Saturday, July 2, 2022

பாரதீய ஜனதாவின் வலையில் சிக்கிய மாநிலக் கட்சிகள்

அறுதிப் பெரும்பான்மையுடன்  தேர்தலில்  வெற்றி பெற்று ஆட்சி மைப்பது தான் பொதுவான விதி. ஆனால், தேர்தலில் தோல்வியடைந்தாலும் ஆட்சியில் அமரும்  புதிய கருவூலத்தை பாரதீய ஜனதாக் கட்சி கண்டு பிடித்துள்ளது. மாநிலத் தேர்தலில்  ஒரு  தொகுதியில் கூட  வெற்றி பெறாமல் தான் விரும்பிய  பொம்மை ஆட்சியை நிறுவியுள்ளது பாரதீய ஜனதா. அந்த வரிசையில்  மகாராஷ்டிராவும் இணைந்துள்ளது.

கர்நாடகா,மத்தியபிரதேசம், புதுச்சேரி,சிக்கிம் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவையும் தனது கட்டுப் பாட்டில் சேர்த்துள்ளது மோடி, அமித்ஷா கூட்டணி.பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரின்  மூலம் குடைச்சல் கொடுப்பது அல்லது மாநில அரசுக்குள் குழப்பத்தை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதுதான்  பாரதீய ஜனதாவின் வியூகம்

பதவி ஆசை, முதல்வர் கனவு என்பனவற்றால் கடந்த  மூன்று ஆண்டுகளில் நான்கு  மாநிலங்களின் ஆட்சியை  தனக்குச் சாதகமாக்கியது மத்திய அரசு. ஐந்தாவது விக்கெட்டாக மகாராஷ்டிரம் விழுந்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக, மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசுகளை ஆட்சி செய்ய விடாமல் கவிழ்க்கும் சித்து விளையாட்டுகளை காலந்தோறும் அரங்கேற்றி வருகிறது. இப்போது மகாராஷ்டிராவில் அரங்கேற்றி இருக்கும் இதே ஆட்சி கவிழ்ப்பு பார்முலாவைத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் மத்தியில் இருந்த போது, மாநில அரசுகளை 356-வது பிரிவின் கீழ் கலைத்து கலைத்து விளையாடுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டது. இதனால் 356-வது பிரிவின் கீழ் ஆட்சிகளைக் கலைப்பது கைவிடப்பட்டது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகளுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை போர்க்கொடி தூக்க வைப்பது,பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பது, சட்டசபை பலத்தைக் குறைத்து ஆளும் அரசை கவிழ்ப்பது, புதிய ஆட்சி அமைப்பது என்கிற ஒரே நடை முறையை  இடைவிடாமல் பின்பற்றுகிறது பாரதீய ஜனதாக் கட்சி.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி தனது சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியால் ஆட்சியை இழந்தது. இதையடுத்து புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்சக்கட்ட திருப்புமுனையாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெளியே இருந்து ஆதரவு தருவதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்திருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் இணைந்து மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே பேசுகையில்,' 120க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருந்தாலும் முதலமைச்சர் வாய்ப்பை எங்களுக்கு தந்த பாஜகவுக்கு நன்றி. இந்த பெருந்தன்மைக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு நன்றி' என்றார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பக்தசிங் கோஷியாரி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.  அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை சேர்ந்த 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 48 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்தனர்

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில்  சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விழுத்திருந்தார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான  பெரும்பான்மையை நிரூபிக்க கெடு விதித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட ஆளுநரின் முடிவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் எங்களின் 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க கோரி ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கை.இந்த தருணத்திற்காகத்தான் ஆளுநர் காத்திருந்தார். எனவே ஆளுநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை என உத்தரவிட்டது.  இதன்மூலம் மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஃபேஸ்புக் லைவில் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது நான் மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும்  நான் எதிர்பாராத விதமாக அதிகாரத்திற்கு வந்தேன். அதே பாணியில் பதவியை விட்டு விலகுகிறேன். நான் எங்கும் போகப்போவதில்லை. நான் இங்கு தான் இருப்பேன். மீண்டும் சிவசேனா பவனின் சேரில் அமருவேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

. சிக்கிம் மாநில தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லாத பாஜக, சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏக்கள் 10 பேரை அப்படியே வளைத்துப் போட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. புதுச்சேரியில் 2021-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவடையும் நிலையில் பாஜகவின் அரசியல் விளையாட்டு அரங்கேறியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைத்து முதல்வர் நாராயணசாமி அரசாங்கத்தைக் கவிழ்த்தது பாஜக. இந்த வரிசையில்தான் இப்போது மகாராஷ்டிராவிலும் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை போர்க்கொடி தூக்க வைத்து ஆட்சியை கவிழ்த்துவிட்டிருக்கிறதுபாரதீய ஜனதா.

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது மற்ற மாநிலக் கட்சிகளுக்கு ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.   

என்சிபி மற்றும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அமைதி காத்தே வருகிறது. கற்க வேண்டியவை இதனிடையே மகாராஷ்டிரா நிலைமையில் இருந்து மற்ற அரசியல் கட்சிகள் கற்க வேண்டிய விஷயம் என அரசியல் வல்லுநர்கள் சிவற்றை குறிப்பிடுகின்றனர். முதல் சிக்கல் குடும்ப அரசியல் இந்தியாவில் எல்லா கட்சிகளிலும் குடும்ப அரசியல் தவிர்க்க முடியாதது. என்றாலும் கூட ஒரு கட்சியில் பல குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது தொண்டர்களும்,   நிர்வாகிகளும்  அயற்சி அடைய வாய்ப்புகள் அதிகம்.   கட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறுப்பினர்களால் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே மிக ஆழமான இடைவெளி எழுகிறது. இதுபோல ஏழும் இடைவெளியை ஒரு கட்டத்திற்குப் பின்னர் நிரப்புவது மிக மிகக் கடினம். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவுக்கு அது தான் நடந்து. அதிருப்தியாளர்கள் பலரும் ஆதித்ய தாக்கரே முன்னிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். கூட்டணி அடுத்து சித்தாந்த ரீதியாக ஒத்துப் போகாத கட்சிகளின் கூட்டணி எப்போதும் ஆபத்தானது தான். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தது. சிவசேனா இந்துத்துவ சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி. அதேசமயம் காங்கிரஸ் மற்றும் என்சிபி மதச்சார்பற்ற கட்சிகள். குழப்பம் மூன்று கட்சிகளின் கூட்டணி மேல்மட்டத்தில் சுமுகமாக இருப்பதைப் போலவே தெரிந்தாலும் உள்ளே புகைச்சல் இருந்து கொண்டு தான் இருந்தது. என்சிபி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிவசேனா கட்சியினரை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருந்தது. மேலும், சிவசேனா வலுவான இடங்களில் என்சிபி வளர முயல்வதாகவும் சிவசேனா தொண்டர்கள் குற்றஞ்சாட்டினர்

 அதேபோல மகாராஷ்டிரா அரசியல் சூழல் மற்ற மாநிலக் கட்சிகளுக்கும் ஒரு பாடம். கடந்த வாரம் வரை, சிவசேனா முழுக்க முழுக்க தாக்கரே கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக நினைத்தார்கள். ஆனால், வெறும் சில நாட்களில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. 3இல் இரு பங்கிற்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஷிண்டே பக்கம் சென்றுள்ளனர். இந்த நிலை, திரிணாமுல் தொடங்கி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் .

No comments: