Tuesday, July 19, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 27

தமிழ் வரலாற்று நாவல்களின்  முதலிடத்தில் இருப்பது கல்கி எழுதிய  பொன்னியின் செல்வன். அந்த நாவலின் பாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டன.  அந்த நாவலால் கவரப்பட்டவர்கள் தமது பிள்ளைகளுக்கு வந்தியத்தேவன், வானதி,நந்தினி என பெயர் சூட்டிக் கொண்டாடினர்.

1 வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்,2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்,3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன் 4. குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,) 5. பெரிய பழுவேட்டரையர் 6. நந்தினி 7. சின்ன பழுவேட்டரையர், 8. ஆதித்த கரிகாலர் ,9. சுந்தர சோழர் 10. செம்பியன் மாதேவி 11. கடம்பூர் சம்புவரையர், 12. சேந்தன் அமுதன்

13. பூங்குழலி ,14. குடந்தை சோதிடர் ,15. வானதி ,16. மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)

17. கந்தமாறன்(சம்புவரையர் மகன்)  ,18. கொடும்பாளூர் வேளார் ,19. மணிமேகலை(சம்புவரையர் மகள்)

20. அநிருத்த பிரம்மராயர் ,21 . மதுராந்தக சோழர்

பொன்னியில் செல்வன் திரைப்படமாக வெளிவரத் தயாராக இருக்குறது. எம்.ஜி.ஆர்,கமல், மணிரத்தினம் ஆகியோர் பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க முய/ர்சி செய்தனர். முதல் முயற்சியில் தோல்வியடைந்த மணிரத்தினம்  இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்.

1950-ம் ஆண்டில் தொடங்கி 1954-ம் ஆண்டு வரை, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய `பொன்னியின் செல்வன்' கதை, `கல்கி' வார இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், 5 பாகங்கள் கொண்ட புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தின் வியாபாரமும் விண்ணைத் தொட்டது. சோழ தேசத்தில் நடக்கும்படியாக எழுதப்பட்ட இந்தக் கதைக்குள் இருந்த சுவாரஸ்யத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர், 1958-ம் ஆண்டு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து `பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார்.

கதை உரிமையைப் பெற்ற பின், சில இயக்குநர்களை அணுகி இது சார்ந்து பேசியுள்ளார் எம்.ஜி.ஆர். ஆனால், இறுதியில் தானே தயாரித்து இயக்குவதாக முடிவெடுத்தார். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பதாகவும் இருந்தது. ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, நம்பியார், எம்.என்.ராஜம், டி.எஸ். பாலையா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடிக்கவைக்க முடிவுசெய்திருந்தார் எம்.ஜி.ஆர். `எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' அளிக்கும் `பொன்னியின் செல்வன்' போஸ்டர்கூட வெளியிடப்பட்டது.

  சீர்காழியில் மேடை நாடகத்தில் நடிப்பதற்காக காரில் சென்றபோது, எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைய எம்.ஜி.ஆருக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டன. குணமடைந்ததும், அவர் நடிப்பில் பாதியில் நின்றபோயிருந்த `மலைநாட்டு இளவரசன்', `சிரிக்கும் சிலை', `சிலம்புக் குகை', `தூங்காதே தம்பி தூங்காதே' ஆகிய 4 படங்களை நடித்துக் கொடுத்தார். இதன் காரணத்தால், இயக்குநராக அவரது பணியைச் செய்ய முடியவில்லை.

  கதை உரிமையைப் பெற்ற நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பொன்னியின் செல்வன் கதை உரிமையைப் புதுப்பித்துக்கொண்டார். ஆனால், அந்தக் கதையை அவரால் திரைப்பட வடிவில் ஏனோ கொண்டுவரவே முடியவில்லை.

1990-களில், எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கமல்ஹாசனும் பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்க முடிவுசெய்தார். ஆனால், அவருடைய கனவும் கனவாகவே இருந்துவிட்டது. பொன்னியின் செல்வன், இதுநாள் வரை படமாகத்தான் வெளிவரவில்லையே தவிர, நாடகமாகப் பல மேடைகளில் அரங்கேறியிருக்கிறது. 2,400 பக்கங்கள் கொண்ட நாவலை நாடகமாக்குவதும் அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதைச் சாத்தியமாக்கிக் காட்டியது மேஜிக் லேன்டர்ன் நாடகக் குழு. 1999-ம் ஆண்டு, பொன்னியின் செல்வன் கதையை நான்கு மணிநேர நாடகமாக்கியது. சென்னையில் உள்ள  நடந்த இந்த நாடகத்தில் நடிகர் நாசர், நடிகர் பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2011-ம் ஆண்டு, பொன்னியின் செல்வன் கதையை தொலைக்காட்சித் தொடராக எடுக்க நினைத்தது மக்கள் தொலைக்காட்சி. அதற்காக ஆடிஷனெல்லாம்கூட நடத்தப்பட்டது. ஆனால், மக்கள் தொலைக்காட்சியாலும் பொன்னியின் செல்வனைத் தொடராகக் கொண்டுவர முடியவில்லை. பின்னர் 2014, 2015 ஆகிய ஆண்டுகளில், மீண்டும் மேடை நாடகமானது பொன்னியின் செல்வன். எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம், மேஜிக் லேன்டர்ன் நாடகக் குழுவோடு இணைந்து இந்த மேடை நாடகத்தை தமிழகத்தின் பெருநகரங்களான சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடத்தியது. இந்த நாடகத்தின் திரைக்கதையை, நடிகரும் கதையாசிரியருமான குமரவேல் எழுதினார். மேஜிக் லேன்டர்ன் நாடகக் குழு, வெளிநாடுகளில்கூட இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது.

2009, 2010-ம் ஆண்டுகளில்  மணிரத்னம், பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. 2014-ம் ஆண்டு ஒரு பேட்டியில், ஆந்திராவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, ``மணிரத்னம் இயக்கப்போகும் `பொன்னியின் செல்வன்தான் தமிழில் நான் நடிக்கும் முதல் படமாக இருக்குமென நினைக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விஜய்,அனுஷ்கா ஆகியொரும்  இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்'' என்று கூறியிருந்தார். ஆனால், அப்போதும் அது போட்டோஷூட்டோடு நின்றுபோனது.

``பொன்னியின் செல்வனைப் படமாக எடுக்க மணிரத்னம் முடிவு செய்தார். ஆனால், அதற்கு செலவாகும் தொகையைத் திருப்பி எடுப்பது மிகவும் கடினம் என்பதால், அது பாதியிலேயே நின்றுவிட்டது.

பொன்னியின் செல்வன் பெரிய திரையில்  வெளிவரவில்லையென்றாலும், அனிமேஷன் ஃபிலிமாக வெளிவந்திருக்கிறது. 2015-ம் ஆண்டில், பொன்னியின் செல்வன் கதையை 12 டிவிடி-களில் அனிமேஷன் படமாக வெளியிட்டது ரீவைண்டா மூவி டூன்ஸ் நிறுவனம். 12 டிவிடிகள், 32 மணி நேரம் கொண்டு வெளியானது பொன்னியின் செல்வனின் அனிமேஷன் வெர்ஷன். 2017-ம் ஆண்டிலிருந்து பொன்னியின் செல்வன் கதையை அத்தியாயங்கள் வாரியாக காமிக்ஸ் கதை வடிவில் புத்தகமாக வெளியிட்டுவருகிறது, நிலா காமிக்ஸ் நிறுவனம். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில், பொன்னியின் செல்வன் கதையை எம்.எக்ஸ் ப்ளேயர் நிறுவனத்தோடு சேர்ந்து வெப் சீரிஸாக வெளியிடப்போவதாகத் தன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். சூர்ய பிரதாப் என்பவர் இயக்க, சௌந்தர்யா தயாரிக்கிறார்.

1958 முதல் 2018 வரையில் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம், 2019-ம் ஆண்டின் இறுதியில் நனவாகத் தொடங்கியிருக்கிறது. மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். இந்த முறை நிச்சயம் மிஸ் ஆகாது என்று பொன்னியின் செல்வன் ரசிகர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், இந்த ஆண்டின் துவக்கத்திலேயே டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது மணிரத்னத்தின் `மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம்.  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரபு,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் காசு கொடுத்துக் கதை உரிமை பெறப்பட்டது. அதன்பின், பொன்னியின் செல்வன் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்ட காரணத்தால் மணிரத்னத்திற்கு கதை உரிமை பற்றிய பிரச்னை இல்லை. வாசகர்களின் மனதில் இருக்கும் கதையை  மணிரத்தினம் காட்சிப்படுத்துவாரா போன்ற கேள்விகளுக்கான பதிலுக்காக திரை உலகம் காத்திருக்கிறது.

No comments: