Wednesday, December 22, 2021

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் தவறுகள்


 இங்கிலாந்து கப்டன்களிலேயே மிகவும் மோசமான க‌ப்டன் என்றால் ஜோ ரூட் தான், அவரிடம் ஆக்ரோஷம் இல்லை. நல்ல கேப்டன்சிக்கான உத்திகளும் இல்லை, அணித்தேர்வில் தவறுவிடுகிறார் அல்லது ஒரு நல்ல காம்பினேஷனை தேர்வு செய்யத் திண்டாடுகிறார் என்றே கூற வேண்டும். 

நடப்பு ஆஷஸ் தொடரில்   பிரிஸ்பன் டெஸ்ட்டுக்குப் பிறகு அடிலெய்ட் டெஸ்ட்டிலும் 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரூட் தலைமையில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்தது. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில், கிரீன் டாப் வேகப்பந்து சாதக ஆடுகளத்தில் ஆண்டர்சன், பிராட் இருவரையும் உட்காரவைத்து விட்டு ஜாக் லீச்சை எடுத்தார். ஜாக் லீச் 12 ஓவர்களில் 103 ஓட்டங்கள் கொடுத்தார்

இதனால் ஓவர் ரேட்டும் விரைவு கதியில் வீசப்படவில்லை ஸ்லோ ஓவர் வீசியதால் க‌ப்டன் ரூட் உட்பட அனைவரும் 100% மேட்ச் தொகையையும் இழந்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 5-ஐயும் இழந்தனர். இது க‌ப்டனுக்கு மிகப்பெரிய இழுக்கு. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த‌ இங்கிலாந்து, அடிலெய்டில் ஆண்டர்சன், பிராட் இருவரையும் கொண்டு வந்தது, ஆனால்நாணயச்சுழற்சியில் தோல்வியடைந்தது.  ஆண்டர்சன், பிராடை எடுத்த ஜோ ரூட், மார்க் உட்டை உட்கார வைத்து விட்டார். இங்கிலாந்தின் மேகமூட்ட வானிலையில் எந்த வித அதிமுயற்சியும் தேவைப்படாமல் அலுங்காமல் குலுங்காமல் எடுக்கும் 5 சீம் பவுலர்களை தேர்வு செய்து சிக்கினர்.

கடைசியில் ஏகப்பட்ட கேட்ச்களை விட்டது, செலக்‌ஷன் தவறுகள், பிராட், ஆண்டர்சன், ஆகியோர் அங்கு எப்படி வீச வேண்டும் என்று கற்றுக் கொண்ட போது டெஸ்ட்டில் இங்கிலாந்து தோற்றுப் போயிருந்தது. வெறும் ஜோ ரூட், மலான் தவிர யாரும் ஆடுவதில்லை. முதலில் செத்த தொடக்க கூட்டணியான ஹசீப் ஹமீது, ரோரி பார்ன்ஸை மாற்ற வேண்டும். ஜாக் கிராலி, ஜானி பேர்ஸ்டோவைக் கொண்டு வர வேண்டும். இங்கிலாந்து தோல்வியில் என்ன பிரச்சனை எனில், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கமின்ஸ் இல்லாத நிலையில் தோல்வி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரூட் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்: “இதே தவறுகளைத்தான் செய்து வருகிறோம், இன்னும் கொஞ்சம் ஃபுல் லெந்த்தில் வீசியிருக்கலாம். பேட்டிங்கில் நிச்சயம் இன்னும் பெட்டராக இருக்க வேண்டும், பெரிய ஸ்கோர்களை அடிக்க வேண்டும். ஒரு அணியின் அணுகுமுறையும் ஆசையும் 2வது இன்னிங்சை ஆடுவதைப் பொறுத்துதான் இருக்கிறது, ஆனால் நாங்கள் இங்கு சோடை போய்விட்டோம். பந்தை ஃபுல் லெந்தில் வீசி அவர்களை டிரைவ் ஆட வைக்கும் தைரியம் எங்களிடம் இல்லை. பாடங்கள் கற்றுக் கொண்டோம், அடுத்த போட்டியில் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். என்றார் ஜோ ரூட்.

No comments: