Sunday, March 5, 2023

ஈரோட்டில் காங்கிரஸுக்குக் கைகொடுத்த தி.மு.க


 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில்  போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரமாண்டமான வெற்றி பெற்று புதிய வரலாறு  படைத்துள்ளார். ஈரோடு இடைத் தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்  நேருக்கு நேர் போட்டியிட்டன.

  கூட்டணிக் கட்சியான  காங்கிரஸின் வெற்றி தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எடை போடும் தேர்தலாகப் பார்க்கப்பட்டது.  மறு புறத்தில் எடப்பாடியின் தலைமையை அங்கீகரிக்கும் தேர்தலாகவும்  நோக்கப்பட்டது. இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின்  வெற்றி தவிர்க்க முடியாதது. ஆனால் , காங்கிரஸின்  வெற்றிக்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது.

கடந்த 27ம் திகதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த ஈவிகேஎஸ், அதிமுக வேட்பாளரை விட 66,575 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார்.அதிமுக வேட்பாளர் தென்னரசு, 41,357 வாக்குகள் பெற்று கட்டுப் பணத்தைத் தக்கவைத்தார். ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் கட்டுப் பணத்தை இழந்தனர்.  காங்கிரஸ் - 1,10,039; அதிமுக - 43,981; நாம் தமிழர் - 10,804; தேமுதிக - 1,114   வாக்குகள்  பெற்றன. 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான  கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கொடி பறக்கிறது. கருணாநிதியால் செய்யமுடியாததை அவரது மகன் ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார்.  அண்ணா திராவிட முன்னேற்ரக் கழக்த்தின் தோல்விக்கு எடப்பாடியின் பதவி ஆசைதான்  பிரதானகாரணம். இரட்டை இலை கிடைத்துவிட்டால் வெற்றி பெறலாம் என எடப்பாடி கணக்குப் போட்டார். இரட்டை இலை,  கிடைத்தும் படு தோல்வியைச் சந்தித்துள்ளார்.எடப்பாடி ஆட்சியில் இருந்த போது கிடைத்த வெற்றிகலுக்கு  .பன்னீர்ச்செல்வத்தின் பங்கும்  இருந்தது.பன்னீர்ச்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை வெளியேற்றி விட்டு  ஒற்றைத் தலைமையில் கட்சியைக் கைப்பற்றலாம் என எடப்பாடி கண்ட கனவு கலைந்துவிட்டது.

 பெரும் பான்மை தன்னிடம்  இருப்பதகச் சொல்லிய எடப்பாடிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களே வாக்களிக்கவில்லை.

ஈரோட்டில் வெற்றி பெற முடியாது என்ற  உண்மை தெரிந்துதான் வேட்பாலர் தென்னரசை பலிகொடுத்தார் எடப்பாடி.கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஒன்பதாயிரம் வாக்குகளால் தோல்வியடைந்தார். மிக நெருக்கமான தோல்வி  கடந்த தேர்தலை விட அதிகப்படியான வாக்குகள்  பெற்றல் ஒற்றைத் தலைமை உறுதியாகும் என எடப்பாடி  மனக் கணக்குப் போட்டார்.முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் நான்குமணி வரை கட்டுப் பணம்  கிடைக்குமா என சந்தேகமாக  இருந்தது. தமிழகத்தில் தாமரை மலரும் என சபதம்  செய்த அண்ணாமலையின்  பிரசாரம் கூட கைகொடுக்கவில்லை.

கடந்த  தேர்தலைவிட 12 சதவீத வாக்குகள் காங்கிரஸுக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10 சதவீதம்  குறைவாகப் பெற்றுள்ளது.

 எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த 8வது தோல்வி இதுவாகும்.  அதாவது, 2017-ல் தமிழக முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அப்போது முதலே இந்த தொடர் சறுக்கல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள்..  1. 2017 ஆர்கேநகர் இடைத் தேர்தல். 2. 2019 பாராளுமன்ற தேர்தல். 3. 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல். 4. ஊரக உள்ளாட்சி தேர்தல். 5. 2021 சட்டமன்ற தேர்தல். 6. ஒன்பது  மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல். 7. நகர்புற உள்ளாட்சி தேர்தல். 8. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.

தொடர்ச்சியாக எட்டுத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்திருப்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு மிகப்பெரிய சோர்வை தந்துள்ளது.. ஏற்கனவே கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், எடப்பாடியின் பிடிவாதத்தினால், ஒருங்கிணைந்த அதிமுக என்பதே காணாமல் போனதை தொண்டர்களால் ஏற்க முடியாமல் உள்ளனர்.. இதுவே அதிமுக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால், திமுகவுக்கு செக் வைப்பதுபோல, வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கலாமே என்பதே அவர்களின் ஏக்கமாக உள்ளது.  சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டபேரவைக்குள் நுழைகிறார் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தை விட்டு விலகி திமுகவை தொடங்கியபோது ஈவிகே சம்பத் அவருடன் இணைந்து பயணித்தார். பின்னர் ஈவிகே.சம்பத் காங்கிரஸில் சேர்ந்தார்.

தந்தையுடன், இளங்கோவனும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆனார். அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். அந்த அடிப்படையில், 1984ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இளங்கோவனும் அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்க, அவரது தாயார் சுலோச்சனா சம்பத், அதிமுகவின் அமைப்பு செயலாளராக இருந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராகவும் சுலோச்சனா விளங்கினார். காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்களால், அப்பா என்றும் தன்மான தலைவர் என்றும் அழைக்கப்படும் ஈவிகேஎஸ், எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு சோதனை வருகிறதோ அப்போதெல்லாம் அதனை தாங்கி பிடித்தவர்.

அதிமுகவுடனான கூட்டணியை எதிர்த்து 1996ஆம் ஆண்டு ஜி.கே. மூப்பனார் தனிக்கட்சியை தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த மிக சில சீனியர்களில் ஈவிகேஎஸ்-ம் ஒருவர். பின்னர் 2000ஆம் ஆண்டில், முதல்முறையாக காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார். 2001ல் மூப்பனாரின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பியதற்கு இளங்கோவனின் முயற்சிகளே காரணம்.

 ஈரோடு இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி என்று எதிர்பார்த்திருந்த வேளையில் திராவிட முன்னேற்றக் கழக  கேட்டணிக் கட்சி மட்டும்  வாக்கு வேட்டையை நடத்தியது. வாக்கு எண்ணும் நிலையத்துக்கு  அண்னா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் யாரும் செல்லவில்லை. வேட்பாலர் தென்னரசு மட்டும் தனியாக நின்றார். தோல்வி உறுதியானதும்  பணநாயகம் வெற்றி பெற்றது எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை   மக்கள் விரும்புகிறார்கள். எடப்பாடி விட்ட தவறுக்குப் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்பதையே  ஈரோடு  கிழக்கு  இடைத் தேர்த்ல்  முடிவு சொல்கிற‌து.

No comments: