Monday, May 30, 2022

மெல்போர்னை மிஞ்சிய அஹமதாபாத்

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த வருடம் குஜராத், லக்னோ ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்ற 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் கடந்த 65 நாட்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளை கடந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் மே 29-ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெற்றது.

புதிதாக கட்டப்பட்டுள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் திருவிழாவைப் போல நடைபெற்றது.  ஏஆர் ரகுமான், ரன்பீர் கபூர் போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்ற நிறைவு விழாவும் இந்த மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

 ஐபிஎல் 15 வருடங்களை தொட்டுள்ளதை கொண்டாடும் வகையில் 66 மீட்டர் நீளம் 42 மீற்றர் அகலம் கொண்ட பிரம்மாண்ட செய்தியை வெளியிட்ட பிசிசிஐ உலகிலேயே மிகப்பெரிய ஜெர்சியை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்தது.

1,04,859 ரசிகர்கள் இந்த மாபெரும் இறுதிப் போட்டியை பார்க்க வந்ததாக ஐபிஎல் நிர்வாகம் போட்டியின் இடையே அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த சர்வதேச அல்லது முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்கள் பார்த்த ஒரு வெள்ளை பந்து போட்டியாக ஐபிஎல் 2022 தொடர் புதிய பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் 1,00,024 அமர்ந்து பார்க்கக் கூடிய அவுஸ்திரேலியாவில் உள்ள உலக புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1,00,022 ரசிகர்கள் பார்த்த ஒரு உலக கோப்பை போட்டியே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை மிஞ்சும் வகையில் 1,32,000 ரசிகர்கள் பார்க்கக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில்   1,04,859 ரசிகர்கள் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியைப் பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது .


No comments: