Saturday, July 30, 2022

முட்டிமோதும் அதிமுக தலைமகள் வேடிக்கைபார்க்கும் பாஜக


 ஒற்றைத் தலைமை எனும் கோஷம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இரண்டாகப் பிரித்துவிட்டது. பெயரளவில் இரட்டைத் தலைமையாக இருந்தபோது கனன்றுகொண்டிருந்த தலைமைத்துவப் போட்டி இப்போது வெடித்துச் சிதறியுள்ளது.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடங்க முன்னரே அண்ணா திராவிட முன்ன்ற்றக் கழகத்தினுள் சதுரங்கப் போட்டி ஆரம்பமாகிவிட்டது.  ஜனாதிபதித் தேர்தலுக்கான  மனுத் தாக்கல் செய்யும் விழாவில கலந்துகொள்ளச் சென்ற பன்னீர்ச்செல்வம், தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய  மேற்கொண்ட முயற்சிகள்  வெற்றியளிக்கவில்லை. பன்னீரைச் சந்திப்பதர்கு மோடியும், அமித் ஷாவும் நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை.

 தனது   ஆதரவாளர்களுக்கு வருமான வரித்துறை கொடுக்கும் நெருக்கடிகளால் திணறிப்போயிருக்கிறார் எடப்பாடி. மதிய அரசு கொடுக்கும்  குடைச்சலைச் சமாளிக்க டெல்லிக்குப் பயணமானார் எடப்பாடி.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவைக் காரணமாகவைத்து, பாரதீய ஜனதாத் தலைவர்களைச்   சமாதானப்படுத்த டெல்லிக்குப் பறந்தவர், போன வேகத்தில் திரும்பியிருக்கிறார். டெல்லித் தலைமை எடப்பாடியக் கன்டுகொள்ளவில்லை என்பதால் பன்னீர் தரப்பு உற்சாகமாகியுள்ளது.

ஜூலை 11 பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்றபோதே, அவருக்குச் சிக்கல்கள் தொடங்கிவிட்டன. பட்டாபிஷேகம் ஒருபக்கம் நடந்த வேளையில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர், எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபர் செய்யாதுரை ஆகியோரின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

 மதுரையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமான அன்னை பாரத், எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள்மீது நடத்தப்பட்ட சோதனையும் எடப்பாடிக்கு அதிர்ச்சியாளித்தது.. மதுரைச் சோதனையில், கணக்கில் வராத 165 கோடி ரூபாய் பணம், 14 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இவை தவிர, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோரை சி.பி. விசாரிக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இப்படி சோதனைகளும்  விசாரணைகளும் தன் தரப்பின்மீது இறுகுவதால், டெல்லியைச் சமாதானப்படுத்த முடிவெடுத்தார் எடப்பாடி. ஆனால் டெல்லித் தலமி எடப்பாடியைக் கணக்கில் எடுக்கவில்லை.

பழைய வழக்குகளை மத்திய அரசு தூசு தட்டி கையில் எடுத்துள்ளது. இது அரசியல் ரீதியாக எடப்பாடிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். பாரதீய ஜனதாவின் டெல்லித் தலைமையுடன்  பன்னீர் மிகவும் நெருக்கமாக உள்ளார்.  அந்தத் தலைமையை எடப்பாடி சற்று தூரத்தில் தள்ளியே வைத்துள்ளார்.சந்தர்ப்பம் பார்த்து மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 டெல்லி பயணத்தை அரை மனதோடுதான் ஒப்புக்கொண்டார் எடப்பாடி. ‘எதற்கெடுத்தாலும் அவர்களிடம் போய் நின்றால், தொண்டர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்என்றார். ஆனால், முன்னாள் அமைச்சர்கள்மீது அடுத்தடுத்து வருமான வரிச் சோதனைகள்  நடைபெறுவதால், ஆதரவாளர்களிடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்க அவர் பயணப்பட வேண்டியதாகிவிட்டது. தொடக்கத்தில், முர்மு பதவியேற்பு விழாவையெல்லாம் முடித்துவிட்டு சென்னை திரும்பத்தான் திட்டமிடப்பட்டது. ஐந்து நாள்கள் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டது.  சென்னையில் நடைபெறவிருந்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தைக்கூட ஜூலை 27ம் திகதிக்குத் தள்ளிவைத்தார். ஜூலை 23ம் திகதி, ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் மோடியைச் சந்திக்க ஐந்து நிமிடங்கள் எடப்பாடிக்கு ஒதுக்கப்பட்டன. பன்னீரின் மகன் .பி.ரவீந்திரநாத்துக்குக்கூட அழைப்பிதழ் அனுப்பப்படாததால், எடப்பாடி தரப்பு நம்பிக்கையுடன்  இருந்தது. ஆனால், எல்லாம் தலைகீழாக நடந்து முடிந்தது.

இடைக்கால பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டதற்கு மோடி வாழ்த்துத் தெரிவிப்பார் என எடப்பாடி நம்பி இருந்தார். உள்கட்சி அரசியல் குழப்பங்களில்  வெளிப்படையாகத் தலையிட  மோடியும், அமித்ஷாவும் விரும்பவில்லை.மோடி கைவிரித்ததால் அமித்ஷாவைச் சந்திக்க எடப்பாடி முயற்சி செய்தார். அதுவும் கைகூடவில்லை. பன்னீருக்குக் கிடைத்த அதே மரியாதைதான் எடப்பாடிக்கும் வழங்கப்பட்டது. கடுப்புடன் சென்னைக்குத் திரும்பினார் எடப்பாடி.

2019 பாராளுமன்றத் தேர்தலின்போது, எடப்பாடியின் நேரமறிந்து அவரைச் சந்திக்கக் காத்திருந்தது பா.. தரப்பு. தொகுதி குறைவாகக் கொடுத்தாலும், எந்த இடத்திலும் அவர்களை எடப்பாடி உதாசீனப்படுத்தியதில்லை. ஆனால், ‘ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர் சந்திக்க நேரம் கேட்டும், 20 நிமிடங்கள்கூட கொடுக்க மனம் வரவில்லையென்றால், அந்தக் கூட்டணி எதற்கு?’ என்கிற கோபம் .தி.மு.-வின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

  டெல்லியில் நடைபெற்ற விஷயங்களை ஒன்றுவிடாமல் அந்தச் சமயத்தில் மருத்துவமனையிலிருந்த பன்னீருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.  எடப்பாடி புறக்கணிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், பன்னீர் ரொம்பவே குஷியாகிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

நெடுஞ்சாலைத்துறையில் 4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எடப்பாடிமீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவருக்குச் சிக்கல் வரப்போவது உறுதிஎன்கிற தகவலை பரவுகிறது.

 

வைத்திய சாலையில் இருந்து வெளியேரிய சூட்டோடு சூடாக   14 மாவட்டச் செயலாளர்களை பன்னீர்   புதிதாக நியமித்தார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கமும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு..கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர்  நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரைக் கட்சியிலிருந்தே நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பன்னீர்

 .தி.மு.-வில் இரட்டைத் தலைமை இருந்தபோது, கட்சியிலிருந்து சுமார் 800 பேருக்கு மேல் நீக்கப்பட்டனர். இவர்களில் பாதிப் பேர் பன்னீரின் ஆதரவாளர்கள்தான். அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பன்னீர். டெல்லியிலிருந்து எங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. அதனால்தான், புதிய நிர்வாகிகள் நியமனத்தை வேகப்படுத்தியிருக்கிறோம் என சொல்லப்படுகிறது..

மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி, மாநில அளவில் பிரமாண்டப் பொதுக்கூட்டத்தை நடத்த பன்னீர் திட்டமிட்டுள்ளார்.

 சசிகலாவில் தொடங்கி, அன்வர் ராஜா, பெங்களூர் புகழேந்தி எனக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் அவருக்கு  ஆதரவாக நிற்கப்போகிறார்கள். ஊராட்சிச் செயலாளர், தொகுதிச் செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை, கட்சியிலிருந்து எடுத்ததால் பலர் அதிருப்தியில் இருந்தனர். அந்தப் பொறுப்புகளை மீண்டும் கொண்டுவரப்போவதாக பன்னீர் அறிவித்திருக்கிறார்.

முட்டிமோதாமல் அரசியலில் அமைதியாக  இருந்த பன்னீர் அதிரடி காட்டத் தொடங்கிவிட்டார்.

No comments: