Wednesday, May 25, 2022

எம்.பி பதவிக்காக முட்டி மோதும் அதிமுக தலைவர்கள்


   தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 57 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன.  தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் திகதி தி நடைபெறவுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஷ்குமார் ஆகிய ஆறு பேரின் பேர் பதவி காலியாகிறது. தற்போது நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நான்கு  எம்.பி.,க்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு    இரண்டு  எம்.பி.,க்களும் இடம் பெற உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  இரட்டைத் தலைமை வழி நடத்துவதால் கடும் போட்டி நிலவுகிறது.எடப்படி பன்னீர்ச்செல்வத்துக்கு  விருப்பமான ஒருவருக்கும், ஓ.பன்னீர்ச்செல்வத்தின் ஆசியைப் பெற்ற  ஒருவருக்கும் எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த இரண்டு இடங்கலுக்காக மூத்த தலைவர்கள் துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பொன்னையன், சி.வி.சண்முகம், கோகுலஇந்திரா, அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகரன், மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் அபரூபா சுனந்தனி, நடிகை விந்தியா போன்றவர்கள் எம்.பி., பதவி கேட்டு படையெடுக்கின்றனர். வன்னியர், யாதவர், கிறிஸ்துவர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை நிலவுகிறது. எனவே, வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் சி.வி.சண்முகம், ஜே.சி.டி., பிரபாகரன்; யாதவர் சமுதாயத்தினர் மத்தியில் கோகுல இந்திரா, டாக்டர் அபரூபா சுனந்தனி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கிறிஸ்துவர், யாதவர் என்ற இரண்டு தகுதி அடிப்படையில் டாக்டர் அபரூபா சுனந்தனிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இவர் அரசியலுக்கு வரும் முன் அரசு டாக்டராக பணியாற்றினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசியலுக்கு அழைக்கப்பட்டதால், அரசு டாக்டர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வருவதால் அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என, கட்சியின் இரட்டை தலைமையிடம் மருத்துவ அணி நிர்வாகிகள் தரப்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நடிகை விந்தியாவும், சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அவருக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

பல பிரச்சினைகளின் மத்தியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னேற   முயற்சிக்கிறது.  தேர்தல் கால கூட்டணிக் கட்சிகள்  வெளியேறியதால்  இரண்டு எம்பிக்களைப் பெறும் சந்தர்ப்பம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.   திமுகவுக்கு கிடைக்கவுள்ள நான்கு  இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக  தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி நடைபெற இருக்கும் ஆறு மாநிலங்கள் உறுப்பினருக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ் குமார் , கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திச் சேர்ந்த சேர்ந்த வைத்திலிங்கம் ஒரு ஆண்டு பதவி இருந்த நிலையில் இராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த இடத்துக்கு நடந்த தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த  ராஜேஷ்குமார் தேர்வானார். மிக குறைந்த காலமே அவர் எம்.பி.யாக இருந்ததால், அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கும் வகையில் ஒரு இடத்தை அவருக்கு   கொடுக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவரை வேட்பாளராக லைமை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானவர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த கட்சி முன்னோடிகளில் ஒருவரான நாமக்கல் கே.ராமசாமியின் பேரன் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு மிக நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அத்துடன்திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு மிக நெருக்கமானவர் என்பதால் முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரது பதவி காலம் குறுகியதாக இருந்ததால் இப்போது மீண்டும் ராஜ்யசபா எம்.பி. சீட் கிடைத்துள்ளது.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை செயலாளர் என்ற அடிப்படையில் கிரிராஜனுக்கு ஏற்கனவே தேர்தல்களில் போட்டியிட   தலைமை வாய்ப்பு வழங்கி இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி விவகாரங்களை கையாளக் கூடியவர். தற்போதைய அமைச்சர் சேகர்பாபுவுக்கும் மிக நெருக்கமானவர். இந்த அடிப்படையில் விசுவாசத்திற்கான பரிசாக மீண்டும் கிரிராஜனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின்  ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலில் யூகத்தில் இடம்பெறாதவர் தஞ்சை சு.கல்யாணசுந்தரம். 1950களின் இறுதியில் இருந்து கழகத்தின்  தீவிரமான தொண்டராய் கட்சிப் பணி தொடங்கியவர். தமது 19 வயதில் ஆரியபடை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினரானவர். கும்பகோணம் ஊராட்சியின் முதல் பெருந்தலைவராக இருந்தவர் கல்யாணசுந்தரத்தின் தந்தை சுந்தரராஜ். திமுகவில் பல்வேறு கட்சிப் பணிகளை ஆற்றியவர். 1989-ல் மூப்பனாரை எதிர்த்து பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1998-ல் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர். தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். சீனியர் கோட்டாவில் இம்முறை தஞ்சை சு.கல்யாணசுந்தரத்துக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது

தமிழக பதவியை புதுமுகத்திற்கு வழங்க ராகுல் முடிவு செய்துள்ளார். ஆனால், சிதம்பரத்திற்கு வழங்க சோனியா விரும்புகிறார். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற தீர்மானத்தை, சிந்தனையாளர் மாநாட்டில் நிறைவேற்றி உள்ளதால், கார்த்தி சிதம்பரம் எம்.பி.,யாக இருப்பதால், சிதம்பரத்திற்கு பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'டில்லியில் முகாமிட்டாலும், தனி விமானத்தில் பறந்து வந்தாலும், அவர்களுக்கு முன்னுரிமை கிடையாது; உழைத்தவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்' என, ராகுல் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் யார் கட்சிக்காக உழைத்தனர் என்ற அறிக்கையை, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம், ராகுல் கேட்டுள்ளார்.

அவர் அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து, இறுதியாக வேட்பாளர் யார் என்பதை சோனியா, ராகுல் முடிவு செய்து, அறிவிக்க உள்ளனர். அவர்களின் அறிவிப்பு பட்டியலில் சிதம்பரம் இடம் பெறுவாரா அல்லது புதுமுகத்திற்கு வாய்ப்பா என்ற கேள்வி அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.

No comments: