சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அபார திறமையால் நாட்டுக்காக ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தங்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக நிரூபித்த வீரர்கள் ஒரு கட்டத்தில் வயதின் காரணமாக ஓய்வு பெறும் நிலையை சந்திக்கின்றனர். அதனால் காலம் காலமாக சிறப்பாக செயல்பட்டு சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தங்களுக்கு மானசீக வீரர்களின் ஆட்டத்தை மேற்கொண்டு பார்க்க முடியாத நிலைமை ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. அவர்களின் மன குறையைப் போக்கும் வகையில் ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்ற லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்றது. இந்திய மஹாராஜாஸ், ஆசிய லயன்ஸ், உலக ஜெய்ன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை உலக ஜெய்ன்ட்ஸ் அணி வென்றது.
விரேந்திர சேவாக், நமன் ஓஜா, வாசிம் ஜாபர், யூசுப் பதான், இர்பான்
பதான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுப்ரமணியம் பத்ரிநாத் உள்ளிட்ட நிறைய முன்னாள்
நட்சத்திர வீரர் பங்கேற்ற அந்த தொடரில் இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இந்த நிலையில்
இந்த தொடரின் 2-வது சீசன் வரும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 10 வரை நடைபெற உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி கண்டதால் இம்முறை
இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் மேலும் சில நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் வீரர்களை
சேர்க்க அதை நடத்தும் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
இந்திய லெஜெண்ட்ஸ் அணியில் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி விளையாட
உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக போற்றப்படும்
இவர் 90களில் அறிமுகமாகி தனது அற்புதமான பேட்டிங்கால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும்
பந்தாடி இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்தவர். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை
இறங்கி இறங்கி வந்து பளார் பளார் என அவர் பறக்க விட்ட சிக்ஸர்களையும் ஆஃப் சைட் திசையில்
அசால்டாக தெறிக்கவிட்ட பவுண்டரிகளையும் ரசிகர்களால் மறக்க முடியாது.
கப்டனாகவும் இந்தியா சூதாட்ட புகாரில் சிக்கி தவித்த போது பொறுப்பேற்று
வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து சில
வருடங்களிலேயே இந்தியாவை வெற்றிநடை போட வைத்த அவர் வரலாற்றின் மகத்தான இந்திய கேப்டன்களில்
ஒருவராகப் போற்றப்படுகிறார். கடந்த 2008இல் சர்வதேச கிரிக்கட்டில் ஓய்வு பெற்ற அவர்
ஐபிஎல் தொடரில் சில வருடங்கள் விளையாடி பின்னர் வர்ணனையாளராக செயல்பட்டு கடந்த
2019 முதல் பிசிசிஐ தலைவராக செயல்பட்டு வருகிறார்.
சமீப காலங்களில் அவரின் ஆட்டத்தை பார்க்க முடியாமல் இருக்கும் அவரின்
ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த லெஜெண்ட்ஸ் தொடரில் விளையாட உள்ளதாக அவரே அறிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அதை இந்திய அரசு
“அசாதி கா மஹாட்சோவ்” என்ற பெயரில் விளையாட்டுத்துறையில் கொண்டாட முடிவு செய்துள்ளது.
அதில் ஒரு அங்கமாக இந்த லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டி மகளிர் விளையாட்டுக்கு
நிதி திரட்டும் வகையில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ள
சவுரவ் கங்குலி அதற்காக தற்போது உடற்பயிற்சி கூடத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு
வருகிறார்.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள
அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “அசாதி கா மஹாட்சோவ் சார்பாக நிதி திரட்டும் ஒரு
கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகும் வகையில் பயிற்சிகளை செய்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன். 75 வருட இந்திய சுதந்திர தினத்தையும் மகளிர் உரிமைகளையும் கொண்டாடும் வகையில்
டாப் ஜாம்பவான்களுடன் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் விளையாட காத்திருக்கிறேன். விரைவில்
கிரிக்கெட் பந்தை அடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment