Tuesday, March 14, 2023

மகளிர் ஐபிஎல் இல் கலக்கும் டோனியின் ரசிகை


   மகளிர் ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 5ஆம் திகதியன்று நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான லீக் போட்டியில் 170 ஓட்டங்களைத் துரத்திய உத்தரபிரதேசம் கடைசி ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. குறிப்பாக கிரேஸ் ஹாரிஸ் 59* (26) ஓட்டங்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் ஆட்ட நாயகி விருதை வென்றார். இருப்பினும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிந்த போது 3வது இடத்தில் களமிறங்கி 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53 (43) ரன்ஓட்டங் கள் குவித்து சிறப்பாக செயல்பட்ட இளம் இந்திய வீராங்கனை கிரண் நவ்கிர் அறிவிக்கப்படாத ஆட்டநாயகியாக அசத்தினர்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சோலாப்பூர் எனும் பகுதியை சேர்ந்த அவர் உள்ளூர் ரி20 கிரிக்கெட்டின் ஒரு போட்டியில் நாகாலாந்து அணிக்கு எதிராக 162 ஓட்டங்கள் குவித்து முதல் முறையாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் 150+ ஓட்டங்களை எடுத்த ஒரே இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ள அவர் என்னவென்று தெரியாத கிரிக்கெட்டை 2011 உலக கோப்பை பைனலில் கேப்டன் எம்எஸ் டோனி சிக்ஸர் அடுத்து வெற்றி பெற்று கொடுத்ததிலிருந்து தான் பார்க்கத் துவங்கியதாக கடந்த வருட மகளிர் ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் இதே போல் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வைத்த போது தெரிவித்திருந்தார்.

  அந்த நிலையில் இந்த போட்டியில் தன்னுடைய பேட்டில் தோனியின் பெயர் மற்றும் மேஜிக் நிறைந்த நம்பர் ஆகியவற்றை இணைத்து “எம்எஸ்டி 07” என தனக்குத்தானே எழுதிக்கொண்ட அவர் டோனியை போலவே மிகச் சிறப்பாக விளையாடினார். அவருடைய பேட்டில் தோனியை பற்றி எழுதியிருந்தது சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலானது. ஆனால் அதன் பின் இந்தியாவுக்காக விளையாடி தனது குடும்பத்தையும் கரை சேர்க்க போராடும் ஒரு ஏழை சிங்கப்பெண்ணின் கதை இருப்பது பலருக்கும் தெரியாது.

 இந்தியாவில் உள்ள பல ஏழை குடும்பங்களை போலவே பெரிய கனவுகளுடன் தங்களது மகள் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தொலைக்காட்சி கூட இல்லாத தங்களது வீட்டில் சிறிய மொபைல் போனில் பார்த்து ஆதரவு கொடுக்கும் நிலையில் தான் கிரண் நவ்கிர் குடும்பம் இருக்கிறது. அதை விட பொதுவாக அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் உபகரணங்களில் ஸ்பான்சர்ஷிப் செய்பவர்களின் பெயர் இருக்கும். ஆனால் தமக்கு இதுவரை யாரும் ஸ்பான்சர்ஷிப் செய்யாத காரணத்தால் தாம் விலை கொடுத்து வாங்கிய பேட் காலியாக இருப்பதை விரும்பாத கிரண் நவ்கிர் அந்த இடத்தில் தனது ரோல் மாடலான டோனியின் பெயரை விரும்பி எழுதியுள்ளார். அதன் காரணமாக அவருடைய பேட்டுக்கு ஸ்பான்சர்கள் கூட இல்லாதது முதல் முறையாக அனைவருக்கும் தெரிய வந்தது. அதை அறிந்த அதே உத்திரபிரதேச அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லஸ்டன் வெற்றியை கொண்டாடும் தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட போது “கிரண் நவ்கிர் பேட்டுக்கு ஸ்பான்சர் கொண்டு வாருங்கள்” என்று வாசகத்தையும் சேர்த்து பதிவிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

ஏழை பெண்ணாக இருந்தாலும் ஸ்பான்சர்ஷிப் இல்லை என்றாலும் அதற்காக கவலைப்படாமல் தனது ரோல் மாடலை அந்த இடத்தில் எழுதி வைத்து மிகச் சிறப்பாக விளையாடும் அவருக்கு மிக விரைவில் ஸ்பான்சர் கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அத்துடன் தோனியை பார்த்து கிரிக்கெட் விளையாடத் துவங்கியதாக அவர் பேசிய பழைய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட் பற்றி தெரியாத காலத்திலிருந்து நான் தோனியை பின்பற்றி வருகிறேன். எங்களுடைய வீட்டில் 2011 உலக கோப்பை பைனல் நடைபெற்ற போது அதைப் பற்றி குழந்தையாக இருந்த நான் என்னுடைய சகோதரர்களிடம் கேட்டேன்” -  “அப்போது அது இந்தியா மற்றும் இலங்கை மோதும் ஃபைனல் என்று அவர்கள் சொன்னார்கள். அப்போது அந்த இன்னிங்ஸ் விளையாடி அந்த சிக்சரை தோனி அடித்தது என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதிலிருந்தே நானும் அவரை போல விளையாடி நிலைமை எதுவாக இருந்தாலும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன்” என்று கூறினார்.

No comments: