Sunday, October 9, 2022

விவாதப்பொருளான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழன்

 கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை திரைப்படமாக மணிரத்தினம் ஆரம்பித்தபோது எழுந்த சர்ச்சைகளும் சலசலப்புகளும்   படம்  வெளியான பின்னர் அதிகரித்துள்ளன.

எம்.ஜி.ஆர்ம் ,கமலும்  முயற்சி செய்து முடியாமல் போன  பொன்னியின் செல்வன் திரைப் படத்தை மணிரத்தினம் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார். முதல் தடவை முயற்சி செய்தபோது மணிரத்தினமுக் கைவிட்டுவிட்டார். இரண்டாவது தடவை  வெற்றி பெற்று விட்டார்.

 கல்கியின்  பொன்னியின்  செல்வனை முழுதாக  உள்வாங்கிய வாசகர்கள் மணிரத்தினத்துடன் ஒத்துப் போகவில்லை. பொன்னியின் செல்வன் நாவலின் விற்பனை அதிகரித்துள்ளது. கல்கி வார வெளியீட்டில்  ஐந்து வருடங்களாக பிரசுரமான நாவலை திரைபடமாக்குவது சுலபமானது அல்ல. ஐந்து பாகங்களை திரைக்கதையாகுவதில் சிக்கல்களை  புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பாகங்கள்  முதல் படமாக வந்துள்ளது.ஒன்றரை வருடங்கள் நடக்கும் கதை.

பொன்னியின் செல்வன் படத்தின்  புகைப்படங்கள் வெளியான போது சர்ச்சைகளும் விவாதங்களும் மேலெழுந்தன. பொட்டு,உடை,நகை என்பன தென் இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தவில்லை. வட இந்திய திணிப்பு என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது ராஜராஜ சோழன்  இந்துவா சைவனா எனும் விவாதம் அரசியலாக்கப்பட்டுள்ளது.ராஜராஜசோழன் இந்து என  பாரதீய ஜனதாக் கட்சியினர் கூறுகின்றனர். ராஅராஜசோழன் காலத்தில் இந்து இல்லை. சைவ சமயம்   இருந்தது என தமிழக அரசியல் தலைவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இயக்குநர் வெற்றிமாறனின்  பேச்சு பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களை  உசுப்பேற்றியுள்ளது. வெற்றிமாறனும்மு ஆதரவாக கமல், சீமான், திருமாவளவன், இடதுசாரி கொம்யூனிஸ்ட் தலைவர்கள் களம்  இறங்கியுள்ளனர்.

வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாக  இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளது தற்போது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு கலை திருவிழா சென்னையில்   நடைபெற்றது; இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசினார். அப்போழுது சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதால் தான் தமிழ்நாட்டில் இன்னும் மதசார்பாற்றக தற்போது வரை விளங்கி வருவதாக கூறினார்.

மேலும் கலையை சரியாக கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள் என பேசினார்.

அதேபோல் ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் பேசி இருந்தார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது சமூகவலை தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார் என அறிவித்தார்.

ராஜராஜ சோழனை குறித்த இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

 எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், குஷ்பு,பேரரசு உள்ளிட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கருணாஸ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் “ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து?ஏது இந்தியா?இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள் .இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் “ராஜராஜ சோழனை இந்து அரசனாக்கி தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறிக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்து மிக உண்மையானது, சரியானது; அவரை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது எனவும் கூறினார்.

எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்த நிலையில், எட்டாம் நூற்றாண்டில் அதையெல்லாம் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வந்தார்.இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளம் மூலம் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மணிரத்னம் இயக்கியுள்ள  பொன்னியின் செல்வன் படத்தை சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் பார்த்தார். அவருடன் நடிகர்கள் விக்ரம், கார்த்தி இருவரும் இணைந்து படம் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். 

திரைஉலகில் சர்ச்சைக்குள்ளான  பொன்னியின் செல்வன், அரசியல் அரங்கில் ராஜராஜசோழனின் மதம் எது என்ற‌ விவாதத்தை உருவாக்கியுள்ளது.

No comments: