Monday, July 26, 2021

இந்திய அரசில் சர்ச்சையை ஏற்படுத்திய பெகாசஸ்



 நாட்டின்  பாதுகாப்புக்காக  எதிர்  நாடுகளை  வேவு  பார்க்கும் நடைமுறை உலகெங்கும்  பரவலாக  உள்ளது. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சந்தேகப்படுபவர்களின்  நடவடிக்கைகளைக்  கண்காணிப்பதும் இதில்  அடக்கம். இந்திய  அரசாங்கத்தை  விமர்சிப்பவர்களை  உளவு  பார்த்த  விவகாரம் பூகம்பமாக  வெடித்துள்ளது.

எதிர்க் கட்சித்தலைவர்கள், அரசியல்  விமர்சகர்கள், சமூக  செயர்பாட்டாளர்கள்  போன்றவர்களை  அரசாங்கம்  வேவு  பார்ப்பதாக  அவ்வப்போது  செய்திகள்  வெளியாவது  வழமை  அரசாங்கம் அதனை பொய் என்பதும் சர்வசாதாரணமான சம்பவம்.  ஆனால், இந்தியாவில்  மட்டும் மட்டும் சுமார் 40 க்கும் அதிகமானவர்களை  பாரதீய  ஜனதா அரசாங்கம் உளவு  பார்த்ததாக `தி வயர்இணையப் பத்திரிகை கூறுகிறது. பாரதீய  ஜனதாக்  கட்சியை  எதிர்க்கும் அரசியல்  கட்சித் தலைவர்களைத்  தவிர பத்திரிகையாளர்கள், உயர்  நீதிமன்ற  நீதிபதிகள், அரசாங்க  அதிகாரிகள் ஆகியோரும் இந்திய  அரசால்  கண்காணிக்கப்பட்டதாக தி  வயர்  இணையப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதன்  காரணமாக  பாதீய  ஜனதா  அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகி  இருக்கிறது.

   உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோரின் செல்போன்களை பெகாசஸ் என்ற ஸ்பைவேரைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

`பெகாசஸ்என்ற ஸ்பைவேர் மூலம் உலகின் முக்கிய பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களிந்தொலைபேசிகளையும், கணணிகளையும் அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது என்பதுதான் சமீபத்தில் உலக அரசியலை உலுக்கிக்கொண்டிருக்கும் செய்தி. 'பெகாசஸ் புராஜக்ட்' என்ற பெயரில் 'தி கார்டியன்' உள்ளிட்ட 16 ஊடங்கங்கள் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் உலகம் முழுவதும் சுமார் 50,000-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பெகாசஸ் எனப்படும் இரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

இனம் தெரியாத  ஒருவரிடம் இருந்து வரும் மெயில், எஸ்.எம்.எஸ், வைபர், வட்ஸ் அப்  என்பனவற்றை திறந்து  பார்த்தால் அந்த  இரகசிய மென்பொருள் தனது  வேலையை  ஆரம்பித்துவிடும். எங்கோ தொலை  தூரத்தில்  இருக்கும் ஒருவர் அனைத்தையும் கண்காணிப்பார். தொலை பேசியில் உள்ள கமரா மூலம்  தனக்குத் தேவையான  புகைப்படங்களையும்  அவர்  பெற்று விடுவார்.

பெகாசஸ் ஸ்பைவேர் ஒரு போனிலிருந்து நீக்கப்படும்போது அது பயன்படுத்தப்பட்டதற்கான தடையங்களும் சேர்ந்தே அழிந்துவிடும் என்பதால், இதனால் பாதிக்கப்பட்ட செல்போன்களைக் கண்டறிவது கடினமாக இருந்திருக்கிறது. தற்போது ஐபோன், சில ஆண்ட்ராய்டு போன்களில் பெகாசஸை நீக்கும்போது சில தடயங்களை அந்த ஸ்பைவேர் விட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதைவைத்தே பெகாசஸ் ஹேக்கிங்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.  பெகாசஸ் மென்பொருளை   செலுத்தியவுடன் கால், மெசேஜ், என்கிரிப்ட் டெக்ஸ் உள்ளிட்டவற்றை மட்டுமல்ல... மைக்ரோபோன், மரா முதலானவற்றையும் நமக்குத் தெரியாமலேயே இயக்க முடியும் என்கிறார்கள். இணையவழி  ஆயுதம் என  இஸ்ரேல் இதனைக் குறிப்பிடுகிறது.

காங்கிரஸ்கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, - பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்கள், தமிழ்நாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரு  திலைபேசிகள்  இட்டுக்கேட்கப்பட்டதாக  செய்திகள்  வெளியாகி உள்ளன.  ஹேக் செய்யப்பட்டதாக வெளியான ஒவ்வொருவரும் மத்திய அரசுடனோ, முக்கிய அதிகாரிகள், தலைவர்களுடனோ கருத்தியல்ரீதியில் எதிர்நிலையில் செயல்பட்டவர்கள் என்பதுதான் இதில் அதிர்ச்சி தரும் உண்மை.

பெகாசஸ் மென்பொருளை  தாங்கள் பயன்படுத்தவில்லை என்றுதான் மத்திய அரசு சொல்கிறதே தவிர அதை வாங்கவில்லை எனக் கூறவில்லை.   ``இந்தியா பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தவேயில்லைஎன மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். ``மத்திய அரசு உளவு பார்க்கவில்லை, என்றால்  இந்திய அரசின் அமைச்சர்கள், தேர்தல் ஆணையர், நீதிபதிகள், தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களின் செல்போன்களை   உளவு பார்த்தது யாரென்பதை  இந்திய  அரசாங்கம்  அறிவிக்க வேண்டும்.

பெகாசஸ் மூலம் மக்கள் உளவுபார்க்கப்படுவதை 2016-ம் ஆண்டு ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அகமது மன்சூர் கண்டறிந்தார். மன்சூரின் தொலைபேசிக்கு பல எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. அதில் உள்ள இணைப்புகள் தவறான நோக்கத்திற்காக அனுப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகப்பட்டார். இதனால், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகத்தில் உள்ள சைபர் செக்யூரிட்டி நிபுணர்களிடம் தனது தொலைபேசியை  ஒப்படைத்து, தனக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ்-கள் குறித்து ஆராயுமாறு கூறியுள்ளார்.

மன்சூரின் சந்தேகம் நிரூபிக்கப்பட்டது.  ஒருவேளை எஸ்.எம்.எஸ்-களில் இருந்த இணைப்புகளை அவர் பார்த்திருந்தால் , அவரது தொலைபேசி  பெகாசஸ் மால்வேரால் பாதிக்கப்பட்டிருக்கும். மன்சூரின் தொலைபேசியை ஆராய்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், இந்த தாக்குதலைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று எனக் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் 2017-ம் ஆண்டு பெகாசஸ் மூலம் மக்களை வேவு பார்ப்பதாக மெக்சிகோ அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மெக்சிகோவில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.தங்களது ஃபோன்களை ஒட்டுக் கேட்பதாகப் பிரபல பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெக்சிகோ அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்

அவூதி அரேபியாவைச்  சேர்ந்தபத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணை தூதரகத்துக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது தொலைபேசியும், கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு அவரது குடும்பத்தினரின் தொலைபேசிகளும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளது.கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை சௌதி அரேபியா வாங்கியது. நாட்டில் உள்ள மாறுபட்ட கருத்து கொண்டவர்களை நசுக்குவதற்கும், வெளிநாடுகளில் உள்ளவர்களைக் கண்காணிப்பதற்கும் இந்த மென்பொருளை சௌதி பயன்படுத்தியது என தி நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், அல் ஜசீராவின் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என 36 பேரின் தொலைபேசிகள் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``எங்கள் தொழில்நுட்பம் பாலியல் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்கும், காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், ஆபத்தான டிரோன்களிடம் இருந்து வான்வெளியைப் பாதுகாப்பதற்கு, பயங்கரவாத குற்றங்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எங்கள் நிறுவனம் உயிர்களை காப்பாற்றும் பணியில் இருக்கிறது. எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை`` என என்எஸ்ஒ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். அவதூறு வழக்கு தொடர்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் எனவும் அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்எஸ்ஓ அமைப்பு இதுவரை தன்னுடைய உளவு மென்பொருளை எந்தெந்த நாடுகள் பயன்படுத்துகின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், இந்த மென்பொருள் பெரும்பாலும், ஒரு நாட்டின் அரசுக்கே அதிகாரபூர்வமாக விற்கப்பட்டுள்ளது. அதாவது, அரசின் விசாரணை முகமைகள், அமைப்புகள் இந்த மென்பொருளை வாங்கியுள்ளன. 2018-ம் ஆண்டு சிட்டிஸன் லேப் அறிக்கையின்படி, இந்தியா, பஹ்ரைன், கஜகஸ்தான், மெக்சிகோ, மொராக்கோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட45 நாடுகள் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

உலகெங்கும்  அதிர்வலையை  ஏற்படுத்திய பெகாசஸ் விவகாரம் இப்போது இந்தியாவை உலுக்குகிறது. தேசநலன், தேசத்தின் பாதுகாப்பு எனத் தொடர்ந்து பேசிவரும்  இந்திய மத்திய அரசு தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தியா மீது நிகழ்த்தியிருக்கும் இணையவழித் தாக்குதலாகவே இதைப் பார்க்க முடியும். இந்த இக்கட்டிலிருந்து மத்திய அரசு எப்படி வெளிவரப் போகிறது?’ என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.  பல்வேறு தரப்பினரும் மத்திய அரசைக் கேள்விகளால் துளைத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்ற பிரச்னைகளை எளிதில் கையாண்ட மத்திய பா.. அரசு உண்மையில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் திணறிவருவது உண்மைதான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

No comments: