Tuesday, March 7, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -59


 மிடுக்கான பொலிஸ் அதிகாரி என்றால்  கண்  முன்னால் கம்பீரமாகக் காட்சியளிப்பவர் எஸ்.பி.  செளத்திரி. தங்கப்பதகத்தில்  எஸ்.பி.செளத்திரியாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி. சினிமா வாய்ய்பு தேடி அலைந்தபோது செந்தாமரை கேட்டதற்கிணங்க வேண்டா வெறுப்பாக எழுதிய கதைதான் தங்கப்பதக்கமாக பெரு  பெற்றி பெற்றது. நாடக  உலகில் செந்தாமரை கொடி கட்டிப்பறந்த காலத்தில்  மகேந்திரனால் எழுதப்பட்டது தான்   "இரண்டில் ஒன்று" எனும் நாடகம்.

தங்கப்பதக்கம் பட கதை பற்றி மகேந்திரன் கூறுகையில், நம்மைச் சுற்றி பல்லாயிரம் கதைகள்.என்னுடைய சிறுவயதில், உறவினர் ஒருவருடைய பெயர் என் காதில் விழுந்து கொண்டேயிருக்கும்.அவருடைய பெயர் முருகன்.சந்தனம் மகன் முருகன் என்று சொல்வார்கள்.

அவர் சிறுவயதில் மிகுந்த சேட்டைக்காரர்.ஏதாவது வம்பை இழுத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைவார்.அவருடைய அப்பாவும் அவரை  வெளுத்து வாங்கிவிடுவார்.ஊரில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் சந்தனம் மகன் முருகன்தான் என்று சொல்லிவிடுவார்கள்.அப்படியொரு பேரும் புகழும் சிறுவயதில் எங்கள் ஊரில் பெற்றிருந்தார்.

'சந்தனத்துக்கு புள்ளை பொறந்திருக்கு பாரு,நல்லா பேய்க்கணக்கா',என்பார்கள்.இதுவெல்லாம் அப்பொழுது என் காதில் விழும். .

கழுதை முருகனைக் கண்டாலே ஓட்டமெடுக்கும். நண்பர்களுடன் சேர்ந்து கழுதையின் வாலில் நூலைக்கட்டி, அந்த நூல் முழுவதும் டப்பாக்களைக் கோர்த்து வெடியை வைத்துவிட்டால் கழுதை தெறித்து ஓடும்.சரி,தவறு என பகுத்து ஆராய முடியாத பருவம்

நான்,முதன்முதலில் ஒரு கதையை உருவாக்க வேண்டும் என நினைத்த பொழுது எதுவுமே சரிப்பட்டு வரவிலை.அப்பொழுதுதான் இந்த முருகனின் ஞாபகம் வந்தது.அவரேசூப்பர் கரக்டர். இந்த முரட்டுத்தனமான கரக்டர் வளர்ந்தப் பிறகு எப்படியிருப்பான்?இவனுக்கு முரண்பாடாக  கதாநாயக அந்தஸ்து கொடுக்க நினைத்தேன் என்றார்.


 தமிழ்சினிமாவில் முரண்பாடான கதாபாத்திரங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளது.தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தந்தை நேர்மையான அதிகாரியாகவும்,மகன் ஒரு திருடனாகவும் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. இந்தக் கதாபாத்திரங்களின் வெளிப்பாடுதாஅன் 'அஞ்சாதே',திரைப்படம் என்று மிஷ்கினே சொல்லியிருக்கிறார்.

“இரண்டில் ஒன்று” என்ற பெயரில் ஐந்து நாட்களில் நாடகத்தை எழுதி முடித்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.செளத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.          

நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, “சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.செளத்ரியாக நான் நடிக்கிறேன்” என்று கூறினார். “இரண்டில் ஒன்று” என்ற பெயர் “தங்கப்பதக்கம்” என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.செளத்ரிக நடிக்க, மியுசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. 100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.“தங்கப்பதக்கம்” நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார்.

எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.

அந்த ராஸ்கலை நான் சுட்டுக்கொல்ல வேணும் என  உறுதியாகச் சொன்னார்.  நாடகத்தில் எஸ்.பி.செளத்திரியின் மகன்  இறக்கவில்லை.படத்தில் தகப்பனின் துப்பாக்கிச் சூட்டில் மகன்  பலியாகிறார்.

 தங்கப்பதக்கம் ஐந்து லட்சத்துக்கு மேல் வசூலித்தது. அன்று ஐந்து லட்சம் என்பது பெரிய தொகை.  1974 ஜுன் 1 ஆம் திகதி வெளியானது. அன்றும் நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும் வசூல் போட்டி எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும்தான். எழுபதுகளின் தொடக்கத்தில் இரு நடிகர்களின் ரசிகர்களும் பித்தேறித் திரிந்த காலகட்டம். 1973 மே 11 எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்திருந்ததோடு படத்தையும் இயக்கியிருந்தார். ஒன்றுக்கு மூன்று நாயகிகள், வெளிநாடுகளில் படப்பிடிப்பு, அருமையான பாடல்கள், அட்டகாசமான  சண்டைக் காட்சிகள் என ரசிகர்களை ஒரு வேர்ல்ட் டூரே அழைத்துச் சென்றார் எம்ஜிஆர். படம் திரையிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் திருவிழாக் கூட்டம்.சென்னை தேவிபாரடைஸ் திரையரங்கில் திரையிட்ட 67 தினங்களில் 201 அரங்கு நிறைந்த காட்சிகள். மதுரை மீனாட்சியில் 241 அரங்கு நிறைந்த காட்சிகள். இந்த இரு திரையரங்குகளிலும் இதுதான் அதிகபட்சம். எம்ஜிஆர் ரசிகர்கள் உலகம் சுற்றும் வாலிபனை கொண்டாடித் தீர்க்க, சிவாஜி ரசிகர்கள் பெருமிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கும் இதேபோலொரு மாபெரும் வெற்றி தேவைப்பட்டது. அவர்களின் ஆசை ஒரே வருடத்தில் தங்கப்பதக்கம் திரைப்படம் மூலம் நிறைவேறியது.

 உலகம் சுற்றும் வாலிபன் ஓடித் தீர்ந்த நிலையில் தங்கப்பதக்கம் வெளியானது. சிவாஜி ரசிகர்களே எதிர்பார்க்காத அளவுக்கு படம் மிரட்டலாக இருந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கில் வந்து படத்தை கண்டு ரசித்தனர். சென்னையில் சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி என மூன்று திரையரங்குகளில் படம் வெளியானது.முதல் 70 நாட்களில் இந்த 3 திரையரங்குகளில் 630 காட்சிகள் திரையிடப்பட்டன. இதில் சாந்தியில் 210 காட்சிகளும், கிரவுனில் 198 காட்சிகளும், புவனேஸ்வரியில் 158 காட்சிகளுமாக மொத்தம் 566 அரங்கு நிறைந்த காட்சிகள். தமிழகம் முழுவதும் இதேதான் நிலை. முக்கியமாக மதுரையின் பிரமாண்ட திரையரங்குகளில் ஒன்றான சென்ட்ரலில் முதல் 112 தினங்களில் 361 அரங்கு நிறைந்த காட்சிகள். அப்போதெல்லாம் பெரிய படங்களுக்கும் தினம் 3 காட்சிகள்தான். சனி, ஞாயிறில் 4 நான்கு காட்சிகள். கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. முதல் 112 தினங்களில் 5,18,936 பேர் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மட்டும் தங்கப்பதக்கத்தை கண்டு ரசித்துள்ளனர்.


இன்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் படத்தின் உண்மையான வசூலை சொல்லத் தயங்குகின்றனர். வருமான வரி கட்ட வேண்டியிருக்குமே என்ற பயம். அன்று அந்த பயம் இல்லை. அல்லது, நேர்மையான வருமான வரியை கட்ட அன்று யாரும் தயங்கவில்லை. அதனால் படங்களின் வசூல் நிலவரங்களை படத்தின் விளம்பரங்களிலேயே வெளிப்படையாக அளித்து வந்தனர். அந்த வெளிப்படைத்தன்மை இன்று வரும்போது, தமிழ் திரைப்பட வர்த்தகம் இன்றைய இருண்ட நிலையிலிருந்து வெளிச்சத்துக்கு வரலாம்.

No comments: