Monday, March 27, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -62


 அறிஞர்,கலைஞர்,கவிஞர் என்றால்  அது முறையே அண்ணாதுரை,கருணாநிதி,கண்ணதாசன் ஆகியோரைச் சுட்டும்  என்பது யாவரும் அறிந்ததே.சினிமாவில் நடிகர்களின்  பெயருக்கு முன்னால்  பொறிக்கப்பட்ட பட்டப்  பெயர்கள், கவிஞர், இயக்குநர்  போன்றவர்களுக்கும்  சூட்டப்பட்டது. அதிகமானவர்களுக்கு  பட்டம் பெயர் கொடுத்தவர் கருணாநிதி. கருணாநிதிக்கு  எம்.ஆர்.ராதா கொடுத்த "கலைஞர்" எனும் பட்டம் தான்  இன்றுவரை  கருணாநிதியின் முகத்தை  மனக்கண்ணில் நிறுத்துகிறது .

நாடகமேடைகளில் தன்  நிகரில்லாமல் நடிகனாக விளங்கிய  எம்.ஆர்.ராதாவுக்கு அ937 ஆம் ஆண்டு  ‘ராஜசேகரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம்  கிடைத்தது.     மேலை நாடுகளுக்குச் சென்று திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றுவந்த  இந்தப் படத்தை ஆர்.பிரகாஷ் இயக்கினார். ‘ராஜசேகரன்’ படத்தில் இ.ஆர்.சகாதேவன் கதாநாயகன். எம்.ஆர்.ராதா வில்லன். இந்தப் படத்துடன் ‘ஏமாந்த சோனகிரி’ என்றொரு படத்தையும் இணைத்துத் திரையிட்டார்கள்

.கொலிவூட்டின் ‘டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ்’ போல எம்.ஆர்.ராதாவின்  நடிப்பு இருந்ததால் ‘இண்டியன் டக்ளஸ்’ என்ற வாசகத்துடன் அவரது படங்கள் போட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவருடைய நடிப்பு மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக  இருந்தது.படம் வெற்றி பெறாததால் எம்.ஆர்.ராதாவுக்கு சினிமா வாய்ப்புகள்  கிடைக்கவில்லை.

   சினிமாவை நம்பிப் பிரயோசனம்  இல்லை என்பதால்  மீண்டும் நாடகத்துக்குத் திரும்பினார்  எம்.ஆர்.ராதா யதாத்தம் பொன்னுசாமிப் பிள்ளை ‘இழந்த காதல்’, ‘விமலா அல்லது விதவையின் கண்ணீர்’ ஆகிய இரண்டு நாடகங்களையும் பார்த்த எம்.ஆர்.ராதா அவற்றை மெருகேற்றி அரங்கம் அமைத்தால் சிறப்பாக  இருக்கும் என  பொன்னுசாமிப் பிள்ளையிடம்  சொன்னார். அத்துடன் அதில் வரும் வில்லன் ஜெகதீஷ் வேடத்தில் தானே நடிக்கிறேன் என்றும் சொன்னார்.  பொன்னுசாமிப்பிள்ளை  ஒப்புதலளித்தார்.

சேலத்தில் நியூஓரியண்டல் தியேட்டரில் புத்தம்புதுப் பொலிவுடன் அரங்கேறிய  ‘இழந்த காதல்’. பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆறு மாதகாலம் நடந்து நாடகவுலகில் புதிய சாதனை படைத்தது.  எம்.ஆர்.ராதாவின் நடிப்பை ‘ராஜசேகரனில்’ பார்த்து ரசித்தவர் மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர்.சுந்தரம். அவர் தயாரிப்பில் உருவான ‘சந்தனதேவன்’, ‘சத்தியவாணி’ ஆகிய படங்களில் ராதாவுக்கு நடிக்க  வாய்ப்பளித்தார்.நாடகத்தில் இருந்து சினிமாவுக்குத் திரும்பினர் எம்.ஆர்.ராதா.

மதராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்று அறியப்பட்டிருந்த ராதாவின் பெயரை எம்.ஆர்.ராதா என்று சுருக்கி வைத்தா டி.ஆர்.சுந்தரம்.தான் என்று ஒரு   அந்த இரு படங்களும் பெரிய வெற்றிபெறவில்லை. எனவே, ராதா நாடகத்தில் இன்னும் கவனம் செலுத்தினார். ‘சரஸ்வதி கான சபா’ என்றொரு நாடகக் குழுவைத் தொடங்கினார். ‘இழந்த காதல்’ நாடகத்தை அதில் நடத்தினார். சரிவர வசூல் இல்லை. பின்னர் ‘மதுரை மங்கள பாலகான சபா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் வாரம் இரண்டு நாட்கள் பி.எஸ்.ஞானத்துடன் இணைந்து நடித்துவந்தார் ராதா.

  1943-ல் ‘திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார் ராதா. முகப்புத் திரைச்சீலையில், ‘உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்தையும் எழுதி வைத்தார்.துணிச்சலோடு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள் வாயிலாகச் சொல்லிவந்தார்.பெரியாரின் கொள்கைகளைப் பேசியதால் ராதாவின் நாடகங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். சண்டைகளும் சலசலப்புகளும்கூட அவ்வப்போது நடக்கத் தொடங்கின. கலவரங்களின்போது படுதாவை இழுத்துவிட்டு, மேடையில் மைக் முன்னே ராதா தோன்றிவிடுவார்.

"யார் கலாட்டா செய்வது? உங்களுக்கு நாடகமோ அல்லது அதில் சொல்லப்படுகிற விஷயமோ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தந்த பணத்தைத் திருப்பி வாங்கிக்கொண்டு வெளியேறிவிடுங்கள். தேவையின்றி மக்களுக்குத் தொல்லை தராதீர்கள்.நான்தான் சீர்திருத்த நாடகம் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறேனே. அதைப் பார்த்துவிட்டுத்தானே நாடகத்திற்கு வந்தீர்கள்? அப்படியானால் நான் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும். இல்லையேல் கிளம்புங்கள். நேரத்தை வீணாக்க வேண்டாம். என் உயிர் உள்ளவரையில் என் கருத்தை நான் சொல்லிக்கொண்டேயிருப்பேன்." கலகலப்பு அமைதியாகிவிடும்

. ராதாவின் விருப்பப்படி கலைஞர் எழுதிய நாடகம்தான் ‘தூக்குமேடை’. அதில் ராதாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர் தலைவராக கருணாநிதியும் நடித்தார். அந்த நாடகமும் தமிழ்நாட்டில் பெரும் புரட்சியை உண்டுபண்ணியது.

பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் இந்த நாடகத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய ராதா, "நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நாடகத்தை எழுதி, அதில் நடித்தும் சிறப்பித்த இவரை நான் இன்றுமுதல் அறிஞர் என்ற பட்டப்பெயருடனேயே அறிஞர் கருணாநிதி என்றே அழைக்க விரும்புகிறேன்" என்றார்.

இதைக் கேட்டு விருட்டென எழுந்த கருணாநிதி, "இல்லை... அறிஞர் என்றால் அது அண்ணா மட்டும்தான்" என்றார். ராதா விடாமல், "சரி, பேரறிஞர் கருணாநிதி என்று அழைக்கட்டுமா?" - என்றார். அப்போதும் குறுக்கிட்ட கருணாநிதி, "அண்ணாவைவிட நான் எதிலும் உயர்ந்தவனில்லை!" என்றார்.

"அப்படியானால் நான் கலைஞர் கருணாநிதி என்று அழைக்கட்டுமா?" என்றதுதான் தாமதம், கூட்டத்திலிருந்த தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். கைதட்டி வரவேற்றார்கள். அன்றிலிருந்துதான் அவர் கலைஞர் கருணாநிதி என்று உலகின் நாவுகளெல்லாம் உச்சரிக்கும் திருப்பெயர் பெற்றார். அதுபோல ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தைப் பார்த்து வியந்த பட்டுக்கோட்டை அழகிரிதான் எம்.ஆர்.ராதாவை ‘நடிகவேள்’ என்று சிறப்புப் பெயர் சூட்டி அழைத்தார்

’மக்கள் திலகம்’ எம்ஜிஆர் போல், ‘புரட்சி நடிகர்’ எம்ஜிஆர் போல, ‘நடிகர்திலகம்’ சிவாஜி போல், ‘லட்சிய நடிகர்’ எஸ்எஸ்ஆர் போல், ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் போல், அப்போது சிவகுமார், கமல், ரஜினி முதலானோருக்குக் கூட பட்டங்கள் சூட்டப்படவில்லை. ஆனால் விஜயகுமாருக்கு ‘புரட்சிக்கலைஞர்’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது.எழுபதுகளின் இறுதிகளில் வெளியான விஜயகுமாரின் படங்களில், விஜயகுமாருக்கு ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகுமார் என்று டைட்டில்  இருந்தது.விஜயகாந்தின் வரவு விஜயகுமாருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.  காலப்போக்கில் "புரட்சிக் கலைஞர்"  எனும் பட்டமும் விஜயகாந்துக்குக்  கொடுக்கப்பட்டது.

எண்பதுகளில், கொஞ்சம் கொஞ்சமாக விஜயகுமார் நாயகனாக நடிக்கும் படங்கள் குறைந்தன. வில்லனாக நடிக்கும் படங்கள் வரத்தொடங்கின. கமலுக்கும் ரஜினிக்கும் வில்லனாக நடித்தார் விஜயகுமார். பிறகு, வில்லனாகவும் குணச்சித்திரக் கேரக்டரிலும் வெளுத்துவாங்கினார். இந்த தருணங்களில் ‘இவர்களுடன் விஜயகுமார்’ என்று டைட்டிலில் போட்டு கெளரவப்படுத்தினார்கள். நாளடைவில் விஜயகுமாருக்கு கொடுத்த ‘புரட்சிக்கலைஞர்’ எனும் பட்டம் மறைந்தேபோனது. ‘விஜயகுமார்’ என்று மட்டும் டைட்டிலில் போடும் காலமும் வந்தது.

’காதல் இளவரசன்’ என்கிற டைட்டிலுக்கும் ‘உலகநாயகன்’ என்கிற டைட்டிலும் நடுவே பட போஸ்டர்களில், ‘நவரச நாயகன்’ என்று கமலுக்கு அடைமொழி கொடுத்தார்கள். ஆனால் தொடர்ந்து அப்படிப் போட்டுக்கொள்ளவில்லை கமல். கலைஞர் கருணாநிதி சூட்டிய ‘கலைஞானி’ பட்டம் சேர்ந்தது. பிறகு இந்த ‘நவரசநாயகன்’ என்கிற பட்டம் கார்த்திக் வசம் சென்றது. இன்றைக்கும் ‘நவரசநாயகன்’ என்றால் கார்த்திக் என்றும் ‘புரட்சிக்கலைஞர்’ என்றால் விஜயகாந்த் என்றும் மக்கள் மனதில்   பதிந்துவிட்டது. தீம்புனல்,

No comments: