Friday, April 3, 2009

சர்ச்சைகளின்நாயகன்


கிரிக்கட் உலகில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் கொல்கட்டா நைற் ரைடர்ஸ் அணித்தலைவருமான சௌரவ் கங்குலியும் ஒருவர். எளிதில் உணர்ச்சிவசப்படும் இவர் இந்திய அணியில் இருந்த போது பல சர்ச்சைகளில் சிக்கினார்.
கங்குலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றவுடன் தனது மேலங்கியைக் கழற்றி கையில் வைத்து ஆட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணி இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றபோது இங்கிலாந்து வீரர் செய்ததைப் போல் செய்து பழிவாங்கினார். இதனால் அவர் மீது கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்திய அணியின் தலைவராக கங்குலி செயற்பட்டபோது அவரது துடுப்பாட்ட விகிதாசாரம் குறைந்தது. அன்றைய இந்திய அணியின் பயிற்சியாளர் செப்பலுக்கும் கங்குலிக்கும் இடையேயான பனிப்போர் அறிக்கைகள் மூலமும் ஈமெயில் மூலமும் பகிரங்கப்பட்டன.
இந்திய அணியின் பயிற்சியாளராக செப்பல் வர வேண்டும் என விரும்பியவர்களில் கங்குலியும் ஒருவர். இந்திய அணியின் பயிற்சியாளராக செப்பல் நியமிக்கப்பட்டதும் கங்குலிக்கும் செப்பலுக்கும் இடையிலான உறவு மேலும் நெருக்கமடைந்தது. இந்திய அணி வீரர்களின் தேர்வு, துடுப்பாட்ட வரிசையை மாற்றியமை போன்வற்றினால் செப்பலுக்கும் கங்குலிக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்தது. இறுதியில் அணித் தலைவர் பதவியில் இருந்து கங்குலியும் தூக்கியெறியப்பட்டார்.
இந்திய அணிக்கு டோனி தøலமை ஏற்றபோது இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால் மூத்த வீரர்களான கங்குலி, டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோரின் நிலை என்ன என்ற விமர்சனம் எழுந்தது. இளம் வீரர்களின் அதிரடியால் இந்திய அணி உத்வேகம் பெறுகையில் துடுப்பாட்டத்தில் சோபிக்காத மூத்த வீரர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற பட்டிமன்றமும் நடந்தது.
மூத்த வீரர்களை பகைக்க விரும்பாத அணித் தலைவர் டோனி அனுபவம் உள்ள வீரர்களும் அணிக்குத் தேவை என்று கூறினார்.
ஒருநாள் போட்டியில் இருந்து கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர். காலப் போக்கில் டெஸ்ட்போட்டியில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலைக்கு கங்குலி தள்ளப்பட்டார். விருப்பம் இல்லாமல் ஓய்வு பெற்ற கங்குலி. ஓய்வு பெற்ற பின்னர் தனது முன்னாள் சக வீரர்களின் மீது சேறு பூசும் அறிக்கைகளை வெளியிட்டார். இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிக்கும் வீரர்களில் ஒருவராக இருந்த கங்குலி, ஐ.பி. எல்லின் இருபது 20 போட்டியை மட்டுமே நம்பினார்.முதலாவது ஐ.பி.எல். டுவென்டி 20 போட்டியில் கங்குலி தலைமையிலான நைட்ரைடர்ஸ் அணி படுதோல்வியடைந்தது. கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளருக்கும் அணித் தலைவர் கங்குலிக்கும் இடையிலான முறுகல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கக் கூடிய தகைமை கங்குலிக்கு இல்லை என்று நினைத்த பயிற்சியாளர் புக்கனன் புதிய தலைவரை நியமிக்க விரும்பினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடும் நான்கு போட்டிகளுக்கும் நான்கு தலைவர்களை நியமிப்பதென பயிற்சியாளர் புக்கனன் அறிவித்தார். புக்கனனுடன் சேர்ந்து பத்திரிகையாளர் மாநாட்டில் சிரித்துப் பேசிப் பதிலளித்த கங்குலி மாலையில் மறுப்பறிக்கை விடுத்தார்.
பின்னர் ஒரு அணிக்கு நான்கு தலைவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணியின் உதவியாளர் ஷாருக்கான் கங்குலிக்கு ஆதரவாக இருப்பதனால் கங்குலியின் தலைமைப் பதவி தப்பியது.
தென்னாபிரிக்காவில் நடைபெறும் டுவென்டி 20 போட்டியில் நைட் டைரடஸின் வெற்றியே தலைவராக கங்குலி நீடிப்பாரா இல்லயா என்பதை முடிவு செய்யும்?
ரமணி
மெட்ரோநியூஸ்
03/04/2009

Thursday, April 2, 2009

யுத்தகளமா? கடமையா?


யுத்தகளத்தில் சட்டத்தை
மதிக்கவேண்டியவர்களுக்கும்
நாளைய சமுதாயத்தை
உருவாக்கவேண்டியவர்களுக்கும்
மத்தியில் உன்கடமையை
புகைப்படங்களாக எடுக்கிறாயே
எதற்காக?
நாளைய சமுதாயம் சீர‌ழியவா?
அல்லது உன் கடமையென்றா சொல்?

தாட்ஷாவர்மா
08/08/2008

Sunday, March 29, 2009

திரைக்குவராதசங்கதி 6


தமிழ்த்திரை உலகில் பாடி நடிப்பவர்களுக்கு பதிலாக பின்னணிப் பாடகர்கள் அறிமுகமான கால கட்டத்தில் இசைக் கச்சேரி மேடைகளிலும் திரை இசை உலகிலும் புகழ்பெற்றவர் மதராஸ் லலி தாங்கி வசந்த குமாரி எனும் எம்.எல். வசந்தகுமாரி.
1948 ஆம் ஆண்டு முதல்
சுமார் 20 வருடங்கள் தமிழ்த்திரை இசையில் தனது மென்மையான குரலினால் சாதனை படைத்தõர். ஏனைய பாடகர்களுடன் ஒப்பிடுகையில் இவரது பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் பல உள்ளன.
இசைக் குடும்பத்தில் பிறந்த எம்.எல். வசந்தகுமாரி இரண்டு வயதாகும் போதே ஸ்வரங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டாரம். இவருடைய தகப்பனான கூத்தனார் அய்யாசாமி அய்யர் கர்நாடக சங்கீதத்திலும் ஹிந்துஸ்தானி இசையிலும் புகழ் பெற்றவர். தாயார் லலிதாங்கி கோயம்புத்தூர் தாயி, ப்ளூட் சுப்பராவ், வீணை தனம் போன்றவர்களிடம் முறைப்படி கற்றுத் தேர்ச்சி பெற்றõர்.
தமது மகளான எம்.எல்.
வசந்த குமாரி தம்மைப்போல் பாடகியாக வருவதை பெற்றோர் விரும்பவில்லை. அதேவேளை மகளின் சங்கீத ஆர்வத்துக்கும் தடை விதிக்கவில்லை. மகளை சிறந்ததொரு வைத்தியராக்க வேண்டும் என்றே பெற்றோர் விரும்பினார்கள். பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கொன்வென்டில் படித்த எம்.எல்.வசந்த குமாரி சங்கீதத்தையும் கைவிடவில்லை.
தாயாரான லலிதா தாங்கி கச்சேரி செய்யும் போது மகளான எம்.எல். வசந்தகுமாரி பின்பாட்டுப் பõடினார். எம்.எல். வசந்தகுமாரியின் பாடலைக் கேட்டு மகிழ்ந்த அன்றைய பிரபல பின்னணிப் பாடகரான ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவரைத் தனது மாணவியாக்கினார். 13 ஆவது வயதில் எம்.எல்.வசந்தகுமாரி
பாடிய முதலாவது இசைத்தட்டு வெளியான அதே சமயம் முதன் முதலாக தனிக் கச்சேரியையும் நடத்தினார்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது சென்னை மீது ஜப்பான் குண்டு
போடப் போவதாக செய்தி பரவியதும் மக்கள் அனைவரும் நகரத்தை விட்டு வெளியேறினர். இதனால் அய்யாசாமி அய்யரின் வருமானம் வீழ்ச்சியடைந்தது. லலிதாங்கி நோயில் வீழ்ந்ததால் எம்.எல். வசந்தகுமாரி 15ஆவது வயதில் வசந்தத்தை இழந்து குடும்பப் பாரத்தை சுமந்தார்.
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையாகி சிறையிலிருந்து வெளி வந்த ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜபõகவதர் ராஜமுத்தி என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். ராஜமுக்தியில் எம்.கே. தியாகராஜபாகவதருக்கு இணை ஜோடியாக வி.என்.ஜானகி நடித்தார். வி.என். ஜானகிக்கு பின்னணி பாட தனக்கு இணையாக பாடக் கூடிய ஒருவரைத் தேடிய போது கச்சேரி மேடைகளிலும் இசைத்தட்டுகளிலும் ஒலித்த எம்.எல். வசந்தகுமாரியின் குரல்
அவரைக் கவர்ந்தது.
ராஜமுக்தி படத்தில் எம்.கே. தியாகராஜபாகவதருடன் இணைந்து இரண்டு பாடல்களையும், இரண்டு தனிப்
பாடல்களையும் அப்படத்தில் வில்லியாக நடித்த பானுமதியுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். அதன் பின்னர் எம்.எல்.வசந்தகுமாரியின் வாழ்வில் வசந்தம் வீசியது.
நந்த கோபாலனோடு நான் ஆடுவேன். கண்ணன் மன நிலையே தங்கமே தங்கம், அய்யாசாமி ஆவோஜி சாமி, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, எல்லாம் இன்பமயம், கொஞ்சும்புறாவே, குயிலே உனக்கனந்தகோடி நமஸ்காரம், கூவாமல் கூவும் கோகுலம், தாயே
யசோதா, ஆடல் காணீரோ அந்திமயங்குதடி, ஆடாத மனமும் உண்டோ, முன்னம் அவனுடைய நாமம் கேட்டான், மஞ்சள் வெயில் மாலையிலே போன்ற பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன.
எம்.எல். வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீ வித்தியா மிகச் சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர். தாயைப்போல் பிரபல பாடகி இல்லை என்றாலும் ஓரளவு இசை ஞானம் உடையவர். எம்.எல். வசந்த குமாரியின் சிஷ்யைகளில் ஒருவரான
சுதா ரகுநாதன் தன் குருவின் புகழை பரப்புகின்றார்
எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் வெளியாகிய திருப்பாவை, திருவெம்பாவை ஆகியன இந்து வைஷ்ணவ ஆலயங்களிலும் வீடுகளிலும் ஒலித்து அவரை ஞாபகப்படுத்துகின்றது.
ரமணி
மித்திரன் 29/03/2009

ஜெயாவிடம் சரணடைந்த ராமதாஸ்

தமிழக முதல்வர் கைவிட்டதால்
ஜெயாவிடம் சரணடைந்த ராமதாஸ்


இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகக் கட்சிகள் அனைத்தும் தயாராகிவிட்டன. யாருடன் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவிக்காத டாக்டர் ராமதாஸும் விஜயகாந்தும் தமது முடிவை அறிவித்து விட்டனர்.
தமிழகத் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்த டாக்டர் ராமதாஸை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கைவிட்டுவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தøலயும் சட்ட மன்றத் தேர்தலையும் சந்தித்த டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியுடனான முரண்பாடுகளின் காரணமாக கூட்டணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும் மத்தியில் காங்கிரஸின் தலைமையில் ஆட்சியில் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கைகள் விடுத்து தனது இருப்பை வெளிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பலமான கூட்டணியில் சேர்வதற்கு தமிழகக் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டின. அதேவேளை, டாக்டர் ராமதாஸும் விஜயகாந்தும் கூட்டணி பற்றி வெளிப்படையாகப் பேசாது மௌனம் காத்தனர்.
தனது கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்குவது யார் என்று பார்ப்பதிலேயே டாக்டர் ராமதாஸ் அதிக அக்கறை காட்டினார். காங்கிரஸின் கொள்கை பிடிக்காது இடதுசாரிகள் கூட்டணியை விட்டு வெளியேறியதால் அந்த இடத்தை நிரப்ப டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள்கட்சியின் வரவை தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்பார்த்தார்.
கூட்டணியில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்டதனால் முதல்வர் கருணாநிதியின் அழைப்பை பாட்டாளி மக்கள் கட்சி பெரிதுபடுத்தவில்லை. டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்பு மணி மத்திய அரசில் அமைச்சராக இருப்பதனால் அடுத்த தேர்தலின் போதும் பாட்டாளி மக்கள் கட்சி தம்முடன் தான் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவை அறிவதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பெரிதும் முயற்சி செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் பிடி கொடுக்காது பொதுக் குழு முடிவு செய்யும் என்று கூறிவிட்டார்.
காங்கிரஸ் பொறுமை காப்பது போல் தமிழக முதல்வர் பொறுமையாக இருக்கவில்லை. தனது கட்சியின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பெயரை முதல்வர் கருணாநிதி அதிரடியாக வெளியிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் அதில் இருக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்க்கக் கூடாது என்பதில் முதல்வர் கருணாநிதி உறுதியாக இருப்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலைச் சந்திக்கப் போகிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முதல்வர் கருணாநிதிக்கு இருந்தது.
கொள்கை என்பது புறந்தள்ளப்பட்டு அதிக இடம் தருபவர்களுடன் கூட்டணி சேர்வது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருந்துள்ளது. தமிழகத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் தாவியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் இந்தக் கணக்கை மாற்றி அமைக்கும் சக்தியைப் பெற்றுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தனித்து தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த் தேர்தலில் படுதோல்வியடைந்தாலும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்புக்களைத் தவிடு பொடியாக்கினார்.
விஜயகாந்தை தமது அணிக்குள் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி பகீரதப் பிரயத்தனம் செய்தது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்துக்கும் விருப்பம்தான். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்த் விரும்பவில்லை.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் என பிரசாரம் செய்யும் விஜயகாந்த் இன்னொரு முதல்வரின் தலைமையில் தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீது வெறுப்படைந்திருப்பவர்களின் ஒரே தெரிவு விஜயகாந்த்தான். அவர்களின் வாக்குகளை நம்பியே விஜயகாந்த் தேர்தøலச் சந்திக்கிறார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டதும் பாதிக்கப்பட போவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பலத்தை நம்பியே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலை சந்திக்கிறது. இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசும், தமிழக அரசும் கண் மூடிக் கொண்டிருந்ததையே இடதுசாரிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தமது பிரசாரத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இலங்கைத் தமிழர்களின் துயர் தீர்ப்பதற்காக ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதனையும் செய்யவில்லை. என்றாலும் இடதுசாரிகளினதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் ஆதரவில் வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார்.
இவர்களின் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே முதல்வர் கருணாநிதி தனது பக்கத்தில் திருமாவளவனை வைத்திருக்கின்றார். இலங்கைத் தமிழர்களுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் திருமாவளவனின் பதிலடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்கூட்டணிக்கு பலத்த அடியாய் இருக்கும்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் கூட்டணியே தமிழகத்தில் அதிகமான தடவைகள் வெற்றி பெற்றுள்ளது. அந்தச் சாதனை இம்முறையும் தொடர்வது சந்தேகமாக உள்ளது. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளன.
ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்தது. ஆனால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறையவில்லை.
ஆனால் இம்முறை புதிய கூட்டணிகள் புதிய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. கொள்கைகளும் சாதனைகளும் பின் தள்ளப்பட்டுள்ளன. உணர்ச்சிகளும் அவலங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பதில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படலாம். நடுநிலையாளர்கள் யாரைத் தெரிவு செய்வார்கள் என்பதும் புதிராக உள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 29/03/2009

Friday, March 27, 2009

அரசியலாகும் ஐ.பி.எல்.போட்டிகள்



கிரிக்கட் ரசிகர்களின் உற்சாகத் திருவிழாவான 20/20 கிரிக்கட் சுற்றுப் போட்டி இந்தியாவில் இருந்து தென் ஆபிரிக்காவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடிகளைக் குவிக்கும் கிரிக்கட்டில் அதிரடியான 20/20 போட்டியை நேரடியாகக் கண்டு ரசிக்கும் சந்தர்ப்பத்தை இந்திய ரசிகர்கள் இழந்து விட்டார்கள்.
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடத்துவதற்காக அட்டவணை தயாரித்து முடிந்து மூச்சு விடுவதற்குள் இந்தியப் பொதுத் தேர்தல் என்ற அனல் காற்று வீசத் தொடங்கியது. கிரிக்கட்டா? பொதுத் தேர்தலா என்ற கேள்விக்கு பொதுத் தேர்தல்தான் முக்கியம் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அடித்துக் கூறிவிட்டார்.
பொதுத் தேர்தலின்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கிரிக்கட் போட்டிகளுக்கு பாதுகாப்புத் தர முடியாது என்று இந்திய உள்துறை அமைச்சர் அழுத்தம் திருத்தமாகக் கூறி உள்ளார். தேர்தல் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடைபெறாது என்று உறுதியளித்த ஐ.பி.எல். நிர்வாகம் மூன்று முறை அட்டவணையை மாற்றியது. பொதுத் தேர்தலில் முனைப்புடன் இருப்பதால் ஐ.பி.எல். போட்டிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்காது மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கினால் போட்டிகளை நடத்தலாம் என்று உள்துறை அமை ச்சு மீண்டும் கிடுக்குப்பிடி போட்டது.
தேசிய அணி வீரருக்கு கிடைக்கும் பணத்தை விட அதிகளவான பணத்தை ஐ.பி.எல். அணியில் உள்ள வீரர்கள் பெறுகின்றனர்.
தாய் நாட்டுக்காக விளையாடுவதா பணத்துக்காக ஐ.பி. எல்லில் விளையாடுவதா என்று சில வீரர்கள் தடுமாறுகிறார்கள். ஐ.பி.எல்லில் விளையாடினால் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் சில இளம் வீரர்கள் ஐ.பி.எல்லில் விளையாட ஆர்வம்காட்டுகின்றனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருந்தாலும் ஐ.பி. எல்லில் இரு நாட்டு வீரர்களும் ஒரு அணியாக நின்று தமது வெற்றிக்காக போராடுகின்றனர்.
மும்பைத் தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் கிரிக்கட் போட்டியும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐ.பி. எல்லிலும் விளையாடுவதற்காக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது என்று சிவசேனா போர்க் கொடி தூக்கியது.
பயங்கரவாதத்தை முறியடிக்க போதுமான தயார் நிலையில் உள்ளதாக அடிக்கடி அறிக்கை விடுக்கும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கடுமையாக கூறியதால் ஐ.பி.எல். நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
கோடிகளில் புரளும் ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லாது இந்தியாவிலேயே நடத்துவதற்கே ஐ.பி.எல். நிர்வாகிகள் விரும்பினார்கள்.
கிரிக்கட் ரசிகர்கள் இந்தியாவில் மிக அதிகம். இந்தியாவில் போட்டி நடைபெறுவதனால் பார்ப்பதற்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்ற எண்ணம் இருந்தது. இந்திய அரசுடன் சுமுகமாகப் பேசி திருப்திகரமான முடிவை எடுப்பதற்கு பல முறை முயன்றபோதும் இந்திய அரசாங்கம் சாதகமான பதிலை வழங்காமல் இழுத்தடித்தது. இந்திய அராங்கத்தின் இழுத்தடிப்பினால் சுதாகரித்துக் கொண்ட ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்துவதற்கு முடிவு செய்தார்.
இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஐ.பி.எல். அட்டவணையை மாற்றுவது சிரமமான காரியம். 20/20 இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் நாள் நெருங்குவதாலும் வேறு கிரிக்கட் தொடர்கள் இருப்பதனாலும் ஐ.பி.எல். போட்டிகளின் திகதியை மாற்ற முடியாத நிலை உள்ளது. முதலாவது ஐ.பி.எல். போட்டி மிக பிரமாண்டமாக நடந்தது. அதனைப் பார்த்த பல வீரர்கள் அதில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காததையிட்டு மனம் வருந்தினார்கள். இங்கிலாந்து வீரர்கள் கடந்த போட்டியில் விளையாடவில்லை. இந்தப் போட்டியை அவர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஐ.பி.எல். போட்டி இடம்மாறியதால் இங்கிலாந்து வீரர்கள் சற்று வருத்தத்துடன் உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான சச்சின் ஐ.பி.எல். ஆரம்பமாவதற்கு முன்னரே ஐ.சி.எல். ஆரம்பித்து 20/20 போட்டியை நடத்த திட்டமிட்ட கபில்தேவ் ஆகியோரும் ஐ.பி.எல். போட்டிகள் இடம்மாறியதை விரும்பவில்லை.
இந்தியாவில் 50 ஆயிரம் ரசிகர்களின் முன்னால் விளையாடும் உற்சாகம் வேறு இடத்தில் கிடைக்காது என்று கருத்தும் வீரர்கள் மத்தியில் உள்ளது.மே மாதம் 8 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை 59 போட்டிகள் நடத்த ஏற்பாடாகி உள்ளன. ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் கடும் போட்டி நிலவியது. இப்போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்று விட்டது.
20/20 கிண்ணப் போட்டி இடம் மாறியதால் ஐ.பி. எல்லுக்கு சுமார் 200 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டு அணி வீரர்கள் முகாமையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கான போக்குவரத்து தங்குமிட செலவு 100 முதல் 110 கோடி ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 150 வீரர்களுக்குமான தங்குமிட செலவு 80 முதல் 100 கோடி ரூபா வரையில் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையும் பாதுகாப்பும் அச்சுறுத்தியதால் ஐ.பி.எல். 20/20 போட்டி இங்கிலாந்தின் கையில் இருந்து நழுவியது. பாதுகாப்புக்கு தென் ஆபிரிக்க முழு உத்தரவாதமளித்துள்ளது.
இந்திய அரசு மனம் வைத்திருந்தால் 20/20 போட்டியை இந்தியாவில் நடத்தி இருக்கலாம் என்று கருதும் இந்திய ரசிகர்களும் உள்ளனர். பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அரசு தட்டிக் கழித்துவிட்டது என்ற கருத்து பலமாக உள்ளது.
இந்திய அரசியலின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாத கிரிக்கட் தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்துள்ளது.
ரமணி



.
.
.
மெட்ரோ நியூஸ் 26/032/009

Sunday, March 22, 2009

திரைக்கு வராத சங்கதி 5


முறைப்படி சங்கீதம் கற்காது தனது இசைஞானத்தாலும் குரல்வளத்தாலும் நாடக மேடையிலும் தமிழ் சினிமாவிலும் கோலோச்சியவர் வி.என்.சுந்தரம். தஞ்சாவூர் மாவட்ட விகலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஆலாஸ்ய சுந்தரம் நாடக மேடையில் புகழ் பெற்றபோது விளம்பரங்களில் பெயரை பெரிதாக எழுதுவதற்காக வி.என். சுந்தரம் ஆனார்.திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாதஸ்வர ஜாம்பவான்களின் இசை ஜாலங்களை சுருதி பிசகாது தனது ஏழு வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார் வி. என். சுந்தரம். தங்கள் நாதஸ்வரத்தில் இருந்து வெளியாகும் உருப்படிகளை சிறுவன் சுந்தரம் பாடுவதைக்கேட்ட நாதஸ்வர மேதைகள் ஆச்சரியப்பட்டார்கள்.வி.என். சுந்தரத்தின் திறமையைக் கேள்விப்பட்ட நடராஜ கான சபா என்ற சிறுவர் நாடக கொம்பனியின் முதலாளி சுந்தரம்பிள்ளை சுந்தரத்தை தனது நாடகக் கொம்பனியில் சேர்த்தார். மாமிசமும், சைவமும் ஒரே இடத்தில் சமைக்கப்படுவதை சுத்த சைவனான சுந்தரத்தினால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் காரணமாக அங்கிருந்து விலகி மதுரை பாலவினோத சங்கீத கயா என்ற பாய்ஸ் கொம்பனியில் சேர்ந்தõர்.சிறந்த குரல் வளமும் எடுப்பான தோற்றமும் கொண்ட சுந்தரம் ராஜ பாட்டாக நடித்த பின்னாளில் இசைச்சித்தர் என்ற பட்டப் பெயருடன் பின்னணிப் பாடகராக சி.எஸ். ஜெயராமன் அவருக்கு ஜோடியாக பெண் வேடத்தில் நடித்தார்.
நாடகங்களில் மெய்மறந்து நடிகர்களின் மீது அபிமானம் கொண்டவர்களில் ஒருவரான கவிராயர் மதுரபாஸ்கரதாஸ், வி.என். சுந்தரத்தின் பரமரசிகரானார். சென்னையில் உள்ள இசைத்தட்டு நிறுவனம் இராமாயண நாடகத்தை இசைத்தட்டாக வெளியிடுவதற்கு ராமர் வேஷத்தில் பாட ஆள் தேவையென விளம்பரம் செய்தது. இதனை அறிந்த கவிராயர் மதுர பாஸ்கரதாஸ், வி.என். சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றார். ராமர் வேஷத்தில் வேறு ஒருவர் பாடி விட்டார். வி.என். சுந்தரத்தின் பாடலைக் கேட்ட நிறுவன முகாமையாளர் எம்.என். ஐயங்கார் சுந்தரத்தை அங்கேயே தங்கும்படியும் வாய்ப்பு வரும் போது பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். அய்யங்கார் கூறிய வாய்ப்பு மார்க்கண்டேயர் என்ற படத்தின் மூலம் வி.என். சுந்தரத்துக்குக்கிடைத்தது. மார்க்கண்டேயர் படத்தில் நடிப்பதற்காக 16 வயதுடைய ஒருவரைத் தேடினார்கள். இதனை அறிந்த பாஸ்கரதாஸ் வி.என்.சுந்தரத்தை அழைத்துச் சென்றார். சுந்தரத்தின் பாடலைக் கேட்ட இயக்குநர் முருகதாஸன், படப்பிடிப்பாளர் ராம்நாத்தும் திருப்தியடைந்தார்கள்.
1934 ஆம் ஆண்டு வி.என். சுந்தரம் நடித்த மார்க்கண்டேயர் என்ற படம் வெளியானது. அதன் பின்னர் பட்டினத்தார், சந்தரஹாசன், சுந்தரமூர்த்தி நாயனார், கண்ணப்ப நாயனார், சங்கராச்சாரியார், சுபத்ரா அர்ஜுன மணிமான், ராஜசூயம், தள அமராவதி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
பாடல்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வசனங்கள் புகழ் பெற்ற காலத்தில் வி.என். சுந்தரத்துக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போனது.
கதாநாயகனான வி.என். சுந்தரம் பின்னணிப் பாடகரானார். மணமகள்,தெனாலிராமன், கூண்டுக்கிளி, மாலையிட்ட மங்கை, ஒளவையார் ஆகிய படங்களில் பின்னணி பாடினார்.கல்யாணம் பண்ணிப்பார்,பிரம்மச்சாரி, தெனாலிராமன்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய பாடங்களில் சிவாஜிக்காக பின்னணி பாடினார்.
1964 ஆம் ஆண்டு பாலையாவுக்காக பின்னணி பாட சந்தர்ப்பம் கிடைத்தது. மெட்டுப் படிக்காததால் பாமா விஜயம் படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடலில் வாயசைக்கும் நான்கு நடிகர்களுக்கும் ரி.எம். எஸ்.பின்னணி பாடினார்.திரை உலக வாழ்வு முடிந்ததும் நாடகங்களில் ரி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக பெண்வேடத்தில் நடித்தார்.
ரமணி
மித்திரன் 22/ 03 /2009

மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவுடன் தேர்தலைச் சந்திக்கிறார் ஜெயலலிதா


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்திவரும் அதேவேளை தமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையிலும் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும் அதிக அக்கறை காட்டுகின்றன.
கடந்த பொதுத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சி தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கடந்த முறை போன்று இமாலய வெற்றியைப் பெற மாட்டாது என்றே தெரிகிறது.
2004 ஆம் ஆண்டு 2 இந்தியப் பொதுத்தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிச கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அணி மாறி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமானதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு முதல் தடை விழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாக்குச் சேகரிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டுள்ளன. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் இலவசத் திட்டங்களும் வாக்குகளை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேவேளை இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்திய அரசின் உதவி உள்ளதென்ற பிரசாரங்கள் தமிழ் இன உணர்வாளர்களின் வாக்குகளை திசை திருப்பச் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நாற்பதும் நமக்கே என்ற பிரசாரம் இந்தமுறை பொய்த்துப் போகும் சூழ்நிலை உள்ளது என்றாலும், அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உள்ளன.
புதிய வேட்பாளர்களை களமிறக்குவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பலருக்கு இம்முறை சந்தர்ப்பம் கிடைக்காது என்று கருதப்படுகிறது. தயாநிதி மாறன், ரி.ஆர்.பாலு போன்ற ஒரு சிலருக்குத்தான் இந்த முறை போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும். புதிய தலைமுறைக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இளைய சமுதாயத்தினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொகுதிப்பக்கம் அதிகம் எட்டிப் பார்க்கõதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாக அறிவித்துள்ளார். ஸ்டாலின் அணி, அழகிரி அணி என்ற பேதம் இல்லாது கட்சிக்கு விசுவாசமானவர்களைத் தேர்வு செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடு சற்று வித்தியாசமாக உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தமது ஜாதகத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மத்தியில் மூன்றாவது அணி ஆகியவற்றின் கூட்டணியின் சற்று பலமான நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளன.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசும் தமிழக அரசும், அசமந்தமாகச் செயற்படுவதாக இடது சாரிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் குற்றம் சாட்டியுள்ளனர். இவைகள் நடத்தும் எழுச்சி போராட்டங்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்புள்ளது. மத்திய, மாநில அரசுகள் விட்ட தவறுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் நல்லபாடம் புகட்ட வேண்டும் என்று தா. பாண்டியன், வைகோ போன்றவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். இவர்களின் பிரசாரத்தின் பிரகாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத்தேடி தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா கடைசி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து இலங்கைத் தமிழ் மக்களின் துயர்தீர்க்க நிதி வழங்கியது உணர்வு பூர்வமானதா? நாடகமா? என்ற பட்டிமன்றம் தமிழகத்தில் நடைபெறுகிறது.
இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முதுகில் சவõரி செய்யும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும் நம்பிக்கையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அணிமாறும் காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகிவிட்டனர்.
வைகோவின் வலது கரமாக விளங்கிய கண்ணப்பன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் பீரங்கியான ராதாரவி, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார்.
செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், கண்ணப்பன், ராதாரவி ஆகியோரின் வெளியேற்றம் அக்கட்சிகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வ‌ர்மா
வீரகேசரி வாரவெளியீடு

22/ 03 /2009