ஐபிஎல் 2022 தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இந்தியாவுக்காக விளையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அ உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம் வீரர் குல்தீப் யாதவ் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மீண்டும் தனது மாயாஜால சுழல் பந்துவீச்சை கையிலெடுத்து இந்திய அணிக்குள் நுழைவதற்கான அஸ்திரத்தை தொடுத்துள்ளார். இந்த வருடம் டெல்லி கப்பிடல் அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 8.23 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ஊதா தொப்பிக்காக போட்டி போட்டு வருகிறார்.
இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனை படைத்து வருகிறார். இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையையும் சமன் செய்துள்ளார். அவர் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் பதிவு செய்த 4 வெற்றிகளிலும் அவர் மட்டுமே ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார்.
2017இல் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் இந்தியாவிற்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்று 2017 – 2018 போன்ற காலகட்டங்களில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார். ஆனால் இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் குல்தீப்பின் பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தடுமாறி வந்த அவர் மீண்டும் இப்படி சிறப்பாக செயல்படுவதற்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தான் காரணம் என்று அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே தெரிவித்துள்ளார்.
- 2019இல் ஒருசில போட்டிகளில் தடுமாறி நின்ற வேளையில் அவருக்கு அப்போதைய கேப்டனாக இருந்த விராட் கோலி ஆதரவு கொடுக்காததே அவரின் பந்துவீச்சில் மேலும் சரிவு ஏற்படுவதற்கு காரணம் என்றும் கபில் பாண்டே கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“கேப்டன் நம்பிய போதெல்லாம் குல்தீப் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனாலும்கூட அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது” “நல்ல வேளையாக குல்தீப் யாதவின் கேரியரை ரோகித் சர்மா காப்பாற்றியுள்ளார். ரோஹித் தான் குல்தீப் யாதவின் இந்த எழுச்சிக்கு காரணமாவார். அவர் மிகப்பெரிய வீரர்களிடன் திறமையை எவ்வாறு வெளிக்கொணர்வது என்று தெரிந்து வைத்த மகத்தான கேப்டன். குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு முன்பாக குல்தீப் யாதவை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் அவரும் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கையை காப்பாற்றினார்.”
“குல்தீப் யாதவ் கம் பேக் கொடுத்ததற்கான முழு பாராட்டுகளும் ரோகித் சர்மாவை சேரும். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இன்று அவர் இங்கே இருக்க முடியாது. ஒவ்வொரு கேப்டனும் வீரர்களை தேர்வு செய்வதில் வித்தியாசமான ஸ்டைலை கொண்டிருப்பார்கள். அந்த வகையில் விராட் கோலி தலைமையில் குல்தீப் நிறைய விளையாடியுள்ளார் என்றாலும் அவர் எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை தேர்வு செய்ய விரும்பினார்.
அவர் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்தார். குறிப்பாக கணிசமாக பேட்டிங் செய்வார் என்பதற்காக குல்தீப்புக்கு பதில் அக்சர் படேலை அவர் தேர்வு செய்தார். ஆனால் ஒரு கேப்டன் என்பவர் எப்போதும் தனது வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment