Saturday, November 6, 2021

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு சவால்விடும் சசிகலா

 ஜெயலலிதாவின் நிழலாக வாழ்ந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர்  பதவி ஆசையால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழ‌கத்தினுள் பிளவை ஏறபடுத்தியவர் சசிகலா. சசிகலாவுக்கு எதிராகத்  தர்மயுத்தம் செய்தவர் ஓ.பன்னீர்ச்செல்வம். ஆட்சி செய்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்தவர் கொடுத்தவர் ஓ.பன்னீர்ச்செல்வம். கழகத்துக்கு எதிராக சட்டசபையில் பன்னீரும்அவரது ஆதரவாளர்களும் வாக்களித்தனர். முதல்வர் பதவியைத் தக்க வைப்பதற்காக   பன்னீருடன் கைகோர்த்தார் எடப்பாடி.

பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதுக்குத் தலைமை தாங்குகிறார்கள். ஆனால், எடப்பாடியின் கையே  ஓங்கியது. ஆட்சியை இழந்த  பின்னர்  இருவரும் தனித்தனியாக செயற‌படுகிறார்கள்.  இரட்டைத்தலைமையைத் தவிர்த்து ஒற்றைத் தலைமையை நோக்கி இருவரும் பயணம் செய்கிறார்கள்.

பன்னீர்,எடப்பாடி ஆகிய இருவருக்கும் போட்டியாக கழகத் தலைமையைக் கைப்பற்ற சசிகலா முயற்சி செய்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தின் உறுப்பினராக இல்லாத சசிகலாவுக்குப் பின்னால் சிலர் உள்ளனர். கழகத்தின் நிர்வாகிகள் எவரும் சசிகலாவுக்குப் பின்னால் இல்லை. "அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலா" என கல்வெட்டு வைக்கப்படுகிறது.அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாலர் என சசிகலா கடிதத் தலைப்பில் கையெழுத்திடுகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடி கட்ட்சிய காரில் சசிகலா  வலம் வருகிறார். இவற்றுக்கான சட்ட நடவடிக்கை எடுக்க  வேண்டிய கழகத்தலைமை  மெளனமாக இருக்கிறது.

 சசிகலாவைப் பற்றிய  கேள்வி ஒன்றுக்கு, "அதிமுக கட்சிக்குள் சசிகலா வருவது குறித்து கட்சி நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்" என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய நாளில் இருந்து அவருக்கு கட்சிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு பெருகி வருகிறது.

  2017க்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பன்னீர்ச்செல்வத்துக்கு  இருந்த ஆதரவு சரிய தொடங்கியது. அதன்பின் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.  எடப்பாடி பழனிச்சாமி, அவரின் ஆதரவாளர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் முடிவுகள் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது

துணைமுதல்வர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் பன்னீர்ச்செல்வத்துக்கு வழங்கப்பட்டாலும் அவரது சொல்லுக்கு மதிப்பளிக்கபப்டவில்லை. எடப்பாடி தான் நினைத்ததையே செய்துவந்தார். அதிகாரபூர்வமாக அவருக்கு கட்சியில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் இருந்தாலும் கட்சி கூட்டங்களில் அவரின் கருத்துக்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை.  சட்டசபை தேர்தல் கூட்டணி, வாக்குறுதி, எதிர்க்கட்சி தலைவர் தேர்வு, கொறடா தேர்வு என்று எதிலும் பன்னீரின் குரலுக்கு மதிப்பு கொடுக்கப்படவில்லை.

  சசிகலாவிற்கு ஆதரவாக பன்னீர்ச்செல்வம்  பேசியதில் இருந்தே அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு அதிகரித்து வருகிறது. முதலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பன்னீருக்கு ஆதரவாக பேசினார். இதற்கு முன்பே ஒருமுறை சசிகலாவுக்கு ஆதரவாக செல்லூர் ராஜு பேசி இருந்தாலும்.. இந்த முறை வெளிப்படையாக   ஆதரித்துள்ளார். ஓ.பி.எஸ் சொல்வதில் என்ன தவறு என்று கேட்டார்.   கட்சிக்குள் இருக்கும் மற்ற சில நிர்வாகிகளும் பன்னீரின் கருத்துக்கும், சசிகலாவின் வருகைக்கும் ஆதரவாக பேசி வந்தனர்.   ஆர். பி உதயகுமார் வெளிப்படையாக பன்னீருடன்  நிற்க தொடங்கினார்.

  திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஸ்கரன் ஆகியோரும் பன்னீரின் பக்கம் சாய தொடங்கி உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதை முன்னிட்டே முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஸ்கரன் ஆகிய முக்கிய தலைவர்களுடன் ஓ பன்னீர்செல்வம் தனியாகக் கூட்டம் நடத்தினார். எடப்பாடி மீது அதிருப்தியில் இருந்தவர்கள் இப்போது பன்னீருக்கு வெளிப்படையாக  ஆதரவுட் செய்ய தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

  எடப்பாடி பக்கம் இருந்த ஆதரவு அலை பன்னீரின் பக்கம் சாயத்தொடங்கி உள்ளது.   கட்சிக்கு உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகள் மாறி வருகின்றன. கொங்கு மண்டல குழு அமைதியாக இருக்கிறது.   எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஜெயக்குமார், சி வி சண்முகம் ஆகியோர் மட்டுமே பேசி வரும் நிலையில், மற்றவர்கள் யாரும் பெரிதாக பேசவில்லை. எடப்பாடியின் பிடி தளர்ந்து விட்டதோ என்ற கேள்வியை சமீபத்திய நிகழ்வுகள் எழுப்பி உள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  சட்டவிதிகள் மாற்றப்பட்டு, பொதுச் செயலாளர் என்கிற பதவியே நீக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிகள் உருவாக்கப்பட்டு, அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது. இதன்படி நான்கு தேர்தல்களை  அவர்கள் சந்தித்துள்ளனர். பொதுச் செயலாளர் பதவி இரத்து செய்யப்பட்டது தொடர்பாக, சென்னை சிவில் நீதிமன்றத்தில் சசிகலா சார்பாக வழக்குத் தொடரபட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சசிகலா நுழைந்தால் அவரின் பின்னால் மன்னார்குடி குடும்பமும் அணிவகுத்து  வந்துவிடும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். மன்னார்குடிகுடும்பத்துக்கு அடிமையாகக் கூடாது என்பது எடப்பாடியின் வாதம். பன்னீர்ச்செல்வத்துக்கும் இது தெரிந்த விடயம் தான். ஆனால், எடப்பாடைடியை வழிக்குக்கொண்டுவர சசிகலாவின் பெயரைப் பயன் படுத்துகிறார்.

 ஜெயலலிதா  இல்லாத போது சட்ட மன்ற இடைத் தேர்தல்களில் கூட்டணிக்  கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றி எடப்பாடி ஆட்சியைத் தக்கவைத்தார். ஒரு வருடத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கனவு கன்ட போதும் அரசியல் நெழிவு சுழிவுகளை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திய எடப்பாடி முதலமைச்சராக வலம் வந்தார்.

பாரதீய ஜனதாக்  கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியை நடத்தினார் ஜெயலலிதா. ஜெயலலிதா எதிர்த்த அனைத்தையும் பாரதீய ஜனதாவுக்கு விட்டுக்கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றினார் எடப்பாடி. கடந்த சட்டமன்றத் தேர்தலில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மண்ணைக் கெளவும் என எதிர்க் கட்சிகள் சவால் விட்டன.   66 தொகுதிகலிஒல் வெற்ரி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  பலமான எதிர்க் கட்சியாக இருக்கிறது. இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் வெற்றி பெற முடியாது எனபது வரலாறு. இதனை பன்னீரும், எடப்பாடியும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அதனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்தை விட்டு இருஅவ்ரும் வெளியேற மாட்டார்கள். அதே வேளை, இரட்டை இலைச் சின்னத்தை முடக்க இருவரும் விரும்ப மாட்டார்கள்.

ஜெலலிதா  சிறையில் இருந்து வெளிவந்த  போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பும், மரியாதையும் தனக்குக் கிடைக்கும் என சசிகலா எதிர்பார்த்தார். ஜெயலலிதாவும், சசிகலாவும்  ஒன்றல்ல என்பதை கழகத் தலைவர்களும்,தொண்டர்களும் வெளிப்படுத்தினர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பெரும் படையே தனக்குப் பின்னால் அணிவகுத்து வரும் என சசிகலா எதிர்பார்த்தார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசில் பெரும் பதவி வகித்த பலர் சசிகலாவின் தயவால் வலம் வந்தவர்கள். சசிகலாவின் பின்னால் போனால் அரசியலில் எதுவும் கிடைக்காது என்பது நிதர்சனம். அரசியலில் இதெல்லாம் சகஜம்  என அவர்கள் அனைவரும் சசிகலாவைக் கைவிட்டனர்.

அரசியலில் இருந்து ஒதுங்கப் போகிறேன் என பகிரங்கமாக அறிவித்த சசிகலாவுக்கு அரசியல் ஆசை அதிகரித்துவிட்டது. மக்கலைச் சென்று சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டவர்கள் அனைவரும் புதிய கட்சியை ஆரம்பித்து  அரசியலில் தமது இருப்பை வெளிப்படுத்தினார்கள். சசிகலா ஒருவர்தான் கட்சியை கைப்பற்றப் போவதாக சபதம் எடுத்துள்ளார்.

No comments: