Sunday, December 5, 2021

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கைப்பற்ற பலத்த போட்டி


 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சிக்குள் உருவான‌ தலைமைத்துவப் பிரச்சினை இப்போது வெடித்துச் சிதறியுள்ளது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்ச்செல்வம் தான் தலைமை வகிப்பார் என கருதப்பட்ட வேளையில் பதவி ஆசை பிடித்த சசிகலாவால் திசை தெரியாத‌ பாதையில் பயணிக்கிறது.

ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்வரான ஓ.பன்னீர்ச்செல்வத்தை குப்புறக் கவிழ்த்து வீழ்த்திய சசிகலா,  எடப்பாடி பழனிச்சாமியை  முதல்வராக்கினார். ஜெயலலிதா சிறைக்குச் சென்று மீண்டு வந்தபோது முதல்வர் பதவியில் இருந்த பனீர்ச்செல்வம் அவரிடம் பதவியை ஒப்படைத்தார். அதே போன்று சிறைச்சாலையில் இருந்து தான் திரும்பும்போது எடப்பாடி நடப்பார் என சசிகலா எதிர்பார்த்தார். பதவி ஆசை எடப்பாடியின் மனதை  மாற்றியது. ஏமாந்த சசிகலா அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாகின.

சசிகலாவை கட்சிக்குள் எடுக்கக்கூடாது எனபதில் எடப்பாடி  உறுதியாக இருக்கிறார். ஆனால், பன்னீர்ச்செல்வம் அடிக்கடி சசிகலாவின் பெயரை உச்சரித்து பூச்சாண்டி காட்டுகிறார். சசிகலா கட்சிக்குத் தலைமை ஏற்றால் வெற்றி கிடைக்கும் என நம்புபவர்கள் அவருக்கு ஆதர்வாகக் குரல் கொடுக்கின்றனர்.  அவர்கலைக் கட்சியில் இருந்து வெளியேற்றும் ந்டவடிக்கையும் அடிக்கடி நடைபெறுகின்றன.  கட்சியில் இருந்து வெளியேற்றப்படுபவர்களில் அனேகமானோர் பன்னீரின் ஆதரவாளர்கள். கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் பிரச்சினை,தோல்வி என்பனவற்றால் விரக்தியடைந்த பலர்  வேறு கட்சிகளில் ஐக்கியமாகினர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  மூத்த தலைவர் ஒருவர்  கூட்டணிக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை.

இரட்டைத் தலைமைக்கு முடிவு கட்டி தனிப் பெரும் தலைவராக உயர்வதற்கு எடப்பாடியும்,பன்னீரும்  முட்டிமோதத் தயாராகிவிட்டனர். ஒருங்கிணைப்பாளராக பன்னீரும் இணை ஒருங்கிணைபாளராக எடப்பாடியும் இருக்கின்றனர். ஆனால், பன்னீருக்குரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இணை ஒருங்கிணைபாளராக இருக்கும் எடப்பாடி முதன்மை ஒருங்கிணைப்பாள‌ராக விரும்புகிறார். ஒருங்கிணைப்பாளர் பதவியை தக்கவைக்க பன்னீர் முயற்சிக்கிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நீண்ட நாள்களாக நீறுபூத்த நெருப்பாக இருந்த உட்கட்சி விவகாரம்  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெடித்தது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். கழகத்தின் அவைத்தலைவர் பதவி காலியாக இருக்கும் நிலையில், அது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கூட்டம் தொடங்கியதுமே, எடப்பாடி நகர்ப்புறத் தேர்தல் குறித்து மட்டும் நிர்வாகிள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் என்று சொல்லியிருக்கிறார். கூட்டம் தொடங்கி அரை மணி நேரம் வரை அமைதியாகப் போன நிலையில், நகர்ப்புறத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி விஷயங்கள் குறித்த பேச்சு எழுந்துள்ளது.

அப்போது சில நிர்வாகிகள், `தலைமைக்குள்ளே ஒத்துவராத நிலை இருக்கிறது. இதே நிலையில் தேர்தலைச் சந்தித்தால் மேலும் நமக்கு சரிவுதான் வரும் என்று கூறியிருக்கிறார்கள். குறிப்பாக `11 பேர்கொண்ட வழிகாட்டுதகுழு அமைத்த பிறகு அந்தக் குழு செய்த நடவடிக்கை என்ன?’ என்று சிலர் பிரச்னையைக் கிளப்ப கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

பன்னீர் தரப்பில் வழிகாட்டுதல்குழுவை மாற்றலாம், 18 பேர்கொண்ட குழுவை புதிதாக அமைக்கலாம். அந்தக் குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கட்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட அரங்கில் கூச்சல், குழுப்பம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அப்போது சிலர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, குழுத் தலைவராகவோ, அவைத்தலைவராகவே நியமிக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மற்றொருபுறம், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கருத்து சொல்ல முற்பட, ``உங்களால்தான் இவ்வளவு பிரச்னை என்று சி.வி.சண்முகம் அவரைப் பார்த்துக் கத்தியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சசிகலா விவகாரம் அ.தி.மு.க-வில் இருந்துவரும் நிலையில், இப்போது புதிய குழு, அவைத்தலைவர் பதவி என்கிற விவகாரங்களை வைத்து எடப்பாடிக்கு எதிராகக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளனர் சில மாவட்டச் செயலாளர்கள். இவர்கள் பன்னீரின் பின்னால் இயங்குகிறார்களா என்கிற சந்தேகம் இப்போது எடப்பாடி தரப்புக்கு வந்திருக்கிறது என்கிறார்கள்.

இரண்டு நாட்களின் பின்னர் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, புதிதாக தேர்வான தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிய எம்.ஜி.ஆர் காலத்து தலைபர் அன்பர் ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பின்வரும் தீர்மானம் மிக முக்கியமானது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை வழிநடத்த, 2017 செப்., 12ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டது. அவர்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். கட்சி சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும், பொதுக்குழு அதிகாரம் படைத்தது என, கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

தற்போது, கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை ஆய்வு செய்து, சட்ட விதிகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், ஒற்றை வாக்கின் வழியே, இணைந்தே தேர்வு செய்வர். இந்த விதி, மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், சட்ட விதிகளை தளர்த்த, விதி விலக்கு அளிக்க முழு அதிகாரம் உண்டு. ஆனால், அவர்களை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை தளர்த்தவோ, விலக்கு அளிக்கவோ அதிகாரம் இல்லை.

இந்த சிறப்பு தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.கட்சியை வழிநடத்தும் பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கியதன் வாயிலாக, அடிப்படை உறுப்பினர்களுக்கு  கெள‌ரவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உச்ச நிர்வாகிகளுக்கும், கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைமை பதவிகளான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்று விதிமுறை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சூடு ஆறுவதற்குள் டிச.,7 ம் திக‌தி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடக்கும் என டிசம்பர் 2 ஆம் திகதி  அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமியும் காட்டும் வேகம், கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 கட்சி அமைப்புகளின் பொதுத்தேர்தல் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் பதவிகளுக்கான தேர்தல் டிச., 7 காலை 10:00 மாலை 5:00 மணி வரை நடக்கும்.

இதற்காக வேட்பு மனு தாக்கல் டிச.,3ல் துவங்கி டிச.,4 பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெறும்.டிச.,5 காலை, 11:25 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடக்கும். டிச.,6ல் வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம் எனவும், டிச.,8 ல் வாக்குக‌ள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அன்வர் ராஜா கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி கூட்டங்களில், அறைக்கு உள்ளே நடக்கும் விஷயங்களை எல்லாம், வெளியில் தெரிவிப்பது நல்லதல்ல. அதை கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலாகத்தான் கருத முடியும். இதை அனுமதித்தால், கட்சியில் புற்றீசல் போல எல்லாரும் பேச ஆரம்பிப்பர். கட்டுப்பாடு இல்லாமல் போகும். எனவே, அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுத்தது சரியானது.கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்ய, கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக உள்ள அடிப்படை உறுப்பினர்களே வாக்க‌ளிக்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ விதிகளை திருத்தியது சட்ட விரோதம். எனவே, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை கட்சி பதவிகளில் இருந்து நீக்க வேண்டும்' என,   முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சசிகலா தொடுத்த  ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.ஒருங்கிணப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக் காலத்தடை கோரவும் வாய்ப்பு உள்ளது.

 

ரமணி

 

 

 

No comments: