Thursday, July 28, 2022

செஸ் ஒலிம்பியாட்டில் 3,500 வகை உணவுகள்


 4 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் திகதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் திகதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

வீரர்கள் தங்குமிடங்கள், விளையாட்டு அரங்குகள் என அனைத்துக்கும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கும் தமிழ்நாடு அரசு, விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில், உணவுகளில் குறை வைத்துவிடுமா என்ன? பல விதமான உணவு முறைகளை கடைபிடிக்கும் பன்னாட்டு வீரர்கள் இதில் கலந்துகொள்வதால் பல வகையான உணவுகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது.

குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு அந்தந்த நாட்டு உணவுகளை வழங்குவதற்காக 77 வகையான மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில், சிற்றுண்டிகள் தொடங்கி 3,500 க்கும் அதிகமான உணவுகள் இடம்பெறுகின்றன. இவற்றில் 700 உணவுகள் அதிகமானவர்கள் பொதுவாக எடுத்துக்கொள்ளும் பிரதான உணவுகளாக உள்ளன. இவற்றை தயாரிப்பதற்காகவே ஏராளமான சமையல் கலைஞர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.

 காலை, மதியம், இரவு வேளைகளில் உட்கொள்ளும் பிரதான உணவுகள், தேநீர், இடைத்தீனிக்கள் போன்றவற்றின் பட்டியலை தயாரிப்பதற்கே ஒரு வாரம் ஆனதாக தெரிவிக்கிறார் இதனை மேற்பார்வையிடும் சமையல் கலைஞர் ஜி.எஸ்.தல்வார். சூப், ஜூஸ், ஸ்டாட்டர்ஸ், கோல்டு பிளாட்டர்ஸ், சாலட், சிற்றுண்டிகள், முக்கிய உணவுகள் என வகைப்படுத்தப்பட்டு நாடுகளின் வாரியாக பட்டியலிட்டு உணவுகளை ஏற்பாடுகள் செய்கிறார்களாம்.

இது எந்த விளையாட்டு போட்டிகளிலும் கிடைக்காத அளவுக்கு வகை வகையான புதுமையான உணவுகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர். இந்தியன் முதல் இத்தாலியன் வரை, அமெரிக்கன் முதல் அரேபியன் வரை சகல உணவுகளும் இங்கு கிடைக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். இதில் வெளிநாட்டு வீரர்களுக்கு என்று சிறப்பு மதுபானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 


No comments: