Friday, December 31, 2021

வளமான எதிர் காலத்துக்காக வகைவகையான வாழ்த்துகள்


  அனைவருக்கும்  ஆங்கிலப் புது வருட வாழ்த்துகள். இன்று முழுவதும் வாழ்த்துக் கூறியே களைத்துப் போவார்கள்.   இனம்,மதம்,மொழி கடந்து கொண்டாடப்படும் நாள் இது . 2021 ஆம் ஆண்டு போய்விட்டது. 2022 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கடந்து போகையில் புது  வருடத்தில் புது  மனிதராக  இருப்போம். துன்பம்,துயரம் எல்லாம் போய்விடும் என்றே அனைவரும் கருதினர். கொரோனாவின் கோரத்தாண்டவம்  முடிவடையும். இனி எல்லாம் சுகமே என்ற நினைப்பில் இடி விழுந்தது.

கொரோனா தொற்றுகாரணமாக உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கு  இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கையின் வருமானம் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி தடைப்பட்டது.   இலங்கையை முன்னேற்றும் உறுதி மொழியுடன் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் கையைப் பிசைகிறது. வட்டி கட்டுவதற்கு கடன் வாங்க வேன்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது. இலங்கை அரசங்கத்தின் ஸ்திரத்தத்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். பங்காளியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி  வெளியேறப் போகிறேன் என மிரட்டுகிறது. வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம என அரசாங்கத்தின்  சார்பில் சவால் விடப்படுகிறது.

அரசியலில் தமது இருப்பை வெளிக்காட்டுவதில் தலைவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.  பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைத்தேடி அலைகிறார்கள். அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. சில பொருட்களை வாங்குவதற்காக  நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

 எரிவாயு கிடைப்பதில்லை,உணவுப்பொருள் தட்டுப்பாடு,டொலர் கட்டுப்பாடு,மரக்கறிகளின் விலை அதிகரிப்பு,எரிப்பொருட்களின் விலை உயர்வு,பஸ் கட்டண அதிகரிப்பு,முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு,திடீர் மின் வெட்டு,நீர் வெட்டு,வாகன இறக்குமதிகளுக்கு தடை, பேக்கரிப் பொருட்கள் விலை உயர்வு , சீனி இலை,பால்மா  இல்லை  என பட்டியல் நாளாந்தம் நீண்டுக்கொண்டே செல்கின்றது. இப்படியான ஒரு இக்கட்டான சூழலில்தான் 2022 ஆம் ஆண்டு வரப்போகிறது.

 புதிய வருடத்தை வரவேற்கும் மனநிலையில் மக்கள்  இல்லை. இதற்கமையவே,ஆங்காங்கே மக்கள் சில பொருட்களை வாங்குவதற்குபல மணி நேரம் காத்துக்கிடக்கும் வரிசைகளும் நீண்டுச்செல்கின்றது.

அண்மையில், இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதியை ஜனாதிபதி தடை செய்திருந்தார். இதற்கு எதிராக பல பகுதிகளில் விவசாயிகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இரசாயன உர பயன்பாட்டிலிருந்து நீங்கி, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுத்த முடிவை நிராகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பின்னர் செய்கை உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய அரசாங்கம், செய்கை உரத்திற்கு மானியம் வழங்கப்படாது என அறிவித்திருந்த நிலையில்,டொலர் தட்டுப்பாடு காரணமாக உர இறக்குமதிகளை முன்னெடுக்க முடியாது இறக்குமதியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையால், சீனி உட்பட்ட பொருட்கள் அடங்கிய 1,300 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் போதியளவு உள்ளதாகவும்,உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையென்றும் அரசாங்க தரப்புகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2020 மார்ச் 11 ஆம் திகதியன்று, உலக சுகாதார நிறுவனம் (WHO) கொவிட்19 உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. இலங்கையில்  வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையினாலும், ஏராளமான வெளிநாட்டினராலும் வைரஸ் பரவலினால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது.  இலங்கையில் முதல் தொற்றாளர் 2020 ஜனவரி 27 ஆம் திகதி இனங்காணப்பட்டதுடன் முதல் இலங்கை நாட்டவர் 2020 மார்ச் 10 ஆம் திகதியன்று  கொவிட் 19 தொற்றாளராக இனங்காணப்பட்டார்.  

 நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை  இலங்கை விரைவாக அறிமுகப்படுத்தியதுடன் 2020 மார்ச் 16 ஆம் திகதி நாடளாவிய முடக்கத்தை நடைமுறைப்படுத்தியது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாதுகாப்பான சூழலில் சிகிச்சை பெற்றனர், சோதனை மற்றும் தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகள் விரைவாக அதிகரித்தன, மேலும் ஆபத்து மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பிரச்சாரங்கள் செயல்படுத்தப்பட்டன. ஏற்கனவே நிதி தடைகளை எதிர்கொண்டுள்ள வேளையில், இந்த தொற்றுநோய் நாட்டின் மீது மேலதிகமான வளக் கோரிக்கைகளை முன்வைத்தது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிதி, தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் உதவியைத் திரட்டுவதை விரைவாக ஒருங்கிணைப்பதே சவாலாக இருந்தது.

கொரோனா காரணமாக இலங்கையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. விஷேட நடைமுறைகள் போக்குவரத்து வசதி என்பனவற்றால் அத்தியாவசியப் பொருட்கள்  விநியோகிக்கப்பட்டன.  சில பொடுட்களின் விலை அதிகரிக்கப்பட்டதே தவிர தட்டுப்பாடு  இல்லாமல் சகல பொருட்களும் கிடைத்தன.

ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. கண்ணுக்கெட்டிய  தூரத்தில் , துறைமுகத்தில் பொருட்கள்  உள்ளன. அவற்றை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு டொலர் கையிருப்பில் இல்லை. இது மக்களின் தவறு அல்ல. யாரோ தவறு செய்ததற்கான தண்டனையை மக்கள் அனுபவிக்கிறார்கள். பொருளாதாரப் பின்னடைவுதான் இத்தனைக்கும் காரணம். பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் சொல்லும் ஆலோசனையைத்தான் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும் சொல்கிறார்கள்.

வீம்பைக் கைவிட்டு , நிபந்தனைகளை ஆராய்ந்து கடன் வாங்கினால்தான் நாட்டை மீட்கலாம்.  மீட்பர்கள் மனம் வைப்பார்களா?

No comments: