Monday, May 2, 2022

படைப்பிலக்கியவாதி – ஊடகர் ரவிவர்மாவுக்கு 65 வயது !

இலங்கை வடமராட்சி பிரதேசம்  பல கலை, இலக்கிய ஆளுமைகளையும் முற்போக்காளர்களையும் எமக்கு வரவாக்கியிருக்கிறது.

நான் இலங்கை செல்லும்போதெல்லாம் எனது பயண நிகழ்ச்சி நிரலில் வடமராட்சியும் இடம்பெறும்.

கடந்த சில வருடங்களாக நான் அங்கே சென்ற வேளைகளில் எனக்கு வழித்துணைக்கு வருபவர் சூரன் ஏ. ரவிவர்மா அவர்கள். இவரும் எமது கலை, இலக்கிய ஊடகக் குடும்பத்தைச்சேர்ந்தவர்.

இந்தவாரம் வெளிவந்த தீம்புனல்  வார இதழில் ரவிவர்மாவுக்கு 65 வயது பிறந்த தினம் என்ற செய்தியை வாழ்த்துரையாக படித்ததும், உடனடியாக  அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

இலங்கையில் பாரதி என்ற எனது ஆய்வு நூலை எழுதுவதற்கு முன்னர், வடமராட்சியில் வியாபாரிமூலையில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் ஞானகுரு அருலம்பலம் சுவாமிகளின் சமாதி கோயிலை,  நண்பர் ரவிவர்மாவுடன்தான் சென்று தரிசித்தேன்.

வடமராட்சிக்கு சென்றால், புலோலியில் வசிக்கும் எனது பெறாமகள் வீட்டில் தங்கியிருப்பேன்.  நண்பர் ரவிவர்மாவுக்கு தகவல் சொன்னால், உடனே ஒரு ஓட்டோவுடன் வந்து அழைத்துச்செல்வார். இவருடன் அந்தப்பிரதேசத்தைச்சேர்ந்த நான் ஆழமாக நேசிக்கும் கலை,  இலக்கியவாதிகளை பார்த்துவிடுவேன்.

ஒரு நாள் பொழுது அதற்காகவே செலவாகிவிடும்.  ரவிவர்மாவுடன் கலை, இலக்கியம், ஊடகம் , சமூகம், அரசியல் குறித்தெல்லாம் பேசுவதற்கு நிறைய விடயங்கள் எப்போதுமிருக்கும்.

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் தினகரன் முன்னாள் ஆசிரியருமான ( அமரர் ) ராஜஶ்ரீகாந்தன் எனக்கு அறிமுகப்படுத்திய பலருள் ரவிவர்மாவும் முக்கியமானவர். முன்னர் வீரகேசரியிலும் பணியாற்றியவர். அதன்பிறகு சிறிது காலம் சுதந்திர ஊடகராக இயங்கிய இவர் தற்போது கடந்த அந்து மாதங்களாக காலமாக வடமராட்சியிலிருந்து வெளியாகும் தீம்புனல் வார இதழின் ஆசிரிய பீடத்தில் இணைந்திருக்கிறார். தொடர்ந்தும் எழுதுகிறார்.

65 வயதினை எட்டியிருக்கும் ரவிவர்மா அவர்களை வாழ்த்துகின்ற இச்சந்தர்ப்பத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், அவர் வெளியிட்ட  வடக்கே போகும் ரயில் என்ற கதைத் தொகுதிக்கு நான் எழுதிய ஆசியுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில் பாரதி, வ.வே.சு. அய்யர் முதல்  தற்பொழுது எழுதும் இமையம் வரையிலும் – இலங்கையில்  சம்பந்தன், வயித்திலிங்கம், இலங்கையர்கோன் முதல் இன்று எழுதும்  சமரபாகு சீனா  உதயகுமார் வரையிலும் - புகலிடத்தில்  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதல் நடேசன் வரையிலும் தொடர்ந்து இவர்களும் இவர்களுக்கு இடைப்பட்டவர்களும்  எழுதிய – எழுதிவரும் சிறுகதைகளை படித்து வருகின்றேன்.

நானும் ஒரு சிறுகதை எழுத்தாளனாகவே இலக்கியப்பிரவேசம் (1972 இல்)  செய்திருக்கின்றேன். எழுத்தாளர்களின் வரிசையில் பத்திரிகையாளர்கள்,  கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள்,  விமர்சகர்கள், நாடகாசிரியர்கள், திரைக் கதையாசிரியர்கள் இடம்பெறுகின்றனர்.

பாரதியின் சின்னச் சங்கரன் கதையையும் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரத்தையும் படித்தவர்களுக்கு, இன்றைய தமிழக சிறுகதைகளின்  போக்கு – உள்ளடக்கம் – உருவம் என்பன பற்றிய துல்லியமான  பார்வை  இருப்பது போன்று, இலங்கை மற்றும் புகலிட சிறுகதைகளை  தொடர்ந்து படிப்பவர்களுக்கும் இருக்கலாம்.

பத்திரிகையாளராக இருந்து படைப்பாளியானவர்களினதும் படைப்பாளியாக  இருந்து பத்திரிகையாளராக மாறியவர்களினதும் உரைநடையில்  நாம்  வித்தியாசங்களைக்காணலாம்.

நான்  அறிந்தவரையில் இலங்கையில் படைப்பாளியாக வாழ்ந்த சிலர்  முழுநேர பத்திரிகையாளராக மாறியதும் அவர்களின் சிறுகதை முயற்சிகளில் தேக்கம் வந்திருக்கிறது. சில வேளைகளில் அவர்களின்  சிறுகதைகள் நடைச்சித்திரமாகவும் கட்டுரையாகவும் மாறியிருக்கின்றன.

ஒவ்வொரு சிறுகதை எழுத்தாளருக்கும் வாழ்வின் தரிசனங்கள்தான் அவர்கள் எழுதும் சிறுகதைப் படைப்புகள். தாம் சந்தித்த  மனிதர்கள், அவர்களின் குண    இயல்புகள், காணும் காட்சிகள் , மனதை பாதித்த சம்பவங்கள், சூழல் மாற்றங்கள் என்பனவெல்லாம்  அவர்களின் கதைகளுக்கு கருவாகவும் களமாகவும் உருவாகிவிடுகின்றன.

ஆனால் – அவர்களினால் படைக்கப்பட்ட பாத்திரம், அவர்களின் கண்முன்னால்  அல்லது அவர்கள்  சொன்னதன் பின்னர் எமது கண்களின் முன்னால் நடமாடலாம். எனினும் அந்தப்பாத்திரத்திற்குரிய நபருக்கு அந்த விடயம் தெரிந்திருக்காது.

யாராவது  சொன்னால்தான் தெரியவரும்.

ரவிவர்மா  பத்திரிகையாளராகவும் பணியாற்றியவாறு  வீரகேசரி, ஞானம் , மல்லிகை முதலான இதழ்களில்  சிறுகதைகளும் எழுதிய படைப்பாளி.

அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த எனது நண்பர் (அமரர்) ராஜ ஸ்ரீகாந்தன் ஒரே சமயத்தில் சிறுகதை எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விமர்சகராகவும்  பயணித்தவர்.

தினகரன்  பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்புக்கு ராஜஸ்ரீகாந்தன்  வந்த பின்னர் சிறுகதைகள் எழுதவில்லை.

ஆனால் – ரவிவர்மா வீரகேசரி, மெட்ரோ நியூஸ், சுடரொளி முதலான  பத்திரிகைகளில் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதியவர். 

யார்  இந்த ரவிவர்மா?

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் பாராட்டப்பட்ட வடமராட்சி தேவரையாளி சமூகத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவரும் வடமராட்சி  தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகருமான சூரன் அவர்களின் பேரன்தான் இந்த ரவிவர்மா.

இவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதி வடக்கே போகும் மெயில்.  தமிழ் அபிமானியும் மொழி பெயர்ப்பாளருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தின இந்நூலுக்கும் ரவிவர்மாவுக்கும் அறிமுகம்    எழுதியுள்ளார்.

எனது ஆசியுரையுடனும், கனடாவில் வதியும் திரு.க. நவம் எழுதிய முன்னுரையுடனும் நூலசிரியரின் என்னுரையுடனும் இந்நூல் வெளியானது. 

ரவிவர்மா தொடர்ந்தும் அயராமல் கலை, இலக்கிய ஊடகத்துறையில் பயணிக்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

                                                       முருகபூபதி

No comments: