Saturday, January 28, 2023

வீடு VS குத்துவிளக்கு


  வடக்கு ,கிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  போட்டியிடவில்லை. பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான பகைமையால் இந்த நிலை தோன்றியுள்ளது.  தமிழ் அரசுக் கட்சியின் மூத்த அண்ணன் மனப்பான்மையை சின்னத்தம்பிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.  உள்ளே புகைந்து கொண்டிருந்த அனல் வெளிப்பட்டதால்   புதியதொரு கூட்டமைப்பு  உருவாகி உள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித் தனியாகப் போட்டியிட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சி  விரும்பியது.  கூட்டமைப்பில் உள்ள புளொட்டும்,  ரெலோவும் அதனை விரும்பவில்லை. கூட்டமைப்பில் இருந்து வெளியேறக் காத்துக் கொண்டிருந்த அந்தக் கட்சிகள் இந்தத் துரும்பைப் பற்றிப் பிடித்து கூட்டமைப்பில்  இருந்து வெளியேறி  புதியதொரு கூட்டமைப்பை  உருவாக்கி உள்ளன.  தமிழ் அரசுக் கட்சியை  விரும்பாத தலைவர்கள்   ஒன்றாக  இணைந்து  புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.

 தமிழ் அரசுக் கட்சியுடன்  இணைந்து அரசியல் செய்தவர்கள் இன்று அதற்கு எதிராகக் களம்  இறங்கி உள்ளனர். முன்னாள்   முதலமைச்சர் சி.விக்னேஸ்வான், சைக்கிளில்  ஓடித்திரிந்த மணிவண்ணனாகிய  இருவரும்   கடைசி நேரத்தில் இந்தக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிவிட்டனர்.

தமிழ் அரசுக் கட்சியின் முதுகில் ஏனைய கட்சிகள் சவாரி செய்தனவா அல்லது ஏனைய கட்சிகளின் ஆதரவில் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள்  வெற்றி பெற்றார்களா  என்பதை உள்ளூராட்சிசபைத் தேர்தலின்  முடிவு தெளிவுபடுத்திவிடும். தமிழ் அரசுக் கட்சியின் சின்னம்  வீடு. புதிய கூட்டமைப்பின் சின்னம் குத்துவிளக்கு. வீட்டுக்குள்  இருக்க வேண்டிய குத்துவிளக்கை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும்  இல்லை என்பதை இவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

புளொட்,ரெலோ,.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயகப் போராளிகள்,தமிழ் தேசிய்க் கட்சி ஆகியன  இணைந்துஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற  பெயரில் புதிய கட்சி  உருவாகி உள்ளது. ரெலோவும், புளொட்டும்  புதிய கட்சிகளுடன்  கூட்டணி அமைத்துள்ளன.  தமிழ் தேசியக் கூட்டமிப்பில்  இருந்து வெளியேறிய  .பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இவர்களுடன்  இணைந்துள்ளது. வடகு கிழக்கில் இரண்டு கூட்டமைப்புக்கும் இடையில்தான்  போட்டி இருக்கப் போகிறது. கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக தமிழ்  தேசியக் கூட்டமைப்பு எதிர் பார்க்கும் வெற்றி கிடைக்காது. கிழக்கில்சிங்கள,  முஸ்லிம் வாக்குகள்   அதிகளவில் இருப்பதால்   போட்டி பலமாக  இருக்கும்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்னும் கட்சி , தமிழ் தேசியக் கூட்டனிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தமிழ்க் கட்சிகள் அனைத்து ம் ஒன்றானபோது புளொட்,.பி.ஆர்,எல்,எப் கட்சியில் இருந்து வெளியேறிய சுகு அணி ஆகிய இரண்டும்  இணைந்து உருவாக்கிய கட்சி. அக் கட்சியில்  இன்று .பிஆர்.எல்,எப் கட்சியும் இணைந்துள்ளது.

 நடைபெறப் போவது உள்ளூராட்சி சபைத் தேர்தல்.  வடக்கு, கிழக்கில்  தமிழ் மக்களின் ஆதரவு  யாருக்கு என்பதை  வெளிப்படுத்தும் தேர்தலாக மாறப்போகிறது. ஊரில் உள்ள செல்வாகு மிக்க  ஒருவரைத் தேர்வு செய்யும் தேர்தல்.  இந்தத் தேர்தலின் முடிவை வைத்துக் கொண்டு மாகாண சபைத் தேர்தலையோ அல்லது பாராளுமன்றத் தேர்தலையோ கணிக்கமுடியாது.

வாக்குகள் சிதறடிக்கப்படுவதால் அறுதிப் பெரும்பான்மை  கிடைப்பது சந்தேகம். யார் ஆட்சி அமைத்தாலும் பாதீட்டைத் தோற்கடிப்பதில் எதிர்க் கட்சிகள்  ஒன்றிணைவது  கடந்தகால வரலாறு. எந்தக் கட்சி வெற்ரி பெற்றாலும் தோர்கப்போவது தமிழ் மக்கள் என்பதை அரசியல் வாதிகள்  இன்னமும்  உணரவில்லை.

No comments: