Wednesday, January 18, 2023

பொங்கி எழுந்த கோலி சதம் அடித்து அசத்தினார்.


 இலங்கைக்கு எதிரான  மூன்றாவது ஒருநாள்  போட்டியில் சதம் அடித்த கோலி மேலும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.தை முதல் நாளான ஜனவரி 15ம் திகதி   விராட்கோலி அடித்த நான்காவது சதம் இதுவாகும்.

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 122 ஓட்டங்களும், 2018ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதிதி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 153 ஓட்டங்களும், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 104 ஓட்டங்களையும், 2023 ஆம் ஆண்டு  இலங்கை அணிக்கு எதிராக 166 ஓட்டங்களையும் கோலி அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் வேறு எந்த வீரரும் இந்த சாதனையை படைத்ததில்லை.

கோலி 48 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சேர்த்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த 37 பந்துகளிலேயே 50 ஓட்டங்கள் அடித்தார்.  85 பந்துகளிலேயே கோலி தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 46வது , சர்வதேச போட்டிகளில் அடிக்கும் 74வது சதமாகும். இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடித்தார்.  கோலி ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 8 சிக்சர்கள் , 13 பவுண்டரிகளுடன் 166 ஓட்டங்கள் அடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிகமுறை 150 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்,  5 முறை கோலி ஒருநாள் போட்டிகளில் 150 ஓட்டங்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான் ரோகித் சர்மா(8), சச்சின் (5) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 100 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக  அடித்த வீரர்களின் பட்டியலில், அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொண்டிங்கை பின்னுக்கு தள்ளி கோலி(73) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் (99) முதலிடத்தில் இருக்கிறார்.

கோலி  62 ஓட்டங்கள்   எடுத்தபோது,   ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த  வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தார், 12,650 ஓட்டங் கள் எடுத்து ஐந்தாவது இடத்தில்  இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜயவர்தனைவை முந்தியுள்ளார்.   கோலி இதுவரை 46 ஒருநாள் சதங்கள், 27 டெஸ்ட் சதங்கயும்,  ரி20 யில் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.

மூன்று வருடங்களின்  பின்னர் 71 ஆவது சதத்தை அடித்த கோலி , மூன்று மாதங்களின்  பின்னர் 72 ஆவது சதத்தையிம், மூன்று கிழமைக்குப்  பின்னர் 73 ஆவது சதத்தையும், மூன்று நாட்களின்  பின்னர் 74 ஆவது சதத்தையும் அடித்தார்.

 

No comments: