Thursday, October 20, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி- 39


 தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றியமைத்ததில் ‘புதுமை இயக்குநரான’ ஸ்ரீதருக்கு முக்கியமான பங்கு உண்டு.

எண்பதுகளில் தமிழ் சினிமாவை  பாரதிராஜாவின் சீடர்களான கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார் ஆகியோர் ஆண்டதுபோல, அறுபதுகளில் ஸ்ரீதரின் உதவியாளர்களான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்த் திரையுலகத்தில் உலகில் கொடி கட்டிப் பறந்தனர்.

ஸ்ரீதரின் முக்கியமான உதவியாளராகப் பணியாற்றிய  இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதலில் ஸ்ரீதருக்கு போட்டியாராக இருந்து பின்னர் அவரிடமே  உதவியாளராகச் சேர்ந்தவர்.

‘மதுரை தேவி கான  வினோத சபா’ என்ற பெயரிலே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திக் கொண்டிருந்த நாடகக் குழுவில் தனது ஏழாவது வயதில் இணைந்த  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை, வசனம், பாட்டு, நடிப்பு என்று எல்லா பிரிவுகளிலும் அங்கே தேர்ச்சி பெற்றார்.

நாடக உலகில்  வருமானம் மிகவும் சொற்பமாக இருந்ததால் திரைத்துறையில் சேர்ந்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஒரு கட்டத்தில் முடிவெடுத்த கோபாலகிருஷ்ணன் நாடகத் துறையில் பெற்றிருந்த அனுபவத்தின் துணையோடு தனது பத்தொன்பதாவது வயதில் நாடக சபாவிலிருந்து விலகி பாடலாசிரியர் உடுமலை நாராயணகவியிடம் உதவியாளாராகச் சேர்ந்தார்.

பின்னாளில் மிகப் பெரிய இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும்  வளர்ந்த கோபாலகிருஷ்ணன் தமிழ்த் திரையுலகில் முதலில் பாடலாசிரியராகத்தான் அறிமுகமானார். அதற்கு, அவருக்கு பேருதவியாக இருந்தது உடுமலை நாராயணகவியிடம் அவர் பெற்ற பயிற்சியே.

அந்த சந்தர்ப்பத்தில் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்த சுந்தரம் பிள்ளை ரெக்கார்டிஸ்ட் கோவிந்தசாமி, கேமிராமேன் ராமசாமி, ஜி,உமாபதி, கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் சேர்ந்து ‘சரவணபவா யுனிட்டி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி படம் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் கதை கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்த கோபாலகிருஷ்ணன் தான் நாடகமாக எழுதி வெற்றி பெற்றிருந்த ‘தம்பி’ என்ற கதையை அவர்களுக்குச் சொன்னார். அவர்களுக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது.

அன்றிரவு தன்னுடைய அறைக்கு  வந்து படுத்த கொபாலகிருஷ்ணனுக்குத் தூக்கமே வரவில்லை.  கதாசிரியராக சினிமாவில் வலம் வருவது போலவும் அதைத் தொடர்ந்து இயக்குநர் ஆவதற்கு வாய்ப்புகள் தன்னைத் தேடி வருவது போலவும் வந்த வண்ணக் கனவுகளுக்கு நடுவே சிறிது நேரமே கண்ணயர்ந்தார் அவர்.

தன்னுடைய கதையில் யார், யார் நடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பரபரப்போடு அடுத்த நாள் காலையில் அந்த நிறுவனத்திற்கு சென்றபோதுதான் ‘தம்பி’ கதையைத் தவிர இன்னொரு கதையையும் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள விவரம் கோபாலகிருஷ்ணனுக்குத் தெரிய வந்தது.

 அவர்கள் படமாக்குவதற்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இன்னொரு கதை ஸ்ரீதர் எழுதியது. அந்த பட  நிறுவனத்தினர் தங்களது படத்திலே கதாநாயகனாக நடிக்க சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆகவே தாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள இரண்டு கதைகளில் எந்தக் கதை அவருக்குப் பிடிக்கிறதோ அதுவே முதலில் படமாக்கப்படும் என்று  கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் சொன்னார் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுந்தரம் பிள்ளை.

சிவாஜி கணேசன் எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாரோ என்று கோபாலகிருஷ்ணன் குழப்பத்தோடு இருந்தபோது அந்த பட நிறுவனத்தினர்  தேர்ந்தெடுத்திருந்த  இன்னொரு கதையை எழுதியவரான  ஸ்ரீதரும், கோபாலகிருஷ்ணனைப்  போலவே பெரும் தவிப்பில் இருந்தார்.

‘புதுமை இயக்குநர்’ என்றும் ‘இயக்குநர் திலகம்’ என்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டு  ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருந்த அந்த இரு இயக்குனர்களுக்குமிடையே அன்று நடந்த அந்தப் போட்டியில் இறுதியாக ஸ்ரீதரே வென்றார்.

ஸ்ரீதருடைய ‘எதிர்பாராதது’ கதை சிவாஜி கணேசனுக்கு பிடித்திருந்ததால் அவரது கதையையே முதலில் படமாக்குவது என்று சரவணபவா யுனிட்டி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முடிவெடுத்தனர்.

 

“சிவாஜிக்கு என்னுடைய கதை பிடித்திருந்ததின் காரணமாக என்னுடைய கதை தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அவ்வளவுதானே தவிர எனக்கு எந்த வகையிலும் கோபாலகிருஷ்ணன் குறைந்தவர் அல்ல” என்று தன்னுடைய போட்டியாளரான கோபாலகிருஷ்ணன் பற்றி ஸ்ரீதர்  ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது  அன்றைய கலைஞர்கள் எந்த அளவு விசாலமான மனதுடன் இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தன்னுடன் யார் போட்டி போட்டாரோ  அந்த ஸ்ரீதர்தான் தனக்காக சினிமா உலகின் கதவுகளைத் திறக்கப் போகிறவர் என்று அப்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குத் தெரியாது.

ஸ்ரீதரின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கோபாலகிருஷ்ணன் சொன்ன ‘தம்பி’ கதையும் அந்தத் தயாரிப்பாளர்களுக்குப் பிடித்திருந்த காரணத்தினால் கோபாலகிருஷ்ணனை மிகவும் மரியாதையாக அந்த நிறுவனத்தினர் நடத்தினர். அதனால் அடிக்கடி அந்த நிறுவனத்துக்குச் சென்று வருவதை வழக்கமாகக்  கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரைச்  சந்தித்து அவரோடு  பழகும் வாய்ப்பினைப் பெற்ற  ஸ்ரீதர்  “அவரைப் பார்த்ததும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த நிறுவனத்தில்  அவர்கள்  இருவரும் அடிக்கடி சந்தித்துப்  பேசியபோது “எனக்குப் பாடலும் எழுத வரும்” என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சொல்ல உடனே ‘எதிர்பாராதது’ படத்தின் சில காட்சிகளைப் பற்றி  எடுத்துச் சொல்லி அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டு வரும்படி அவரிடம் சொன்னார் ஸ்ரீதர்.

அதைத் தொடர்ந்து அவர் சொன்ன ஒரு காட்சிக்கு “காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்”  என்று தொடங்கும் பாடலை  எழுதித் தந்தார்  கோபாலகிருஷ்ணன். ஸ்ரீதருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதால் அந்தப் படத்தின் இயக்குநரான சி.எச்.நாராயணமூர்த்தியிடம் அந்தப் பாடலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார் அவர்.

சி.என்.பாண்டுரங்கனின் இசையில், ஏ.எம்.ராஜா-ஜிக்கி குரலில் பதிவான அந்தப் பாடலே கே. எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய முதல் பாடலாக  அமைந்தது.

‘எதிர்பாராதது’ மிகச் சிறந்த வெற்றிப் படமாக அமையவே ஸ்ரீதருக்கு திரையுலகில் வரவேற்பு பெருகியது.

அந்தப்  படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்திதான் பின்னர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். ஸ்ரீதரும், அவரும் ஒத்தக் கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்ததால் ‘எதிர்பாராதது’  படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகினர்.

கிருஷ்ணமூர்த்திக்கு ‘பில்லியப்பா’ என்ற மதுரையைச் சேர்ந்த மிகப்  பெரிய பணக்காரர் ஒருவர்  நண்பராக  இருந்தார். கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட அவர் ஸ்ரீதர், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் ஆலோசனையின் பேரில்  ’பரிவர்த்தனா’ என்ற தெலுங்குப் படத்தை  தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதற்காக வாங்கினார்.

இது மாதிரி மொழி மாற்றப் படங்களுக்கு வசனம் எழுதுவதில் அனுபவமுள்ள பலர் அப்போது இருந்தபோதிலும் அவர்களை எல்லாம் தவிர்த்துவிட்டு ஸ்ரீதரை அந்தப் படத்திற்கு வசனம் எழுதச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி . அப்போது ஸ்ரீதர் ஏற்கனவே சில நேரடித் தமிழ்ப் படங்களுக்கு கதை வசனம் எழுத ஒப்புக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கினார்.

“நண்பர் பில்லியப்பாவின் படம் என்பதால் நீங்கள்  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லவே வேறு வழியின்றி அப்படத்திற்கு பணியாற்ற ஒப்புக் கொண்டார் ஸ்ரீதர்.

வசனங்களை சரி பார்த்து பின்னணி பேசும் கலைஞர்களுக்கு பயிற்சியளிக்க ஒரு திறமையான  உதவியாளர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று  ஸ்ரீதர் எண்ணியபோது அவர் நினைவுக்கு வந்த முதல் நபர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான்.

திறமையாளர்களை மனம் விட்டுப் பாராட்ட எப்போதுமே தயங்காத இயக்குனரான ஸ்ரீதர் “டப்பிங் படத்துக்கு எப்படி வசனம் எழுத வேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தவரே கோபாலகிருஷ்ணன்தான்” என்று அவரது திறமையைப் பாராட்டியுள்ளார்.

‘லட்சாதிபதி’ என்ற பெயரில் வெளியான அந்த மொழி மாற்றப்  படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும்  படம் எடுக்க விரும்பிய பல தயாரிப்பாளர்கள், தமிழ்ப் படங்களுக்கு வசனம் எழுத ஸ்ரீதரைத் தேடி வரத் தொடங்கினார்கள்.

 

அந்த வாய்ப்புகளை ஒப்புக் கொண்ட ஸ்ரீதர் படப்பிடிப்புத் தளத்தில்  நடிகர்களுக்கு வசனங்களை  சொல்லித் தர கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீதரிடம்  உதவியாளராகச்  சேர்ந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

 வசனங்களை  ஏற்ற இறக்கத்தோடு எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லித் தருவதில்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கை தேர்ந்தவர் என்பதால் அவர் வசனம் பேச கற்றுத் தந்த பாணி எஸ்.வி.ரங்காராவ்,  சாவித்திரி போன்ற கலைஞர்களை மிகவும் கவர்ந்தது.

இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி ஆகியோர்  தமிழ்ப் படங்களில் நல்ல தமிழ் பேசி நடித்ததற்குக் காரணமே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான்.

ஸ்ரீதரிடம் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   அவரோடு இணைந்து பணியாற்றிய கடைசி படமாக ‘உத்தம புத்திரன்’ அமைந்தது.

“அந்தப் படத்தில்தான் ஸ்ரீதர் யார் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது…” என்று குறிப்பிட்டிருக்கிறார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் .

No comments: