Wednesday, January 18, 2023

தெரிந்த சினிமா தெரியாதசங்கதி


 குற்றமும் தண்டனையும், ‘கரமசோவ் சகோதரர்கள் ஆகிய நாவல்களின் ஆசிரியர் தஸ்தாவெஸ்கி அவரது உக்டவியாளர் அன்னாவுக்கும்  இடையிலான

 உண்மைக் காதல்தான் முதல் மரியாதை படம்  உருவாகக் காரணமாக இருந்தது. தஸ்தாவெஸ்கிக்கும்  அன்னாவுக்கும் ஏறக்குறைய 40 வயது வித்தியாசம் இருக்கும் .ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை . அவள் இல்லாமல் வாழ முடியவில்லை . தஸ்தாவெஸ்கி இறந்து , 30 வருடங்கள் ஆன பின்பும் கூட அன்னா அவரது நினைவாகவே வாழ்ந்தாள்.  அரசைக் கடுமையாக எதிர்த்து எழுதக் கூடியவர் தஸ்தாவெஸ்கிஅந்த இருவரின் களங்கமில்லா அன்புதான் , `முதல் மரியாதை படத்தின் அடிநாதம் . அன்பு என்பது உடலால் வருவதல்ல , மனதால் வருவது . இந்தக் கதையைச் சொன்னதும்

இயக்குனர் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்.விட்டது .

பாம்குரோவ் ஓட்டலில் வைத்து ஆர்.செல்வராஜிடம் ஒரு இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து , ‘என் வாழ்வும் தாழ்வும் உன் கையில்தான் இருக்கு …. இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்; ஸ்கிரிப்டாகத் தாருங்கள் என்று சொன்னார் .

இது எனக்கு எதுக்கு நீங்க வீட்டை வேற அடமானம் (அப்போது தி.நகரில் உள்ள ஒரு வீட்டை படம் எடுப்பதற்காக பாரதிராஜா அடமானம் வைத்திருந்தார்) வெச்சிருக்கீங்க வேண்டாம் என மறுத்தார் ஆர். செல்வராஜ் . . ஒருநாள் அவரை அழைத்து ‘ஸ்கிரிப்ட் ரெடி.. வாங்க என்று அழைத்தார் செல்வராஜ் . அன்றே , சென்னையிலிருந்து விமானத்தில் பறந்து வந்து, ஸ்கிரிப்ட்டைப் படித்தார் .

நட்புக்கும் காதலுக்கும் இடையே நீ ஒரு கப்பல் ஓட்டியிருக்கே ….. இந்தக் கப்பல் கரை தெரியாத கடலில் மிதக்குது.. கதை சூப்பர் சூப்பர்!’ என்று, பாராட்டினார் .உடனே , தொலைபேசியில் சித்ரா லட்சுமணனை அழைத்து , படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் . கதை பிரமாண்டமாக இருந்தது . ஏற்கனவே சிவாஜிகணேசனை ஒரு படத்திலாவது இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த பாரதிராஜாவே சொன்னார் …. ‘நாம சிவாஜியை இதில் நடிக்க வைக்கலாம் …’

நடிகர் திலகம் சிவாஜி பொதுவாகவே கதை கேட்காமல் எந்தப் படத்தையும் ஒப்பு கொள்வதில்லை ! அவரிடம் போய் பாரதிராஜா , ‘அண்ணே …. இதுதான் படத்தோட ஐடியா , நீங்க நடிச்ச நல்லா இருக்கும் என்று நான்கு வரியில் படத்தின் கதையைச் சொல்லி இருக்கிறார் . அப்போது உச்சத்தில் இருந்தார் இயக்குநர் பாரதிராஜா .அவர் மீது கொண்ட நம்பிக்கையில் நடிகர் திலகமும் ஒப்புக்கொண்டார். 

மைசூருக்கு அருகே, சிவசமுத்திரம் என்ற மலைக் கிராமத்தில் படப்பிடிப்பு.. காவிரிக் கரை ஓரம் அமைந்த மிக எழில் வாய்ந்த கிராமம் . சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம் .எல்லோரும் ஸ்பாட்டில் ஆஜர். இயக்குநரும் வந்து சேர்கிறார் . அப்போது நடிகர் திலகம் திரிசூலம் ராஜசேகர் கெட் அப்பில் மேக்கப் போட்டுக்கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார் . அதைப் பார்த்ததும் இயக்குநருக்கு செம மூட் அவுட் !

படப்பிடிப்புக் குழுவை விட்டுத் தள்ளி வெகுதூரம் போய் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறார். பற்ற வைக்கிறார் ….. கிறார் ….. சிகரெட் பாக்கெட் காலியாகிறது .நடிகர் திலகம் உட்பட மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி ! முதல் ஷாட் வைக்க வேண்டிய முகூர்த்த நேரமும் கடந்து விட்டது .

 இயக்குநர் ‘பேக்கப் என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார் . இயக்குநர் சொன்னால் சொன்னதுதான். யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள் .இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே ‘சுடச் சுட இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார் .நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார் . டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல , தகவல் இயக்குனருக்குத் தெரிவிக்கப்படுகிறது .

தட்ட முடியாமல் சாப்பிட வருகிறார்.நடிகர் திலகம் உட்கார்ந்திருந்த அந்தக் காட்சியைப் பார்த்ததும் உற்சாகமாகி, ‘அண்ணே ….. இதான் எனக்கு வேணும் ! இப்படியே இருங்க ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று சாப்பிட மறந்து படப்பிடிப்புக்குத் தயாராகிறார் இயக்குநர் .

நடிகர் திலகத்திற்கு பேரதிர்ச்சி! மேக் அப் , விக் இல்லாமல் நடிச்சா தன்னோட ரசிகர்கள் எப்படி ஒத்துக்குவாங்க என்று இயக்குநரிடம் எவ்வளவோ சொல்கிறார் .

அண்ணே, நான் சொல்றேன் …. நல்லா வரும் வாங்க , என்று பாரதிராஜா சொல்ல படப்பிடிப்புத் தொடங்குகிறது .

ஒருநாள் ஷூட்டிங் முடிந்ததும் சிவாஜி , ‘‘மறுநாள் எங்கே படப்பிடிப்பு?” எனக் கேட்கிறார் . அப்போதுதான் கவனித்தார்கள். சிவாஜி அன்று முழுவதும் செருப்பு போட்டபடியே நடித்திருப்பதை . தவறு நடந்துவிட்டது . கதைப்படி அவர் செருப்பு அணியக் கூடாது .

‘‘நாளைக்கும் இதே காட்சிகள்தான் எடுக்க வேண்டும்’’ என்றார் பாரதிராஜா.. ‘‘ஏன்?’’ என்றார் சிவாஜி.‘மாமன் தொட்டுக் கும்பிட்ட காலில் செருப்பு அணிய மாட்டேன் என வைராக்கியமாக இருக்கும் பாத்திரம் சிவாஜிக்கு. ‘‘படப்பிடிப்பில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்’’ எனச் சொன்னார் பாரதிராஜா . சிவாஜி ஒரு கணம் ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குப் போய்விட்டார் .அந்தக் கலைஞனின் அக்கறையை அடுத்த நாள் காலையில் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள் . அடுத்த நாளில் இருந்து அவர், செருப்பு அணியாமல்தான் எல்லா நாளும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார்..  

சிவாஜி், ராதா , வடிவுக்கரசி , சத்யராஜ் , ரஞ்சனி , தீபன் , வீராசாமி , அருணா என அந்தப் படத்தின் அத்தனை பாத்திரங்களும் காவியக் கதாபாத்திரங்கள் .  படப்பிடிப்பு ஆரம்பித்த 100 ஆவது நாளில் படம் ரெடியாகிவிட்டது .

இசையமைப்புக்காகப் படத்தை இளையராஜாவிடம் போட்டுக் காட்டினார்கள் .அவர் பார்த்துவிட்டு, `படம் நல்லாயில்ல இதைத் தூக்கிப் போடச் சொல்லு . தீபன் , ரஞ்சனியை வைத்து வேறு கதையை பாரதிராஜாவைப் பண்ணச் சொல்லு . ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்காரு . இந்தப் படம் வந்தா மேலும் கஷ்டப்படுவார் என்று சொல்லிவிட்டார் கதாசிரியர் செல்வராஜிடம் .இயக்குனர் பாரதிராஜாவுக்குப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.

  படத்தைத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் போட்டுக் காட்டி இருக்கிறார்கள் … அவர் படம் பார்த்து , முடித்ததும் , ‘இந்தக் குதிரை அதிர்ஷ்டத்தில்கூட ஜெயிக்காது என்று சொன்னார்.  ஆனாலும், பாரதிராஜா பயப்படவில்லை …. சோர்ந்து போகவில்லை . இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் .

அப்போது , சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் `சுபாஷினி தியேட்டர் இருந்தது . அந்த தியேட்டரில் படத்தைப் போட்டு , படத்தில் பணியாற்றிய மற்றும் நெருக்கமான நண்பர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் படம் பார்க்க அழைத்தார்கள் . அவர்களது கையில் ஒரு பேப்பரைக் கொடுத்துவிட்டார்கள் . படம் பார்த்து முடித்துவிட்டு, அவரவர் கருத்துகளை அதில் எழுத வேண்டும். பெயர் அவசியமில்லை என்று சொல்லப்பட்டது. படத்தைப் பார்த்த பல பெண்கள் `சூப்பர் பிரமாதம் என்று எழுதி விட்டனர் . இப்படியாக , இரண்டு மூன்று முறை வெவ்வேறு ஆட்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள் .

இதன்பின் , படத்தின் மீது பாரதிராஜாவுக்கு மிகப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது .

செல்வராஜும் பாரதிராஜாவும் தாஜ் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . பிறகு, பரிமாறுபவரை அழைத்து பில் கொண்டு வரச் சொன்னார்கள். அவர், `ஏற்கெனவே பணம் கட்டி விட்டார்கள் சார் என்றார் .

யார் என்று தேடினால் , அத்தானி பாபு என்கிற கோயம்புத்தூர் விநியோகஸ்தர் . இவர்களுக்காகப் பணம் செலுத்தியிருந்தார் . அவர் படம் பார்த்திருக்கிறார். அவருக்குப் படம் பிடித்திருந்தது .

அவர் பாரதிராஜாவிடம் , `முதல் மரியாதை படத்தை நான் வாங்கிக்கிறேன் சார் என்று சொன்னார் . பிறகு , ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படத்தை வாங்கி, வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது .

இந்த நேரத்தில் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு போன். ‘‘ரஷ்யாவுக்கு ‘முதல் மரியாதை படம் வேண்டும். ஒரு பிரின்ட் எவ்வளவு ?” என விசாரித்தார்கள் .

அன்றைய நாளில்  25 ஆயிரம் ரூபாய்தான் பிரின்ட் செலவு. ‘எதற்கும் இருக்கட்டும் என பாரதிராஜா ‘ஒரு லட்ச ரூபாய் எனச் சொல்லியிருக்கிறார் .

ஆனால், அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள் . அவர்கள் கேட்டது , ரஷ்யாவுக்கு மட்டும் 100 பிரின்ட் .

பாரதிராஜா இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு பிரின்ட் என்பதால் அந்த விலை சொன்னார் . 100 பிரின்ட் என மொத்தமாகக் கொடுத்தால், அன்றைய மதிப்பில் ஒரு பிரின்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்கூட இருக்காது . இலாபம் கோடிகளில் கொட்டியது.

No comments: