Friday, October 21, 2022

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா

அரசியல் சர்ச்சைகளி சிக்கிய இங்கிலாந்து பிரதமர்  லிஸ் ட்ரஸ் இராஜினாமாச் செய்துள்ளார். பிரிட்டனுக்கு இப்போது பொல்லாத காலம் போல. அங்கு வரிசையாகக் கடந்த சில மாதங்களாகவே பல மோசமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. பிரிட்டனில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி எலிசபெத் கடந்த மாதம் உயிரிழந்தார். இப்போது அந்நாட்டின் பொருளாதாரமும் தடுமாறி வருகிறது.   2019இல் பிரிட்டன் பிரதமராகத் தேர்வானவர் போரிஸ் ஜான்சன். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலையில், அதையும் கூட இவர் காட்டினார். இருப்பினும், அதன் பின்னர் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கினார். நாடே கொரோனா ஊரடங்கில் திணறி கொண்டு இருந்த போது மது விருந்து நடத்தினார். இப்படிப் பல சர்ச்சைகளில் சிக்கியதால் அவர் சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.  அதன், பின்னர் புதிய பிரதமரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. பிரிட்டன் சட்டப்படி ஆளுங்கட்சியின் தலைவரே பிரதமராக இருப்பார். அப்போது அங்கு கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் , லிஸ் டிரஸ் அகியோரிடையே இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், லிஸ் டிரஸ் பிரதமர் ஆனார்.

 பிரதமராக வந்ததும் அவர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார். இருப்பினும், அது பிரிட்டன் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் லிஸ் டிரஸுக்கு அழுத்தம் அதிகரித்தது. அவரது அமைச்சரவையில் இருந்து இரு அமைச்சர்கள் வெளியேறினர்.   கட்சிக்கு உள்ளேயே அவருக்கு அழுத்தம் அதிகரித்தது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக   பேச்சு எழுந்தது. இந்நிலையில்,  பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்து உள்ளார்.

தான் ஒரு போராளி பிரச்சினையைக் கண்டு அஞ்சி ஓடுபவர் இல்லை என்று சொன்ன 24 மணி நேரத்திற்குள் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தன்னை எதற்காகப் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தார்களோ அதை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்து உள்ளார். மேலும், அடுத்த பிரமரைத் தேர்வு செய்யும் வரை பிரதமர் பதவியில் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.  மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் நியமனம் செய்த கடைசி பிரதமர் லிஸ் டிரஸ் ஆவார். அந்நாட்டு வழக்கப்படி பிரிட்டன் ராணி தான் பிரதமரை நியமிப்பார்கள். கடந்த செப். 6இல் பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸை பிரிட்டன் ராணி எலிசபெத் நியமித்தார். ஸ்காட்லாந்த் அரண்மனையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ராணி எலிசபெத் நியமித்த கடைசி பிரதமர் வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரஸ்ஸுக்குப் பதிலாக அவரது முன்னாள் போட்டியாளரான ரிஷி சுனக் நியமிக்கப்படலாம் என்ற ஊகங்களால் லண்டனில் பரபரப்பாக உள்ளது. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பென்னி மோட் ஆகியோரின்  பெயர்களும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

 

 

No comments: