ராஜபக்ஷ குடும்பத்துக்கும் அரசாங்கத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் உண்மையில் அரசியல் வாதிகள் அனைவருக்கும் எதிரானது. அதனை உணராத சில அரசியல்வாதிகள் அடுத்த ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்கள் கனவில் மிதக்கிறார்கள். அமைச்சர்கள், அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் எம்பிக்களின் வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டபோது மக்களின் கோபம் எத்தகையது என்பதை உலகம் அறியக்கூடியதாக இருந்தது. எல்லா அரசியல்வாதிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். நாட்டின் நிலையை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது மட்டுமே இப்போது இலங்கை அரசியல்வாதிகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.
இன்று இலங்கையை முடக்கியிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களை சரி செய்ய சர்வதேச சமூகத்தின் உதவி அவசியம். இலங்கை இறுதிப் போரின்போதும், அதற்கு முன்பாகவும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் இதே சர்வதேச சமூகம் கண்டித்தபோது, அதை அலட்சியம் செய்தவர்கள்தான் இதே ஆட்சியாளர்கள். இன்று அவர்கள்தான் இலங்கை மக்களைத் தவிக்க விட்டு, வீதியில் நிறுத்தியுள்ளனர். அவர்கள் செய்த தவறுகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்க நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும்.
இலங்கை அரசியல் சட்டத்தின்படி முப்படைகளும் ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டவை. ஜனாதிபதிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. வனளாவிய அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் தட்டிக் கேட்க முடியாது. ஜனாதிபதிப் பதவி கொடுத்திருக்கும் பாதுகாப்பு கருதியே கோத்தபய ராஜினாமா செய்யாது வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
ராஜபக்க்ஷே குடும்பத்தைச் சேர்ந்த எவரும் வெளிநாட்டுக்குத் தப்பி ஓட முடியாத வகையில் தடுக்கப்பட்டுள்ளனர். கோத்தபயவின் சகோதரரான பசில் ராஜபக்க்ஷே ஒரு தனி விமானத்தின் மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
ராஜபக்ஷ குடும்பத்தினர் யாரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே மாலத்தீவுகளுக்குச் சென்றுவிட்டார் கோத்தபய..
போராட்டக் காரர் எதிர் பார்த்தது போல ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் இப்போதைக்கு அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.இலங்கையின் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல் மாற்றம் வரும் என எவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.மக்களின் எழுச்சிக்கு முதல் வெற்றி இது.
ஆனால், இந்த வெற்றி தொடர்வது அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கிறது. ராஜப்க்ஷ குடும்பத்தை அரசியலில் உச்சத்தில் தூக்கி வைத்த மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் இன்னமும் பாராளுமன்றத்தில் உள்ளனர்.கட்சிக் கண்ணோட்டத்தைக் கைவிட்டு அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.
இலங்கையில் கடன் தற்போது 51 பில்லியன் டொலராக உள்ளது. கடனுக்கான வட்டியை கூட கட்ட முடியாத நிலையில் இலங்கை உள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை வலிமையாக வைத்திருக்க உதவும் முக்கிய துறையான சுற்றுலா துறை 2019ம் ஆண்டு கொரோனா பரவலுக்கு பின்னர் சிதறிப்போனது. இலங்கை பணத்தின் மதிப்பு 80 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இறக்குமதி செலவு மிகுந்ததாக மாறியது. இதேபோல், ஏற்கனவே வீழ்ச்சியில் இருந்த பண வீக்கம் மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.
உணவுக்கான செலவீனம் என்பது 57 சதவீதம் உயர்ந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் ஊழலும் இலங்கையின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம். இது நாட்டின் செல்வத்தை வீணடிப்பதில் பங்கு வகித்தது மட்டுமல்லாமல், இலங்கைக்கான எந்தவொரு நிதி மீட்பையும் சிக்கலாக்கியது.
இலங்கையில் உணவுப் பற்றாக்குறை இல்லை, ஆனாலும் மக்கள் பட்டினியாக இருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம், 10 குடும்பங்களில் கிட்டத்தட்ட ஒன்பது குடும்பங்கள் உணவைத் தவிர்க்கின்றன என்றும் 30 லட்சம் பேருக்கு அவசர மனிதாபிமான உதவிகளை பெறுகின்றனர் என்றும் கூறுகிறது
அரசியல்வாதிகள்
தமது பதவிக் கனவுகளையும்,
அரசியல் எதிர்ப்புகளையும் கைவிட்டு மக்களுக்கான அரசாங்கத்தை அமைக்க முன் வர
வேண்டும்.
No comments:
Post a Comment