Saturday, March 11, 2023

தமிழ்நாட்டுக்கு எதிராக வதந்திப் போர்

 ஸ்டாலினின்  பிறந்தநாள்  கொண்டாட்டம்  டில்லிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் மார்ச்  முதலாம் திகதி விமர்சையாகக்கொண்டாடப்பட்டது.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்  காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 தமிழக கட்சி ஒன்றின் தலைவரின் பிறந்தநாள்  விழாவில் தேசியத் தலைவர்கள்  பங்கேற்றதை  பாரதீய ஜனதா அதிர்ச்சியுடன் பார்த்தது. இந்திய  பிரதமராகும் தகுதி ஸ்டாலினுக்கு இருப்பதாக வட இந்தியத் தலைவர்கள் பகிநங்கமாக அறிவித்ததை பாரதீய ஜனதாத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்வின்   உரை   பீஹார்  பாரதீய ஜனதாத் தலைவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மோடிக்கு சவால் விடும் தலைவர்  எதிக் கட்சிகளிடம்  இல்லை என்பதே  உண்மை. அந்த  இடத்தை ஸ்டாலின் நிரப்பி விடுவாரோ என்ற அச்சம் அங்கு ஏற்பட்டுள்ளது.

  பீகார் பாரதீய ஜனதாக் கட்சியின்  சார்பில் ட்விட்டரில்  ஐந்து வீடியோக்களுடன் ஒரு பதிவு வெZளியானது. அதில் , ‘இந்தியில் பேசியதற்காக பீகார் தொழிலாளர்கள் 12 பேர் தமிழ்நாட்டில் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், அந்த மாநில முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருக்கிறார் என்று குற்றம்சாட்டியது அந்தப் பதிவு. கொஞ்ச நேரத்திலேயே ‘ஷேர் செய்த விஷயம் தவறு என்று தெரிந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது. ஆனாலும், அதற்குள் அந்தத் தவறான செய்தியும், வீடியோக்களும்பல நூற்ய்  பேரைச் சென்றடைந்துவிட்டன.

பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான பாரதீய ஜனதாவின்  விஜய் குமார் சின்ஹா இதில் ஒரு வீடியோவைச் சட்டமன்றத்திலேயே காட்டி, “இது போலியாக இருந்தால் நான் மன்னிப்புக் கோருகிறேன்’’ என்று சொல்லி, தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரி தொழிலாளர்களைக் காப்பாற்றுமாறு கோரினார். அதைத் தொடர்ந்தே பீகார் அதிகாரிகள் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு சென்றது.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதும், பீகாரைத் தாண்டி பல வட இந்திய மாநிலங்களில் பதற்றம் தொற்றிக்கொண்டது. உத்தரப் பிரதேச  பாரதீய ஜனதாக் கட்சியின்  செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் படேல் உம்ரா, சுபம் சுக்லா, பத்திரிகையாளர் முகமது தன்வீர், `டைனிக் பாஸ்கர் நாளிதழின் ஆசிரியர் ஆகியோர்மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவுசெய்திருக் கிறது தமிழ்நாடு காவல்துறை. அதில் ஒருவர் கைதைத் தவிர்ப்பதற்காக  முன்  பிணை பெற்றுள்ளார்.

இந்திக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் தமிழகம்  முன்னணி  வகிக்கிறது. அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து  இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம்  போராட்டம் செய்கிறது. இந்தி பாஷைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  இந்தி திணிப்பை கடுமையாக தமிழகம் எதிர்க்கிறது.   அண்ணாமலியும் தன் பங்குக்கு தமிழக அரசின் மீது  குற்றம் சுமத்தி உள்ளார்.

வட இந்தியத் தொழிலாளர்கள் என்று ஒரே அடைப்புக்குறிக்குள் இவர்களை வைத்தாலும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்தே அதிகம் பேர் தமிழ்நாட்டுக்கு செல்கிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எடுத்த ஓர் ஆய்வின்படி, இங்கு 10.6 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயர்ந்திருக்கலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என நகர வளர்ச்சியும், சிறு தொழிலகங்களும் அதிகம் இருக்கும் வடமாவட்டங்களில் இவர்கள் பெருமளவு இருக்கிறார்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு சிப்காட் தொழிற்பேட்டையிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் உழைக்கிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் உடலுழைப்பு தேவைப்படும் தொழில்களைச் செய்வோரில் 70% பேர் இவர்களே. கட்டுமானத் தொழில்துறையில் 70 முதல் 85% பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். ஐடி காரிடார் தொடங்கி மெட்ரோ ரயில் கட்டுமானம் வரை நவீன சென்னையின் அடையாளங்கள் இவர்களின் வியர்வையில் உருவானவை. அதேபோல கோவை, ஈரோடு, திருப்பூர் வட்டாரத்திலும் கணிசமாக இருக்கிறார்கள். கோவை, திருப்பூர் ஜவுளி தொழிலகங்களில் இவர்களின் உழைப்பு அதிகம். ஊட்டி கேரட் தோட்டங்களில் தொடங்கி தஞ்சையில் விவசாயப் பணிகள் வரை இவர்களைப் பார்க்க முடிகிறது. சின்னச் சின்ன நகரங்களில் இருக்கும் சலூன்களில், ஹோட்டல்களில்கூட புலம்பெயர் தொழிலாள்  வேலை செய்கிறார்கள்.

  வெளி  மாநிலத் தொழிலாளர்கள்  இல்லை என்றால் தமிழகத்தின்  கட்டுமானப் பணிகள்,    ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் என்பன  முடங்கிவிடும் அபாயம்  உள்ளது. அவர்களின் மாநிலங்களில் தினக்கூலி  மிகவும் குறைவானது. தமிழகத்தில் இரண்டு மடங்கு அதிகமானது.  தொழிலாளிகளுக்குரிய மரியாதை, வசதி,கெளரவம் என்பன தமிழகத்தில் கிடைக்கின்றன.

தமிழகத்தில் கல்வி கற்ரோர் தொகை அதிகரித்ததால் கல்விக்கேற்ற வேலையைத் தேடுகிறார்கள்.அதிகம் படிக்காதவர்கள் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து செல்கிறார்கள்.  தமிழகத்தில் உள்ள பலரும்  பலரும் வளைகுடா நாடுகளுக்கு உழைக்கச் செல்கிறார்கள். ஐடி படித்தவர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்கிறார்கள்.

இரண்டு மாநிலங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

 

No comments: