சம்பவங்கள் டெல்லி போராட்டம் தொடர்பாக நடைபெற்றன. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி விவாதிப்பது வரை சென்றது.

பஞ்சாப்,உத்தர  பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காகவே மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் ராஜதந்திர அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். அண்மையில் நடந்த தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சியின் தோல்வி மோடியை சிந்திக்கத் தூண்டி உள்ளது.

 வர்மா

 

No comments: