Friday, October 21, 2022

ஹட்ரிக் சாதனை படைத்த கார்த்திக் மெய்யப்பன்

அவுஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு எதிராக   ஹட்ரிக்  சாதனை படைத்தார்   கார்த்திக் மெய்யப்பன். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில்  ஹட்ரிக் எடுத்த முதல் ஐக்கிய அரபு நாட்டு  வீரராக சாதனை படைத்த அவர் ஒட்டுமொத்தமாக வரலாற்றில் ஹட்ரிக்  எடுத்த 5வது பந்து வீச்சாளராக வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த 2000 அக்டோபர் 8ஆம் திகதி பிறந்தார் கார்த்திக் மெய்யப்பன்.  கடந்த 2012ஆம் ஆண்டு அவரது குடும்பம் துபாய்க்கு குடி பெயர்ந்ததால் அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2019இல் 19  வயதுக் குட்பட்ட அணியின் கப்டனாக செயல்பட்டார்.

2020 ஐபிஎல் சீசன் கடைசி நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றப்பட்டபோது விராட் கோலி கப்டனாக இருந்த பெங்களூரு அணி நிர்வாகம் இவரையும் அப்போதைய அமீரக அணியின் கப்டனாக இருந்த அஹமத் ராஜாவையும் நெட் பந்து வீச்சாளர்களாக அழைத்தது. அப்போது 20 வயதான கார்த்திக் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பையும் சஹால், ஆடம் ஜாம்பா போன்ற நட்சத்திரங்களுடன் பந்து வீசும் வாய்ப்பையும் பெற்றார். ஐபிஎல் 2021 சீசனின் 2வது பாகம் துபாயில் நடைபெற்றது. அந்த தொடரில் இவரது திறமையை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய நெட் பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்தது. அதனால் டோனி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராகப் பந்து வீசும் பொன்னான வாய்ப்பை பெற்ற மெய்யப்பன் அனுபவத்தை மேலும் வளர்த்துக் கொண்டார்

ஐபிஎல் தொடரில் நெட் பந்து வீச்சாளராக அனுபவத்தைப் பெற்றதால் கடந்த 2021 அக்டோபர் 8ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ரி20 போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய மெய்யப்பன் வெறும் 25 ஓட்டங்கள்   கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தன்னுடைய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றிய அவர் வரும் காலங்களில் ஏதேனும் ஒரு அணியில் முதன்மை பந்து வீச்சாளராக விளையாட விரும்புவதாக 2020ஆம் ஆண்டு கொடுத்த பேட்டியில் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது வேகத்துக்கு சாதகமாகவும் சுழலுக்கு சவாலும் கொடுக்கக்கூடிய அவுஸ்திரேலியாவில் ஹட்ரிக் சாதனை படைத்துள்ள அவரை நிச்சயமாக வரும் ஐபிஎல் தொடர்களில் ஏதேனும் ஒரு அணி வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. 

No comments: